02.003 பூவ லர்ந்தன கொண்டுமுப்

தலம் : தெளிச்சேரி
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : பார்வதீசுவரர்;
அம்பாள் : சத்தியம்மை.

திருச்சிற்றம்பலம்

பூவ லர்ந்தன கொண்டுமுப்
போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு
மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு
கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது
போலுநும் பான்மையே. 1

விளைக்கும் பத்திக்கு விண்ணவர்
மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத
திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து
பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙனம்
நீர்கண்ணிற் காய்ந்ததே. 2

வம்ப டுத்தமலர்ப் பொழில்
சூழமதி தவழ்
செம்ப டுத்தசெழும் புரிசைத்
தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல
விடைமிசை கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு
மேவல் அழகிதே. 3

காரு லாங்கட இப்பிகள்
முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய
தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட
வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர்
பாகத்து வைத்ததே. 4

பக்க நுந்தமைப் பார்ப்பதி
யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில்
சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை
மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும்
பலிக்கு நடப்பதே. 5

தவள வெண்பிறை தோய்தரு
தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந்
திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென
வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙனம்
நீர்கையிற் காய்ந்ததே. 6

கோட டுத்த பொழிலின்
மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின்
மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்த மலர்க்கண்ணி
னாள்கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை
யென்கொல்நீர் சூடிற்றே. 7

கொத்தி ரைத்த மலர்க்குழ
லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை
சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல
அரக்கன் விறல்தலை
பத்தி ரட்டிக் கரம்நெரித்
திட்டதும் பாதமே. 8

காலெ டுத்த திரைக்கை
கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல
ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙனம்
ஓருருக் கொண்டதே. 9

மந்தி ரந்தரு மாமறை
யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர்
சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய
ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித்
தீரோர் சதிரரே. 10

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச்
சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம்
பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ
இருப்பவர் சொல்லிலே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 11

திருச்சிற்றம்பலம்