02.020 தொழுமா றுவல்லார்

தலம் : அழுந்தூர்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : வேதபுரீசுவரர்;
அம்பாள் : சௌந்தராம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

தொழுமா றுவல்லார்
துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார்
இசைபாட விம்மி
அழுமா றுவல்லார்
அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா
மடம்மன் னினையே. 1

கடலே றியநஞ்
சமுதுண் டவனே
உடலே உயிரே
உணர்வே யெழிலே
அடலே றுடையாய்
அழுந்தை மறையோர்
விடலே தொழமா
மடம்மே வினையே. 2

கழிகா டலனே
கனலா டலினாய்
பழிபா டிலனே
யவையே பயிலும்
அழிபா டிலராய்
அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா
மடம்மன் னினையே. 3

வானே மலையே
யெனமன் னுயிரே
தானே தொழுவார்
தொழுதாள் மணியே
ஆனே சிவனே
அழுந்தை யவரெம்
மானே யெனமா
மடம்மன் னினையே. 4

அலையார் புனல்சூழ்
அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும்
நிறைவெண் மழுவும்
இலையார் படையும்
மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள்
கெனநீ நினையே. 5

நறவார் தலையின்
நயவா வுலகில்
பிறவா தவனே
பிணியில் லவனே
அறையார் கழலாய்
அழுந்தை மறையோர்
மறவா தெழமா
மடம்மன் னினையே. 6

தடுமா றுவல்லாய்
தலைவா மதியம்
சுடுமா றுவல்லாய்
சுடரார் சடையில்
அடுமா றுவல்லாய்
அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை
தொழநின் றனையே. 7

பெரியாய் சிறியாய்
பிறையாய் மிடறும்
கரியாய் கரிகா
டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய்
அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா
மடம்மே வினையே. 8

மணிநீள் முடியான்
மலையை அரக்கன்
தணியா தெடுத்தான்
உடலந் நெரித்த
அணியார் விரலாய்
அழுந்தை மறையோர்
மணிமா மடம்மன்
னியிருந் தனையே. 9

முடியார் சடையாய்
முனநா ளிருவர்
நெடியான் மலரான்
நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார்
அழுந்தை மறையோர்
படியாற் றொழமா
மடம்பற் றினையே. 10

அருஞா னம்வல்லார்
அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப்
பெருமா னவனைத்
திருஞா னசம்பந்
தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம்
உணர்ந்தார் தமக்கே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது; 11

திருச்சிற்றம்பலம்