தலம் : அதிகை வீரட்டானம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : நடுநாடு
சுவாமி : வீரட்டானேஸ்வரர்;
அம்பாள் : திரிபுரசுந்தரி.
திருச்சிற்றம்பலம்
எட்டு நாண்மலர்
கொண்டவன் சேவடி
மட்ட லரிடு
வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந்
தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி
சேரு மவருக்கே. 1
நீள மாநினைந்
தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை
யுங்குறை விப்பரால்
வாள மாலிழி
யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ
காய வீரட்டரே. 2
கள்ளின் நாண்மல
ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர்
வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல்
பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி
மேனிவீ ரட்டரே. 3
பூங்கொத் தாயின
மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர்
வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல்
பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை
யாடைவீ ரட்டரே. 4
தேனப் போதுகள்
மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு
வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல்
பாய்கெடி லக்கரை
வேன லானை
யுரித்தவீ ரட்டரே. 5
ஏழித் தொன்மலர்
கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை
யோட அகற்றுவார்
பாழித் தண்புனல்
பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி
போர்த்தவீ ரட்டரே. 6
உரைசெய் நூல்வழி
யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு
வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி
யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ
காயவீ ரட்டரே. 7
ஓலி வண்டறை
யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த
வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி
யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ
காயவீ ரட்டரே. 8
தாரித் துள்ளித்
தடமல ரெட்டினாற்
பாரித் தேத்தவல்
லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்டிரை
பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை
வேய்ந்தவீ ரட்டரே. 9
அட்ட புட்பம்
அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி
அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய்
கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி
சேரு மவர்களே. 10
திருச்சிற்றம்பலம்