05.040 வண்ண மும்வடி

திருச்சிற்றம்பலம்

வண்ண மும்வடி
வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க
ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில்
சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி
வானிவள் தன்மையே. 1

மருந்து வானவர்
உய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப்
பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி
சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு
மென்சொற் பழிக்குமே. 2

மழலை தான்வரச்
சொற்றெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி
கூறிய கேண்மினோ
அழக னேகழிப்
பாலையெம் மண்ணலே
இகழ்வ தோயெனை
ஏன்றுகொ ளென்னுமே. 3

செய்ய மேனிவெண்
ணீறணி வான்றனை
மைய லாகி
மதிக்கில ளாரையுங்
கைகொள் வெண்மழு
வன்கழிப் பாலையெம்
ஐய னேஅறி
வானிவள் தன்மையே. 4

கருத்த னைக்கழிப்
பாலையுள் மேவிய
ஒருத்த னையுமை
யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று
கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருளம்
ஊசல தாடுமே. 5

கங்கை யைச்சடை
வைத்து மலைமகள்
நங்கை யையுட
னேவைத்த நாதனார்
திங்கள் சூடித்
திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு
மென்றிறு மாக்குமே. 6

ஐய னேஅழ
கேஅன லேந்திய
கைய னேகறை
சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில்
சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி
யேஅரு ளென்னுமே. 7

பத்தர் கட்கமு
தாய பரத்தினை
முத்த னைமுடி
வொன்றிலா மூர்த்தியை
அத்த னைஅணி
யார்கழிப் பாலையெஞ்
சித்த னைச்சென்று
சேருமா செப்புமே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 9

பொன்செய் மாமுடி
வாளரக் கன்றலை
அஞ்சு நான்குமொன்
றும்மிறுத் தானவன்
என்செ யான்கழிப்
பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போதுந்
துணையென லாகுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10

திருச்சிற்றம்பலம்