07.011 திருவுடை யார்திரு

திருச்சிற்றம்பலம்

திருவுடை யார்திரு
மால்அய னாலும்
உருவுடை யார்உமை
யாளைஓர் பாகம்
பரிவுடை யார்அடை
வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை
பூவணம் ஈதோ. 1

எண்ணி இருந்து
கிடந்தும் நடந்தும்
அண்ண லெனாநினை
வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி
யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை
பூவணம் ஈதோ. 2

தெள்ளிய பேய்பல
பூதம வற்றொடு
நள்ளிருள் நட்டம
தாடல் நவின்றோர்
புள்ளுவ ராகும்அ
வர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை
பூவணம் ஈதோ. 3

நிலனுடை மான்மறி
கையது தெய்வக்
கனலுடை மாமழு
ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ
கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை
பூவணம் ஈதோ. 4

நடையுடை நல்லெரு
தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு
மின்பலி என்பார்
துடியிடை நன்மட
வாளடு மார்பில்
பொடியணி வார்உறை
பூவணம் ஈதோ. 5

மின்னனை யாள்திரு
மேனிவி ளங்கவொர்
தன்னமர் பாகம
தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம்
மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை
பூவணம் ஈதோ. 6

மிக்கிறை யேயவன்
துன்மதி யாலிட
நக்கிறை யேவிர
லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை
வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை
பூவணம் ஈதோ. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

சீரின் மிகப்பொலி
யுந்திருப் பூவணம்
ஆரவி ருப்பிட
மாஉறை வான்றனை
ஊரன் உரைத்தசொன்
மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர்
பாவம் அறுப்பரே. 10

திருச்சிற்றம்பலம்