05.078 சங்கு லாமுன்கைத்

தலம் : கோடிகா
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : கோடீஸ்வரர்;
அம்பாள் : வடிவாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

சங்கு லாமுன்கைத்
தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத
வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற்
கோடிகா வாவென
எங்கி லாததோர்
இன்பம்வந் தெய்துமே. 1

வாடி வாழ்வதென்
னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை
உள்கிநீர் நாடொறுங்
கோடி காவனைக்
கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற்
பட்டுக் கழிதிரே. 2

முல்லை நன்முறு
வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத்
தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர்
கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க்
கூனமொன் றில்லையே. 3

நாவ ளம்பெறு
மாறும னன்னுதல்
ஆம ளஞ்சொலி
அன்புசெ யின்னலாற்
கோம ளஞ்சடைக்
கோடிகா வாவென
ஏவ ளின்றெனை
ஏசுமவ் வேழையே. 4

வீறு தான்பெறு
வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை
தான்மிக நல்கானேற்
கூறு வேன்கோடி
காவுளாய் என்றுமால்
ஏறு வேனும்மால்
ஏசப் படுவனோ. 5

நாடி நாரணன்
நான்முகன் வானவர்
தேடி யேசற
வுந்தெரி யாததோர்
கோடி காவனைக்
கூறாத நாளெலாம்
பாடி காவலிற்
பட்டுக் கழியுமே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

வரங்க ளால்வரை
யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி
யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற்
கோடிகா வாவென
இரங்கு வேன்மனத்
தேதங்கள் தீரவே. 10

திருச்சிற்றம்பலம்