திருமுறை : ஏழாம் திருமுறை
தலம் : துறையூர்
அ௫ளியவர் : சுந்தரர்
பண் : தக்கராகம்
நாடு : நடுநாடு
திருச்சிற்றம்பலம்
மலையார் அருவித்
திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
கலையார் அல்குற்கன்
னியர் ஆடும்துறையூர்த்
தலைவா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 1
மத்தம் மதயானை
யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப்
பரவும் துறையூர்
அத்தா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 2
கந்தங் கமழ்கா ரகில்சந்
தனம் உந்திச்
செந்தண் புனல்வந்
திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா
நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 3
அரும்பார்ந் தனமல்
லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன்
னியர்ஆடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 4
பாடார்ந் தனமாவும்
பலாக்க ளும்சாடி
நாடார வந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி
கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 5
மட்டார் மலர்க்கொன்
றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட்
டொலிஓவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 6
மாதார் மயிற்பீலி
யும்வெண் ணுரைஉந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 7
கொய்யா மலர்க்கோங்
கொடுவேங் கையுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண்
ணியர்ஆடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 8
விண்ணார்ந்தன மேகங்கள்
நின்றுபொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி
ஓர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்
பாவையர் ஆடும்துறையூர்
அண்ணா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 9
மாவாய்ப் பிளந்தானும்
மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித்
திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள்
சூழும்துறையூர்த்
தேவா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 10
செய்யார் கமல மலர்நாவ
லூர் மன்னன்
கையால் தொழுதேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத் தமிழ்ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள்
தவநெறி தானே. 11
திருச்சிற்றம்பலம்