தலம் : குரக்குக்கா
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : குந்தளேஸ்வரர்;
அம்பாள் :குந்தளாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
மரக்கொக் காமென
வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித்
திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி
நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை
யக்கெடுங் குற்றமே. 1
கட்டா றேகழி
காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன
லூறு குரக்குக்கா
முட்டா றாவடி
யேத்த முயல்பவர்க்
கிட்டா றாவிட
ரோட எடுக்குமே. 2
கைய னைத்துங்
கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ்
சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங்
கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு
வார்க்கல்ல லில்லையே. 3
மிக்க னைத்துத்
திசையும் அருவிகள்
புக்குக் காவிரி
போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில்
சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில்
வார்வினை நாசமே. 4
விட்டு வெள்ளம்
விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வய
லெங்கும் பரந்திடக்
கொட்ட மாமுழ
வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிருப்
பார்க்கிட ரில்லையே. 5
மேலை வானவ
ரோடு விரிகடல்
மாலும் நான்முக
னாலுமளப் பொணாக்
கோல மாளிகைக்
கோயில் குரக்குக்காப்
பால ராய்த்திரி
வார்க்கில்லை பாவமே. 6
ஆல நீழ
லமர்ந்த அழகனார்
கால னையுதை
கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள்
ஆலும் குரக்குக்காப்
பால ருக்கருள்
செய்வர் பரிவொடே. 7
செக்க ரங்கெழு
செஞ்சுடர்ச் சோதியார்
அக்க ரையரெம்
மாதிபு ராணனார்
கொக்கி னம்வயல்
சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ
நம்வினை நாசமே. 8
உருகி ஊன்குழைந்
தேத்தி யெழுமின்நீர்
கரிய கண்டன்
கழலடி தன்னையே
குரவ னஞ்செழுங்
கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும்
ஏத்தித் தொழுமினே. 9
இரக்க மின்றி
மலையெடுத் தான்முடி
உரத்தை யொல்க
அடர்த்தா னுறைவிடங்
குரக்கி னங்குதி
கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற
வானுல காள்வரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்