ஒன்பதாம் திருமொழி – வன்தாளினிணை

தனயன்கான்புகத்தசரதன்புலம்புதல்

730 வன்தாளினிணைவணங்கிவளநகரம்
தொழுதேத்தமன்னனாவான்
நின்றாயை அரியணைமேலிருந்தாயை
நெடுங்கானம்படரப்போகு
என்றாள் எம்மிராமாவோ!
உனைப்பயந்தகைகேசிதஞ்சொற்கேட்டு
நன்றாகநானிலத்தையாள்வித்தேன்
நன்மகனே! உன்னைநானே. (2) 1

731 வெவ்வாயேன்வெவ்வுரைகேட்டுஇருநிலத்தை
வேண்டாதேவிரைந்து வென்றி
மைவாயகளிறொழிந்துதேரொழிந்து
மாவொழிந்துவனமேமேவி
நெய்வாயவேல்நெடுங்கண்நேரிழையும்
இளங்கோவும்பின்புபோக
எவ்வாறுநடந்தனை? எம்மிரமாவோ!
எம்பெருமான்! என்செய்கேனே? 2

732 கொல்லணைவேல்வரிநெடுங்கண்கோசலைதன்
குலமதலாய்! குனிவில்லேந்தும்
மல்லணைந்தவரைத்தோளா! வல்வினையேன்
மனமுருக்கும்வகையேகற்றாய்
மெல்லணைமேல்முன்துயின்றாய்
இன்றினிப்போய்வியன்கானமரத்தின்நீழல்
கல்லணைமேல்கண்டுயிலக்கற்றனையோ?
காகுத்தா! கரியகோவே! 3

733 வாபோகுவாஇன்னம்வந்து
ஒருகால்கண்டுபோமலராள்கூந்தல்
வேய்போலுமெழில்தோளிதன்பொருட்டா
விடையோன்றன்வில்லைச்செற்றாய்!
மாபோகுநெடுங்கானம்வல்வினையேன்
மனமுருக்கும்மகனே! இன்று
நீபோகஎன்னெஞ்சம்இருபிளவாய்ப்
போகாதேநிற்குமாறே! 4

734 பொருந்தார்கைவேல்நுதிபோல்
பரல்பாயமெல்லடிகள்குருதிசோர
விரும்பாதகான்விரும்பிவெயிலுறைப்ப
வெம்பசிநோய்கூர இன்று
பெரும்பாவியேன்மகனே! போகின்றாய்
கேகயர்கோன்மகளாய்ப்பெற்ற
அரும்பாவிசொற்கேட்டஅருவினையேன்
என்செய்கேன்? அந்தோ! யானே. 5

735 அம்மாவென்றுகந்தழைக்கும்ஆர்வச்சொல்
கேளாதே அணிசேர்மார்வம்
என்மார்வத்திடையழுந்தத்தழுவாதே
முழுசாதேமோவாதுச்சி
கைம்மாவின்நடையன்னமென்னடையும்
கமலம்போல்முகமும்காணாது
எம்மானையென்மகனையிழந்திட்ட
இழிதகையேனிருக்கின்றேனே. 6

736 பூமருவுநறுங்குஞ்சிபுஞ்சடையாய்ப்புனைந்து
பூந்துகில்சேரல்குல்
காமரெழில்விழலுடுத்துக்கலனணியாது
அங்கங்களழகுமாறி
ஏமருதோளென்புதல்வன்யானின்று
செலத்தக்கவனந்தான்சேர்தல்
தூமறையீர்! இதுதகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர்நீரே. 7

737 பொன்பெற்றாரெழில்வேதப்புதல்வனையும்
தம்பியையும்பூவைபோலும்
மின்பற்றாநுண்மருங்குல்மெல்லியலென்
மருகிகையும்வனத்தில்போக்கி
நின்பற்றாநின்மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும்நீள்வானில்போக்க
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில்
இனிதாகவிருக்கின்றாயே. 8

738 முன்னொருநாள்மழுவாளிசிலைவாங்கி
அவன்தவத்தைமுற்றும்செற்றாய்
உன்னையுமுன்னருமையையுமுன்மோயின்
வருத்தமும்ஒன்றாகக்கொள்ளாது
என்னையும்என்மெய்யுரையும்மெய்யாகக்
கொண்டுவனம்புக்கஎந்தாய்!
நின்னையேமகனாகப்பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும்நெடுந்தோள்வேந்தே! 9

739 தேன்நகுமாமலர்க்கூந்தல்கௌசலையும்
சுமித்திரையும்சிந்தைநோவ
கூனுருவில்கொடுந்தொழுத்தைசொற்கேட்ட
கொடியவள்தன்சொற்கொண்டு இன்று
கானகமேமிகவிரும்பிநீதுறந்த
வளநகரைத்துறந்து நானும்
வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
மனுகுலத்தார்தங்கள்கோவே! 10

740 ஏரார்ந்தகருநெடுமால்இராமனாய்
வனம்புக்கஅதனுக்காற்றா
தாரர்ந்ததடவரைத்தோள்தயரதன்தான்
புலம்பியஅப்புலம்பல்தன்னை
கூரார்ந்தவேல்வலவன்கோழியர்கோன்
குடைக்குலசேகரஞ்சொற்செய்த
சீரார்ந்ததமிழ்மாலையிவைவல்லார்
தீநெறிக்கண்செல்லார்தாமே. (2) 11

1 thought on “ஒன்பதாம் திருமொழி – வன்தாளினிணை”

Leave a Reply