தலம் : கானூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : செம்மேனிநாயகர்;
அம்பாள் : சிவயோகநாயகி.
திருச்சிற்றம்பலம்
திருவின் நாதனுஞ்
செம்மலர் மேலுறை
உருவ னாயுல
கத்தி னுயிர்க்கெலாங்
கருவ னாகி
முளைத்தவன் கானூரிற்
பரம னாய
பரஞ்சுடர் காண்மினே. 1
பெண்டிர் மக்கள்
பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென்
றுகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர்
கானூர் முளையினைப்
புண்ட ரீகப்
பொதும்பி லொதுங்கியே. 2
தாயத் தார்தமர்
நன்னிதி யென்னுமிம்
மாயத் தேகிடந்
திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன்
கானூர் முளையினை
வாயத் தால்வணங்
கீர்வினை மாயவே. 3
குறியில் நின்றுண்டு
கூறையி லாச்சமண்
நெறியை விட்டு
நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல்
கானூர் முளையவன்
செறிவு செய்திட்
டிருப்பதென் சிந்தையே. 4
பொத்தல் மண்சுவர்ப்
பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று
வியந்திடேல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள்
சேர்திருக் கானூரில்
அத்தன் பாத
மடைதல் கருமமே. 5
கல்வி ஞானக்
கலைப்பொரு ளாயவன்
செல்வ மல்கு
திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக
லும்மிசை வானவா
சொல்லி டீர்நுந்
துயரங்கள் தீரவே. 6
நீரும் பாரும்
நெருப்பும் அருக்கனுங்
காரு மாருதங்
கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி
யாது திசைதிசை
ஓர்வு மொன்றில
ரோடித் திரிவரே. 7
ஓமத் தோடயன்
மாலறி யாவணம்
வீமப் பேரொளி
யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன்
கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப்
பாவதென் சிந்தையே. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 9
வன்னி கொன்றை
எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென்
றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழத்
தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற்
கானூர்க் கருத்தனே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்