02.005 நீடல் மேவுநிமிர்

தலம் : அநேகதங்காவதம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : வடநாடு
சுவாமி : அருள்மன்னர்;
அம்பாள் : மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்

நீடல் மேவுநிமிர் புன்சடை
மேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை
யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய
அனேகதங் காவதம்
பாடல் மேவுமனத் தார்வினை
பற்றறுப் பார்களே. 1

சூல முண்டுமழு வுண்டவர்
தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன்
அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை
பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை
குலாவிய கொள்கையே. 2

செம்பி னாருமதில் மூன்றெரி
யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி
யனேகதங் காவதங்
கொம்பின் நேரிடை யாளொடுங்
கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமநவி லாதன
நாவென லாகுமே. 3

தந்தத் திந்தத்தட மென்றரு
வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்தவெந்த கதிரோனொடு
மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல
அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி
வார்க்கிட மாவதே. 4

பிறையு மாசில்கதி ரோன்அறி
யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில் பசும்பொன்
னணியார் அசும்பார்புனல்
அறையும் ஓசைபறை போலும்
அனேகதங் காவதம்
இறையெம் மீசனெம் மானிட
மாகவு கந்ததே. 5

தேனை யேறுநறு மாமலர்
கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல்
அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண
ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள்
செய்வதும் வானையே. 6

வெருவி வேழம்இரி யக்கதிர்
முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி
யாவகி லுந்திவெள்
அருவி பாயுமணி சாரல்
அனேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல்
சேர்வது வாய்மையே. 7

ஈர மேதுமில னாகி
யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக
விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்றன்
அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை
யாயின மாயுமே. 8

கண்ணன் வண்ணமல ரானொடுங்
கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ
ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல்
அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை
யாயின நாசமே. 9

மாப தம்மறி யாதவர்
சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு
மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி
ராகில் அனேகதங்
காப தம்மமர்ந் தான்கழல்
சேர்தல் கருமமே. 10

தொல்லை யூழிப்பெயர் தோன்றிய
தோணி புரத்திறை
நல்ல கேள்வித்தமிழ் ஞானசம்
பந்தன்நல் லார்கள்முன்
அல்லல் தீரவுரை செய்த
அனேகதங் காவதம்
சொல்ல நல்லஅடையும்
அடையாசுடு துன்பமே.

இத்தலம் வடதேசத்திலுள்ளது. 11

திருச்சிற்றம்பலம்