04.008 சிவனெனு மோசையல்ல

தலம் : பொது
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : பியந்தைக்காந்தாரம்
நாடு : பொது
சிறப்பு: சிவனெனுமோசை

திருச்சிற்றம்பலம்

சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்
றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ
ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்
கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு
மகநேர்வர் தேவ ரவரே. 1

விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
விதியல்லர் விண்ணு நிலனுந்
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்
தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக
அருள்கார ணத்தில் வருவார்
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்
இமைப்பாரு மல்லர் இவரே. 2

தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலொர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
கரிகாடர் காலொர் கழலர்
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய
மழுவீசி வேழவுரி போர்த்
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்
இதுதா னிவர்க்கொ ரியல்பே. 3

வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி
வடிதோலும் நூலும் வளரக்
கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்
கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய
லவள்தோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி
யுளள்போல் குலாவி யுடனே. 4

உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்
விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச
ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை
பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை
கடவா தமர ருலகே. 5

கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி
கழல்கால் சிலம்ப அழகார்
அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண
மியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை
மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்
அவர்வண்ண வண்ணம் அழலே. 6

நகைவளர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்
நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல
கறைகொள் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு
மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு
மிதுபோலும் ஈச ரியல்பே. 7

ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற
னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேடமுண்டொர் கடமா வுரித்த
உடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக
எழில்வேத மோது மவரே. 8

மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை
மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த
அழல்நஞ்ச முண்ட வவரே. 9

புதுவிரி பொன்செயோலை யொருகாதொர் காது
சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடு மோத
மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்
குழல்பாக மாக வருவர்
இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்
எழில்வண்ண வண்ண மியல்பே. 10

திருச்சிற்றம்பலம்