05.079 வெள்ளெ ருக்கர

தலம் : புள்ளிருக்குவேளூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : வைத்தியநாதர்;
அம்பாள் : தையல்நாயகி.

திருச்சிற்றம்பலம்

வெள்ளெ ருக்கர
வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே
ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு
முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர்
நரகக் குழியிலே. 1

மாற்ற மொன்றறி
யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக்
கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற்
புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின
தேய்ந்தறுங் காண்மினே. 2

அரும றையனை
ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக
வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப்
புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர்
உள்ளங் குளிருமே. 3

தன்னு ருவை
யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை
மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப்
புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க்
கில்லை யிடர்களே. 4

செங்கண் மால்பிர
மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு
வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப்
புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை
வாழ்த்த வருமின்பே. 5

குற்ற மில்லியைக்
கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ்
செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப்
புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர்
பாவம் பறையுமே. 6

கையி னோடுகால்
கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன்
என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன்
புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய
கண்டனை வாழ்த்துமே. 7

உள்ளம் உள்கி
உகந்து சிவனென்று
மெள்ள வுள்க
வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி
புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம்
வணங்கித் தொழுமினே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 9

அரக்க னார்தலை
பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப்
பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை
புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு
வார்வினை வீடுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10

திருச்சிற்றம்பலம்