தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : மூலத்தானநாதர், சபாநாயகர்;
அம்பாள் : சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
பனைக்கை மும்மத
வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங்
கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம்
அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு
தும்மறந் துய்வனோ. 1
தீர்த்த னைச்சிவ
னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத
லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள்
செய்த சிற்றம்பலக்
கூத்த னைக்கொடி
யேன்மறந் துய்வனோ. 2
கட்டும் பாம்புங்
கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு
காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை
யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு
தும்மறந் துய்வனோ. 3
மாணி பால்கறந்
தாட்டி வழிபட
நீணு லகெலாம்
ஆளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன்
அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி
யேன்மறந் துய்வனோ. 4
பித்த னைப்பெருங்
காடரங் காவுடை
முத்த னைமுளை
வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன்
அம்பலத் துள்நின்ற
அத்த னையடி
யேன்மறந் துய்வனோ. 5
நீதி யைநிறை
வைமறை நான்குடன்
ஓதி யையொரு
வர்க்கு மறிவொணாச்
சோதி யைச்சுடர்ச்
செம்பொனின் அம்பலத்
தாதி யையடி
யேன்மறந் துய்வனோ. 6
மைகொள் கண்டனெண் டோ
ளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை
யார்த்த பரமனார்
செய்ய மாதுறை
சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி
யேன்மறந் துய்வனோ. 7
முழுதும் வானுல
கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந்
தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற்
றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந்
தெங்ஙனம் உய்வனோ. 8
காரு லாமலர்க்
கொன்றையந் தாரனை
வாரு லாமுலை
மங்கை மணாளனைத்
தேரு லாவிய
தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாவமு
தைமறந் துய்வனோ. 9
ஓங்கு மால்வரை
ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற
ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல்
சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட
னேன்மறந் துய்வனோ. 10
திருச்சிற்றம்பலம்