07.026 செண்டா டும்விடையாய்

திருச்சிற்றம்பலம்

செண்டா டும்விடையாய்
சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா
ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங்
கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 1

இமையோர் நாயகனே
இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய்
கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய்
உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 2

படையார் வெண்மழுவா
பகலோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே
விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ்
கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால்
உகந்தேத்த மாட்டேனே. 3

மறிசேர் கையினனே
மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய
குருவேயுன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார்
நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 4

செஞ்சே லன்னகண்ணார்
திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன்
நலமொன்றறி யாமையினாற்
துஞ்சேன் நானொருகாற்
றொழுதேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 5

பொய்யவன் நாயடியேன்
புகவேநெறி ஒன்றறியேன்
செய்யவ னாகிவந்திங்
கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே
விளங்குந்திருக் காளத்தியென்
ஐயநுன் றன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 6

கடியேன் காதன்மையாற்
கழற்போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட
குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள்
முயங்குந்திருக் காளத்தியாய்
அடியேன் உன்னையல்லால்
அறியேன்மற் றொருவரையே. 7

நீறார் மேனியனே
நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற்
கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற்
பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால்
இனிஏத்த மாட்டேனே. 8

தளிர்போல் மெல்லடியாள்
தனைஆகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தென்னுள்ளம்
புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந்
திருக்காளத்தி யுள்ளிருந்த
ஒளியே உன்னையல்லால்
இனியொன்றும் உணரேனே. 9

காரா* ரும்பொழில்சூழ்
கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை
அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள்
செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம்
பெறுவார்பிழைப் பொன்றிலரே. 10

திருச்சிற்றம்பலம்