04.017 எத்தீ புகினும்

தலம் : ஆரூர் அரநெறி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : அகிலேஸ்வரர்;
அம்பாள் : வண்டார் குழலி.

திருச்சிற்றம்பலம்

எத்தீ புகினும்
எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன்
றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதொர்
மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தார்
அரநெறி யாரே. 1

வீரமும் பூண்பர்
விசயனொ டாயதொர்
தாரமும் பூண்பர்
தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற்
பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர்
அரநெறி யாரே. 2

தஞ்சவண் ணத்தர்
சடையினர் தாமுமொர்
வஞ்சவண் ணத்தர்வண்
டார்குழ லாளொடுந்
துஞ்சவண் ணத்தர்துஞ்
சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர்
அரநெறி யாரே. 3

விழித்தனர் காமனை
வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை
யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ்
கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர்
அரநெறி யாரே. 4

துற்றவர் வெண்டலை
யிற்சுருள் கோவணந்
தற்றவர் தம்வினை
யானவெல் லாமற
அற்றவர் ஆரூர்
அரநெறி கைதொழ
உற்றவர் தாமொளி
பெற்றனர் தாமே. 5

கூடர வத்தர்
குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன்
மாலை யிடையிருள்
பாடர வத்தர்
பணமஞ்சு பைவிரித்
தாடர வத்தர்
அரநெறி யாரே. 6

கூடவல் லார்குறிப்
பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின்
றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு
வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை
வீடவல் லாரே. 7

பாலை நகுபனி
வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு
மாவன சேவடி
காலையு மாலையுங்
கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர்
அரநெறி யார்க்கே. 8

முடிவண்ணம் வானமின்
வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ணந் தம்புக
ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல்
வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர்
அரநெறி யார்க்கே. 9

பொன்னவில் புன்சடை
யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள்
காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர்
வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர்
அரநெறி யாரே. 10

பொருள்மன் னனைப்பற்றிப்
புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி
வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங்
கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர்
அரநெறி யாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 11

திருச்சிற்றம்பலம்