02.026 புடையி னார்புள்ளி

தலம் : நெல்வாயில்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : உச்சிநாதேஸ்வரர்;
அம்பாள் : கனகாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

புடையி னார்புள்ளி
கால்பொ ருந்திய
மடையி னார்மணி
நீர்நெல் வாயிலார்
நடையில் நால்விரற்
கோவ ணந்நயந்
துடையி னாரெம
துச்சி யாரே. 1

வாங்கி னார்மதில்
மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை
யாய தன்மையர்
நீங்கு நீரநெல்
வாயி லார்தொழ
ஓங்கி னாரெம
துச்சி யாரே. 2

நிச்ச லேத்தும்நெல்
வாயி லார்தொழ
இச்சை யாலுறை
வாரெம் மீசனார்
கச்சை யாவதோர்
பாம்பி னார்கவின்
இச்சை யாரெம
துச்சி யாரே. 3

மறையி னார்மழு
வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை
யோடி லங்கிய
நிறையி னாரநெல்
வாயிலார் தொழும்
இறைவ னாரெம
துச்சி யாரே. 4

விருத்த னாகிவெண்
ணீறு பூசிய
கருத்த னார்கன
லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல்
வாயில் மேவிய
ஒருத்த னாரெம
துச்சி யாரே. 5

காரி னார்கொன்றைக்
கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை
யோடி லங்கிய
நீரி னாரநெல்
வாயிலார் தொழும்
ஏரி னாரெம
துச்சி யாரே. 6

ஆதி யாரந்த
மாயி னார்வினை
கோதி யார்மதில்
கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல்
வாயி லார்மறை
ஓதி யாரெம
துச்சி யாரே. 7

பற்றி னான்அரக்
கன்க யிலையை
ஒற்றி னாரொரு
கால்வி ரலுற
நெற்றி யாரநெல்
வாயி லார்தொழும்
பெற்றி யாரெம
துச்சி யாரே. 8

நாடி னார்மணி
வண்ணன் நான்முகன்
கூடி னார்குறு
காத கொள்கையர்
நீடி னாரநெல்
வாயி லார்தலை
ஓடி னாரெம
துச்சி யாரே. 9

குண்ட மண்துவர்க்
கூறை மூடர்சொல்
பண்ட மாகவை
யாத பண்பினர்
விண்ட யங்குநெல்
வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம்
உச்சி யாரே. 10

நெண்ப யங்குநெல்
வாயி லீசனைச்
சண்பை ஞானசம்
பந்தன் சொல்லிவை
பண்ப யன்கொளப்
பாட வல்லவர்
விண்ப யன்கொளும்
வேட்கை யாளரே. 11

திருச்சிற்றம்பலம்