மூன்றாம் திருமொழி -கோழியழைப்பதன்

கன்னியர் கண்ணன் கவர்ந்த கூறைகளை இரத்தல்

524 கோழியழைப்பதன் முன்னம் குடைந்துநீராடுவான்போந்தோம்
ஆழியஞ்செல்வனெழுந்தான் அரவணைமேல்பள்ளிகொண்டாய்
ஏழைமையாற்றவும்பட்டோம் இனியென்றும் பொய்கைக்குவாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே. (2) 1

525 இதுவென் புகுந்ததிங்கந்தோ! இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்?
மதுவின்துழாய்முடிமாலே! மாயனே! எங்களமுதே?
விதியின்மையாலது மாட்டோம் வித்தகப்பிள்ளாய்! விரையேல்
குதிகொண் டரவில்நடித்தாய்! குருந்திடைக்கூறைபணியாய். 2

526 எல்லே! ஈதென்னஇளமை? எம்மனைமார்காணிலொட்டார்
பொல்லாங்கீதென்றுகருதாய் பூங்குருந்தேறியிருத்தி
வில்லாலிலங்கை யழித்தாய்! நீ வேண்டியதெல்லாம்தருவோம்
பல்லாருங்காணாமேபோவோம் பட்டைப்பணித்தருளாயே. 3

527 பரக்கவிழித்தெங்கும்நோக்கிப் பலர்குடைந்தாடுஞ்சுனையில்
அரக்கநில்லாகண்ணநீர்கள் அலமருகின்றவாபாராய்
இரக்கமேலொன்றுமிலாதாய்! இலங்கையழித்தபிரானே
குரக்கரசாவதறிந்தோம் குருந்திடைக்கூறைபணியாய். 4

528 காலைக் கதுவிடுகின்ற கயலோடுவாளைவிரவி
வேலைப்பிடித்தென்னைமார்கள் ஓட்டிலென்னவிளையாட்டோ
கோலச்சிற்றாடைபலவுங்கொண்டு நீயேறியிராதே
கோலங்கரியபிரானே! குருந்திடைக்கூறைபணியாய். 5

529 தடத்தவிழ்தாமரைப்பொய்கைத் தாள்களெங்காலைக்கதுவ
விடத்தேளெறிந்தாலேபோல வேதனையாற்றவும்பட்டோம்
குடத்தையெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎங்கோவே
படிற்றையெல்லாம்தவிர்ந்து எங்கள்பட்டைப்பணித்தருளாயே. 6

530 நீரிலேநின்றயர்க்கின்றோம் நீதியல்லாதனசெய்தாய்
ஊரகம்சாலவுஞ் சேய்த்தால் ஊழியெல்லாமுணர்வானே!
ஆர்வமுனக்கேயுடையோம் அம்மனைமார்காணிலொட்டார்
போரவிடாயெங்கள்பட்டைப் பூங்குருந்தேறியிராதே. 7

531 மாமிமார்மக்களேயல்லோம் மற்றுமிங்கெல்லாரும்போந்தார்
தூமலர்க்கண்கள்வளரத் தொல்லையிராத்துயில்வானே
சேமமேலன்றிதுசாலச் சிக்கெனநாமிதுசொன்னோம்
கோமளஆயர்கொழுந்தே! குருந்திடைக்கூறைபணியாய். 8

532 கஞ்சன்வலைவைத்தவன்று காரிருளெல்லில்பிழைத்து
நெஞ்சுதுக்கஞ்செய்யப்போந்தாய் நின்றஇக்கன்னியரோமை
அஞ்சவுரப்பாள்அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபாலுண்ட மசிமையிலீ! கூறைதாராய். 9

533 கன்னியரோடெங்கள்நம்பி கரியபிரான்விளையாட்டை
பொன்னியல்மாடங்கள்சூழ்ந்த புதுவையர்கோன்பட்டன் கோதை
இன்னிசையால்சொன்னமாலை ஈரைந்தும்வல்லவர் தாம்போய்
மன்னியமாதவனோடு வைகுந்தம்புக்கிருப்பாரே. (2) 10

1 thought on “மூன்றாம் திருமொழி -கோழியழைப்பதன்”

Leave a Reply