01.062 நாளாய போகாமே

தலம் : கோளிலி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : கோளிலிநாதர்;
அம்பாள் : வண்டமர்பூங்குழலி

திருச்சிற்றம்பலம்

நாளாய போகாமே
நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங்
கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்குமவன்
கோளிலியெம் பெருமானே. 1

ஆடரவத் தழகாமை
அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன்
துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று
பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்
கோளிலியெம் பெருமானே. 2

நன்றுநகு நாண்மலரால்
நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய
லுற்றவன்தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர்
கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழுங்
கோளிலியெம் பெருமானே. 3

வந்தமண லால்இலிங்கம்
மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந்
தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ்
சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான்
கோளிலியெம் பெருமானே. 4

வஞ்சமனத் தஞ்சொடுக்கி
வைகலும்நற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும்
நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப்
பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங்
கோளிலியெம் பெருமானே. 5

தாவியவ1 னுடனிருந்துங்
காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி
அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி
யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற்
கோளிலியெம் பெருமானே.

பாடம் : 1காவியவன் 6

கல்நவிலு மால்வரையான்
கார்திகழு மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான்
தோத்திரஞ்செய்2 வாயினுளான்
மில்நவிலுஞ் செஞ்சடையான்
வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலும் சூலத்தான்
கோளிலியெம் பெருமானே.

பாடம் : 2தோத்திரஞ்சேர், தோத்திரஞ்சொல் 7

அந்தரத்தில் தேரூரும்
அரக்கன்மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால்
ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட
வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக்
கோளிலியெம் பெருமானே. 8

நாணமுடை வேதியனும்
நாரணனும் நண்ணவொணாத்
தாணுஎனை யாளுடையான்
தன்னடியார்க் கன்புடைமை
பாணன்இசை பத்திமையாற்
பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக்
கோளிலியெம் பெருமானே. 9

தடுக்கமருஞ் சமணரொடு
தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரும் மொழிகேளா
தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகந்
நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங்
கோளிலியெம் பெருமானே. 10

நம்பனைநல் அடியார்கள்
நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற்
கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச்
சம்பந்தன் வண்தமிழ்கொண்
டின்பமர வல்லார்க
ளெய்துவர்கள் ஈசனையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply