ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

பாஞ்சஜன்னியத்தைப் பத்பநாபனோடுஞ் சுற்றமாக்குதல்

567 கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ?
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்தமாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும்
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2) 1

568 கடலில்பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத்
திடரில் குடியேறித் தீயவசுரர்
நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே. 2

569 தடவரையின்மீதே சரற்காலசந்திரன்
இடையுவாவில்வந்து எழுந்தாலேபோல் நீயும்
வடமதுரையார்மன்னன் வாசுதேவன்கையில்
குடியேறிவீற்றிருந்தாய் கோலப்பெருஞ்சங்கே! 3

570 சந்திரமண்டலம்போல் தாமோதரன்கையில்
அந்தரமொன்றின்றி ஏறியவன்செவியில்
மந்திரங்கொள்வாயேபோலும் வலம்புரியே
இந்திரனுமுன்னோடு செல்வத்துக்கேலானே. 4

571 உன்னோடுடனே ஒருகடலில்வாழ்வாரை
இன்னாரினையாரென்று எண்ணுவாரில்லைகாண்
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம்
பன்னாளுமுண்கின்றாய் பாஞ்சசன்னியமே! 5

572 போய்த்தீர்த்தமாடாதே நின்றபுணர்மருதம்
சாய்த்தீர்த்தான்கைத்தலத்தே ஏறிக்குடிகொண்டு
சேய்த்தீர்தமாய்நின்ற செங்கண்மால்தன்னுடய
வாய்த்தீர்த்தம்பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே! 6

573 செங்கமலநாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
செங்கண்கருமேனி வாசுதேவனுடய
அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும்
சங்கரையா! உன்செல்வம் சாலவழகியதே. 7

574 உண்பதுசொல்லில் உலகளந்தான்வாயமுதம்
கண்படைகொள்ளில் கடல்வண்ணன்கைத்தலத்தே
பெண்படையாருன்மேல் பெரும்பூசல்சாற்றுகின்றார்
பண்பலசெய்கின்றாய் பாஞ்சசன்னியமே! 8

575 பதினாறாமாயிரவர் தேவிமார்பார்த்திருப்ப
மதுவாயில்கொண்டாற்போல் மாதவன்றன்வாயமுதம்
பொதுவாகவுண்பதனைப் புக்குநீயுண்டக்கால்
சிதையாரோ? உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே! 9

576 பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப்பட்டர்பிரான் கோதைதமிழீரைந்தும்
ஆய்ந்தேத்தவல்லாரவரு மணுக்கரே. (2) 10

1 thought on “ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ”

Leave a Reply