தலம் : சாய்க்காடு
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : இரத்தின சாயாவனேஸ்வரர்;
அம்பாள் : குயிலினும் நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
நித்தலுந் நியமஞ்
செய்துநீர் மலர்தூவிச்
சித்தமொன் றவல்லார்க்
கருளுஞ் சிவன்கோயில்
மத்தயா னையின்கோ
டும்வண்பீ லியும்வாரி
தத்துநீர்ப் பொன்னி
சாகரமேவு சாய்க்காடே. 1
பண்டலைக் கொண்டு
பூதங்கள் பாடநின்றாடும்
வெண்டலைக் கருங்கா
டுறைவே தியன்கோயில்
கொண்டலைத் திகழ்பே
ரிமுழங் கக்குலாவித்
தண்டலைத் தடமா
மயிலாடு சாய்க்காடே. 2
நாறுகூ விளநா
கிளவெண் மதியத்தோ(டு)
ஆறுசூ டும்அம
ரர்பிரா னுறைகோயில்
ஊறுதேங் கனிமாங்
கனியோங் கியசோலைத்
தாறுதண் கதலிப்
புதல்மேவு சாய்க்காடே. 3
வரங்கள்வண் புகழ்மன்
னியஎந்தை மருவார்
புரங்கள்மூன் றும்பொடி
படஎய் தவன்கோயில்
இரங்கலோ சையுமீட்
டியசரத் தொடுமீண்டித்
தரங்கநீள் கழித்தண்
கரைவைகு சாய்க்காடே. 4
ஏழைமார் கடைதோ
றுமிடு பலிக்கென்று
கூழைவா ளரவாட்
டும்பிரா னுறைகோயில்
மாழையொண் கண்வளைக்
கைநுளைச் சியர்வண்பூந்
தாழைவெண் மடற்கொய்து
கொண்டாடு சாய்க்காடே. 5
துங்கவா னவர்சூழ்
கடல்தாம் கடைபோதில்
அங்கொர்நீ ழலளித்
தஎம்மா னுறைகோயில்
வங்கம்அங் கொளிர்இப்
பியுமுத் துமணியுஞ்
சங்கும்வா ரித்தடங்
கடலுந்து சாய்க்காடே. 6
வேதநா வினர்வெண்
பளிங்கின் குழைக்காதர்
ஓதநஞ் சணிகண்
டருகந் துறைகோயில்
மாதர்வண் டுதன்கா
தல்வண்டா டியபுன்னைத்
தாதுகண் டுபொழில்
மறைந்தூடு சாய்க்காடே. 7
இருக்குநீள் வரைபற்
றியடர்த் தன்றெடுத்த
அரக்கன் ஆகம்நெரித்
தருள்செய் தவன்கோயில்
மருக்குலா வியமல்
லிகைசண் பகம்வண்பூந்
தருக்குலா வியதண்
பொழில்நீடு சாய்க்காடே. 8
மாலினோ டயன்காண்
டற்கரி யவர்வாய்ந்த
வேலையார் விடமுண்
டவர்மே வியகோயில்
சேலின்நேர் விழியார்
மயிலா லச்செருந்தி
காலையே கனகம்
மலர்கின்ற சாய்க்காடே. 9
ஊத்தைவாய்ச் சமண்கை
யர்கள்சாக் கியர்க்கென்றும்
ஆத்தமா கஅறி
வரிதா யவன்கோயில்
வாய்த்தமா ளிகைசூழ்
தருவண் புகார்மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்
துபொலிந்த சாய்க்காடே. 10
ஏனையோர் புகழ்ந்தேத்
தியஎந்தை சாய்க்காட்டை
ஞானசம் பந்தன்கா
ழியர்கோன் நவில்பத்தும்
ஊனமின் றியுரை
செயவல் லவர்தாம்போய்
வானநா டினிதாள்
வர்இம்மா நிலத்தோரே. 11
திருச்சிற்றம்பலம்