கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்
75) மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2)
76) பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி.
77) பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி.
78) தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி.
79) புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி பற்பநாபா! கொட்டாய்சப்பாணி.
80) தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி.
81) பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே! சப்பாணி.
82) குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே! சப்பாணி.
83) அளந்திட்டதூணை அவன்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.
84) அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே! சப்பாணி.
85) ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2)

[…] ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி […]