05.032 கொடிகொள் செல்வ

தலம் : பூந்துருத்தி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : புஷ்பவனநாதர்;
அம்பாள் : அழகாலமர்ந்தநாயகி.

திருச்சிற்றம்பலம்

கொடிகொள் செல்வ
விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற்
கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய
பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 1

ஆர்த்த தோலுடை
கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு
படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற்
பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 2

மாதி னைமதித்
தானொரு பாகமாக்
காத லாற்கரந்
தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன்
பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 3

மூவ னாய்முத
லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங்
காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன்
பூந்துருத் திந்கர்த்
தேவன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 4

செம்பொ னேயொக்கும்
மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ
ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப்
பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 5

வல்லம் பேசி
வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக்
கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும்
பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 6

ஒருத்த னாயுல
கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு
பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும்
பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 7

அதிரர் தேவர்
இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர்
காண்பரி தாயினான்
பொருத நீர்வரு
பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 8

செதுக றாமனத்
தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி
னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன்
பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக்
கீழ்நா மிருப்பதே. 9

துடித்த தோல்வலி
வாளரக் கன்றனைப்
பிடித்த கைஞ்ஞெரிந்
துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய
பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக்
கீழ்நா மிருப்பதே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10

திருச்சிற்றம்பலம்


New

01.136 மாதர் மடப்பிடி

தலம் : தருமபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : யாழ்மூரி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : யாழ்முரிநாதர்;
அம்பாள் : தேனமிர்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1

பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. 2

விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே. 3

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே. 4

நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே. 5

கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. 6

தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே. 7

தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. 8

வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. 9

புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே. 10

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. 11

திருச்சிற்றம்பலம்

01.135 நீறுசேர்வதொர்

தலம் : பராய்த்துறை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : தாருகவனேஸ்வரர்;
அம்பாள் : பசும்பொன்மயிலாம்பாள்.

திருச்சிற்றம்பலம்

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே. 1

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே. 2

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே. 3

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே. 4

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே. 5

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே. 6

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே. 7

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே. 8

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே. 9

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே. 10

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

01.134 கருத்தன் கடவுள்

தலம் : பறியலூர் வீரட்டம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
வீரட்டம்
சுவாமி : வீரட்டேஸ்வரர்;
அம்பாள் : இளங் கொம்பனையாள்.

திருச்சிற்றம்பலம்

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே. 1

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. 2

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 3

பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே. 4

கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 5

அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே. 6

நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையா ரரவம் அழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 7

வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே. 8

வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே. 9

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே. 10

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.

திருச்சிற்றம்பலம்

01.133 வெந்தவெண் பொடிப்பூசு

தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : ஏகாம்பரநாதர்;
அம்பாள் : ஏலவார்குழலி.

திருச்சிற்றம்பலம்

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற
அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு
தேத்த இடர்கெடுமே. 1

வரந்திகழு மவுணர் மாநகர்மூன்
றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா
தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே. 2

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய
பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ்
சேர விடர்கெடுமே. 3

தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற்
சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த
கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற்
கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம்
ஏத்த விடர்கெடுமே. 4

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத்
தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப்
பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி
மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ்
சேர விடர்கெடுமே. 5

சாகம்பொன் வரையாகத் தானவர்
மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபாக மாக
அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த விடர்கெடுமே. 6

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா அரக்கன்றன் நீள்முடி
பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ்
சேர விடர்கெடுமே. 8

பிரமனுந் திருமாலுங் கைதொழப்
பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன்
அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ
வில்வினை மாய்ந்தறுமே. 9

குண்டுபட் டமணா யவரொடுங்
கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை
ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங்
காண விடர்கெடுமே. 10

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி
யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு
கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன்
பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ
ரோடுஞ் சேர்பவரே.

திருச்சிற்றம்பலம்

01.132 ஏரிசையும் வடவாலின்

தலம் : வீழிமிழலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : வீழியழகர்;
அம்பாள் : அழகுமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருள்சொல்லும் மிழலையாமே. 1

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே. 2

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டும் மிழலையாமே. 3

உரைசேரும் எண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
கையேற்கும் மிழலையாமே. 4

காணுமா றரியபெரு மானாகிக்
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே. 5

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே. 6

ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற்
பண்பாடும் மிழலையாமே. 7

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
விமானஞ்சேர் மிழலையாமே. 8

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த
வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
சேருமூர் மிழலையாமே. 9

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
டும்மிழியும் மிழலையாமே. 10

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனெனும் இயல்பினோரே.

திருச்சிற்றம்பலம்

01.131 மெய்த்தாறு சுவையும்

தலம் : முதுகுன்றம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : நடுநாடு
சுவாமி : விருத்தகிரீஸ்வரர்;
அம்பாள் : விருத்தாம்பிகை

திருச்சிற்றம்பலம்

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்
குணங்களும் விரும்புநால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. 1

வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே. 2

தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந்
திரன்எச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 3

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடி
செய்த முதல்வனிடம் முதுகுன்றமே. 4

இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த வொருவனிருப்
பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவும் மால்யானை யிரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே. 5

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர
வயல்தழுவு முதுகுன்றமே. 6

அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரம்ஐந்தின்
ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே. 7

கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
றூன்றிமறை பாட ஆங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே. 8

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே. 9

மேனியில்சீ வரத்தாரும்விரிதருதட்
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியும் முதுகுன்றமே. 10

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும்இசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்தாமே.

திருச்சிற்றம்பலம்

01.130 புலனைந்தும் பொறிகலங்கி

தலம் : ஐயாறு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : செம்பொற்சோதீஸ்வரர்;
அம்பாள் : அறம்வளர்த்த நாயகி

திருச்சிற்றம்பலம்

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே. 1

விடலேறு படநாகம் அரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
கீன்றலைக்குந் திருவையாறே. 2

கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
இரைதேருந் திருவையாறே. 3

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல
மொட்டலருந் திருவையாறே. 4

நீரோடு கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
நடம்பயிலுந் திருவையாறே. 5

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே. 6

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
கண்வளருந் திருவையாறே. 7

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
வயல்படியுந் திருவையாறே. 8

மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே. 9

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
வந்தலைக்குந் திருவையாறே. 10

அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
றெய்துவார் தாழாதன்றே.

திருச்சிற்றம்பலம்

01.129 சேவுயருந் திண்கொடியான்

தலம் : சீர்காழி – 12-கழுமலம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : மேகராகக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

சேவுயருந் திண்கொடியான் திருவடியே
சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே. 1

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே. 2

அலங்கல்மலி வானவருந் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்
கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே. 3

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே. 4

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே. 5

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து
தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயுங் கழுமலமே. 6

புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
புள்ளிரியுங் கழுமலமே. 7

அடல்வந்த வானவரை யழித்துலகு
தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா
வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே. 8

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்றேத்துங் கழுமலமே. 9

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
மேல்படுக்குங் கழுமலமே. 10

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.

திருச்சிற்றம்பலம்

01.128 ஓருரு வாயினை

தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
திருவெழுகூற்றிருக்கை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை 1

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை
இருநதி அரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 2

நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக் 3

கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்
முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 4

நான்மறை யோதி ஐவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை 5

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூவுலகும் புதையமேல் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை 6

வரபுரம் என்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 7

ஐயுறு மமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும் 8

மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 9

அனைய தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவ ரில்லைநீள் நிலத்தே.

திருச்சிற்றம்பலம்

01.127 பிரம புரத்துறை

தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
திருஏகபாதம்
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான். 1

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன். 2

புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே. 3

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன். 4

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன். 5

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி. 6

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில். 7

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன். 8

தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான். 9

காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே. 10

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. 11

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை. 12

திருச்சிற்றம்பலம்

01.126 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்

தலம் : சீர்காழி – 12-கழுமலம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
திருத்தாளச்சதி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 1

பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. 2

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 3

அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 4

திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே. 5

செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே. 6

பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 7

செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே. 8

பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 9

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 10

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்
டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.

திருச்சிற்றம்பலம்

01.125 கலைமலி யகலல்குல்

தலம் : சிவபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிராகம்
சுவாமி : சிவகுருநாதசுவாமி;
அம்பாள் : ஆர்யாம்பாள்.

திருச்சிற்றம்பலம்

கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. 1

படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே. 2

வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே. 3

துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே. 4

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே. 5

முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே. 6

வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே. 7

கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே. 8

அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே. 9

புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. 10

புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.

திருச்சிற்றம்பலம்

01.124 அலர்மகள் மலிதர

தலம் : வீழிமிழலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிராகம்
சுவாமி : வீழியழகர்;
அம்பாள் : அழகுமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே. 1

இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே. 2

கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே. 3

மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே. 4

புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 5

அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே. 6

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 7

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 8

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே. 9

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே. 10

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.

திருச்சிற்றம்பலம்

01.123 பூவியல் புரிகுழல்

தலம் : வலிவலம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிராகம்
சுவாமி : இருதய கமலநாதேஸ்வரர்;
அம்பாள் : அங்கயற்கண்ணி

திருச்சிற்றம்பலம்

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1

இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 2

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே. 3

அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே. 4

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. 5

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. 6

நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே. 7

இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 8

தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே. 9

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. 10

மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.

திருச்சிற்றம்பலம்

01.122 விரிதரு புலியுரி

தலம் : இடைமருதூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிராகம்
சுவாமி : மகாலிங்கேசுவரர்;
அம்பாள் : பெருநலமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே. 1

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. 2

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே. 3

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. 4

உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 5

ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே. 6

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே. 7

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. 8

அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே. 9

குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே. 10

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.

திருச்சிற்றம்பலம்

01.121 நடைமரு திரிபுரம்

தலம் : இடைமருதூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிராகம்
சுவாமி : மகாலிங்கேசுவரர்;
அம்பாள் : பெருநலமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே. 1

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடமிடை மருதே. 2

அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடமிடை மருதே. 3

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடமிடை மருதே. 4

வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே. 5

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே. 6

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே. 7

மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடமிடை மருதே. 8

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே. 9

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே. 10

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.

திருச்சிற்றம்பலம்

01.120 பணிந்தவர் அருவினை

தலம் : ஐயாறு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
திருவிராகம்
சுவாமி : செம்பொற்சோதீஸ்வரர்;
அம்பாள் : அறம்வளர்த்த நாயகி.

திருச்சிற்றம்பலம்

பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1

கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 2

வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 3

வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 4

வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே. 5

முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே. 6

வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே. 7

விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 8

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே. 9

மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே. 10

நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

01.119 முள்ளின்மேல் முதுகூகை

தலம் : கள்ளில்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : சிவானந்தேசுவரர்;
அம்பாள் : ஆனந்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 1

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
காடலாற் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 2

எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 3

பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே. 4

விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 5

நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே. 6

பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே. 7

திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 8

வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
கரியானும் அறியாத கள்ளில் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 9

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே. 10

திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே. 11

திருச்சிற்றம்பலம்

01.118 சுடுமணி யுமிழ்நாகஞ்

தலம் : பருப்பதம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு வடநாடு
சுவாமி : பருப்பதேசுவரர்;
அம்பாள் : பருப்பதமங்கையம்மை.

திருச்சிற்றம்பலம்

சுடுமணி யுமிழ்நாகஞ்
சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை
யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான்
மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார்
பருப்பதம் பரவுதுமே. 1

நோய்புல்கு தோல்திரைய
நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லாம்
நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால்
வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான்
பருப்பதம் பரவுதுமே. 2

துனியுறு துயர்தீரத்
தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல்
இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக்
கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான்
பருப்பதம் பரவுதுமே. 3

கொங்கணி நறுங்கொன்றைத்
தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றா
னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையான்
அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான்
பருப்பதம் பரவுதுமே. 4

துறைபல சுனைமூழ்கித்
தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால்
வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந்
தேனினம் ஒலியோவா
பறைபடு விளங்கருவிப்
பருப்பதம் பரவுதுமே. 5

சீர்கெழு சிறப்போவாச்
செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே
யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக்
கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவா
பருப்பதம் பரவுதுமே. 6

புடைபுல்கு படர்கமலம்
புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை
திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி
வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன்
பருப்பதம் பரவுதுமே. 7

நினைப்பெனும் நெடுங்கிணற்றை
நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன்
அவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை
கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப்
பருப்பதம் பரவுதுமே. 8

மருவிய வல்வினைநோய்
அவலம்வந் தடையாமல்
திருவுரு அமர்ந்தானுந்
திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை
எழுந்ததோ ரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான்
பருப்பதம் பரவுதுமே. 9

சடங்கொண்ட சாத்திரத்தார்
சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய்
மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்
போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான்
பருப்பதம் பரவுதுமே. 10

வெண்செநெல் விளைகழனி
விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல்
இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு
ஞானசம் பந்தன்நல்ல
ஒண்சொலின் இவைமாலை
யுருவெணத் தவமாமே.

திருச்சிற்றம்பலம்

01.117 காட தணிகலங் காரர

தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
மொழிமாற்று
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள்: பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

காட தணிகலங் காரர
வம்பதி காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக்
காதினில் தூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற்
குருவம்வில் லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப்
பிரம புரத்தரரே. 1

கற்றைச் சடையது கங்கண
முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத்
தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது
கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு
புரத்தெங்கள் வேதியரே. 2

கூவிளங் கையது பேரி
சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது
பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லானையும்
பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே. 3

உரித்தது பாம்பை யுடல்மிசை
இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொ ராமையை இன்புறப்
பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத்
தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில்
வீற்றிருந் தவரே. 4

கொட்டுவர் அக்கரை யார்ப்பது
தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில
ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர்
மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி
புரத்துறை சுந்தரரே. 5

சாத்துவர் பாசந் தடக்கையி
லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின்
றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை
சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய்
மேவிய புண்ணியரே. 6

காலது கங்கைகற் றைச்சடை
யுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது
பாகம்வளர் கொழுங்கோட்
டாலது வூர்வர் அடலேற்
றிருப்பர் அணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர்
சிரபுரம் மேயவரே. 7

நெருப்புரு வெள்விடை மேனியர்
ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக்
காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை
யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற
வத்தணி புண்ணியரே. 8

இலங்கைத் தலைவனை யேந்திற்
றிறுத்த திரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது
மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையி னாடுவர்
கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயற் சண்பையுள்
மேவிய தத்துவரே. 9

அடியிணை கண்டிலன் தாமரை
யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந்
தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற்
பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுள்
மேய கறைக்கண்டரே. 10

கையது வெண்குழை காதது
சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை யடியவர்
எய்தாரோர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம்பூண்ப
துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள்
மேவிய கொற்றவரே. 11

கல்லுயர் கழுமல இஞ்சியுள்
மேவிய கடவுள் தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா
னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை
வானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு ளாற்பெற
லாஞ்சிவ லோகமதே.

திருச்சிற்றம்பலம்

01.116 அவ்வினைக் கிவ்வினை

தலம் : பொது
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : பொது
திருநீலகண்டம்

திருச்சிற்றம்பலம்

அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும்
உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற்
போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 1

காவினை யிட்டுங் குளம்பல
தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித்
தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 2

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற்
றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை
யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும்
மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 3

விண்ணுல காள்கின்ற விச்சா
தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந்
தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை
யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 4

மற்றிணை யில்லா மலைதிரண்
டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா
தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந்
திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 5

மறக்கு மனத்தினை மாற்றியெம்
மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்
கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை
யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை
கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை
யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி
லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 8

நாற்ற மலர்மிசை நான்முகன்
நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும்
முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது
வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 9

சாக்கியப் பட்டுஞ் சமணுரு
வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப்
போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை
யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 10

பிறந்த பிறவியிற் பேணியெஞ்
செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில்
இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன
செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடுங் கூடுவரே.

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது. 11

திருச்சிற்றம்பலம்

01.115 சங்கொளிர் முன்கையர்

தலம் : இராமனதீச்சரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : இராமநாதேசுவரர்;
அம்பாள் : சரிவார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சரமே. 1

சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
எந்தவன் இராமன தீச்சரமே. 2

தழைமயி லேறவன் தாதையோதான்
மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சரமே. 3

சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சரமே. 4

தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே. 5

சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சரமே. 6

மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சரமே. 7

தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சரமே. 8

தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி அயன்அணி முடியுங்காணான்
பனமணி அரவரி பாதங்காணான்
இனமணி இராமன தீச்சரமே. 9

தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சரமே. 10

தேன் மலர்க் கொன்றை யோன்……..
…….. முந்தமக்கூனமன்றே.

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

திருச்சிற்றம்பலம்

01.114 குருந்தவன் குருகவன்

தலம் : மாற்பேறு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு

திருச்சிற்றம்பலம்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1

பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே. 2

கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே. 3

தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே. 4

துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே. 5

பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. 6

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே. 8

செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே. 9

குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே. 10

அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே. 11

திருச்சிற்றம்பலம்

01.113 எரித்தவன் முப்புரம்

தலம் : வல்லம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமிபெயர் – வல்லநாதர்,
தேவியார் – வல்லாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1

தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் தூமதி சூடியெல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
சேயவன் உறைவிடந் திருவல்லமே. 2

பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று
சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே. 3

கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவன் உறைவிடந் திருவல்லமே. 4

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 5

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 6

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 8

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை யங்கமானான்
கரியவன் நான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் உறைவிடந் திருவல்லமே. 9

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
சென்றவன் உறைவிடந் திருவல்லமே. 10

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.

திருச்சிற்றம்பலம்

01.112 இன்குர லிசைகெழும்

தலம் : சிவபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : சிவகுருநாதசுவாமி;
அம்பாள் : ஆர்யாம்பாள்.

திருச்சிற்றம்பலம்

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே. 1

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே. 2

மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.

(*) அரிசில் என்பது ஒரு நதி. 3

மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 4

வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே. 5

மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே. 6

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 7

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 8

சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே. 9

மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 10

சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

திருச்சிற்றம்பலம்

01.111 அருத்தனை அறவனை

தலம் : கடைமுடி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : கடைமுடியீசுவரர்;
அம்பாள் : அபிராமியம்பிகை.

திருச்சிற்றம்பலம்

அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
கருத்தவன் வளநகர் கடைமுடியே. 1

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிடந்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே. 2

ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழுங்
காலன வளநகர் கடைமுடியே. 3

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே. 4

மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
கறையவன் வளநகர் கடைமுடியே. 5

படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 6

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே. 7

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த அடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே. 8

அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்
கடைமுடி யதனயல் காவிரியே. 9

மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே. 10

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல இன்பமாமே.

திருச்சிற்றம்பலம்

01.110 மருந்தவன் வானவர்

தலம் : இடைமருதூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : மகாலிங்கேசுவரர்;
அம்பாள் : பெருநலமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே. 1

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே. 2

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே. 3

பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே. 4

பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே. 5

நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே. 6

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே. 7

தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே. 8

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே. 9

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.

(*) ஓத்து என்பது வேதம். 10

இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.

திருச்சிற்றம்பலம்

01.109 வாருறு வனமுலை

தலம் : சீர்காழி – 07-சிரபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி

திருச்சிற்றம்பலம்

வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே. 1

அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே. 2

பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 3

நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே. 4

அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே. 5

கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே. 6

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே. 7

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 8

வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே. 9

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே. 10

அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.

திருச்சிற்றம்பலம்

01.108 மின்னியல் செஞ்சடைமேல்

தலம் : பாதாளேச்சுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : சர்ப்பப்புரீஸ்வரர்;
அம்பாள் : அமிர்தநாயகி.

திருச்சிற்றம்பலம்

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி
மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான்
புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்
தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான்
உறைகோயில் பாதாளே. 1

நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல
குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னாலினியான்
உறைகோயில் பாதாளே. 2

நாகமும் வான்மதியும் நலம்மல்கு
செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற்
புரம்மூன் றெரித்துகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல்
தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான்
உறைகோயில் பாதாளே. 3

அங்கமும் நான்மறையு மருள்செய்
தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான்
மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில்
திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும்
வயல்சூழ்ந்த பாதாளே. 4

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங்
காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும்
மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச்
சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையான்
உறைகோயில் பாதாளே. 5

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு
முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா
டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான்
உறைகோயில் பாதாளே. 6

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள
நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு
மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய்
துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான்
உறைகோயில் பாதாளே. 7

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை
மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த
அரக்கன்றலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள்
சடைக்க ணிந்தோன்
பல்லிசை பாடலினான்
உறைகோயில் பாதாளே. 8

தாமரை மேலயனும் அரியுந்தம
தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான்
கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான்
உறைகோயில் பாதாளே. 9

காலையில் உண்பவருஞ் சமண்கையருங்
கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான்
அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்
டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான்
உறைகோயில் பாதாளே. 10

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த
பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு
புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான
சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார்
எழில்வானத் திருப்பாரே.

திருச்சிற்றம்பலம்

01.107 வெந்தவெண் ணீறணிந்து

தலம் : கொடிமாடச்செங்குன்றூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : கொங்குநாடு
சுவாமி : அர்த்தநாரீசுவரர்;
அம்பாள் : அர்த்தநாரீசுவரி.

திருச்சிற்றம்பலம்

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்
திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள்
ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார்
அவலம் அறுப்பாரே. 1

அலைமலி தண்புனலோ டரவஞ்
சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான்
மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 2

பாலன நீறுபுனை திருமார்பிற்
பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள்
ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான்
கழலேத்தல் நீதியே. 3

வாருறு கொங்கைநல்ல மடவாள்
திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங்
கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான்
கழலேத்தல் நீதியே. 4

பொன்றிகழ் ஆமையொடு புரிநூல்
திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து
பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான்
கழலேத்தல் மெய்ப்பொருளே. 5

ஓங்கிய மூவிலைநற் சூல
மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு
மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார்
வினையாய பற்றறுமே. 6

நீடலர் கொன்றையொடு நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற்
பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார்
வினையாய தேயுமே. 7

மத்தநன் மாமலரும் மதியும்வளர்
கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல்
துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 8

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு
மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல்
ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார்
வினையாய நாசமே. 9

போதியர் பிண்டியரென் றிவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட்
டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும்
வினையான வீடுமே. 10

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார்
புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார்
வினையான நாசமே.

திருச்சிற்றம்பலம்

01.106 மாறில் அவுணரரணம்

தலம் : ஊறல்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : உமாபதீசுவரர்;
அம்பாள் : உமையம்மை.

திருச்சிற்றம்பலம்

மாறில் அவுணரரணம் மவைமாயவோர்
வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள்
நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்
பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான்
ஒலியார்கழல் உள்குதுமே. 1

மத்த மதக்கரியை மலையான்மகள்
அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள்
விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர்
நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித்
திருவூறலை உள்குதுமே. 2

ஏன மருப்பினொடும் எழிலாமையும்
பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறிக்
கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள்
சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான்
திருவூறலை உள்குதுமே. 3

நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு
வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான்
கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந்
திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான்
திருவூறலை உள்குதுமே. 4

எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும்
போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான்
அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை
கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந்
திருவூறலை உள்குதுமே. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்
தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள
மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும்
மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான்
திருவூறலை உள்குதுமே. 7

நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான்
முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான்
அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந்
திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான்
திருவூறலை உள்குதுமே. 8

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா
ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில்
சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான்
திருவூறலை உள்குதுமே. 9

கோட லிரும்புறவிற் கொடிமாடக்
கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற்
கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம்
பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார்
பரலோகத்து இருப்பாரே.

திருச்சிற்றம்பலம்

01.105 பாடலன் நான்மறையன்

தலம் : ஆரூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : புற்றிடங்கொண்டார்;
அம்பாள் : கமலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

பாடலன் நான்மறையன் படிபட்ட
கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய
சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக்
கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன்
ஆரூர் அமர்ந்தானே. 1

சோலையில் வண்டினங்கள் சுரும்போ
டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும்
பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப்
பணிதல் கருமமே. 2

உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித்
தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்
கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட
வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி
ஆரூர் அடைவோமே. 3

வெந்துறு வெண்மழுவாட் படையான்
மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம்
அசைத்தான் அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன்
அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும்
நாடொறும் நல்லனவே. 4

வீடு பிறப்பெளிதாம் அதனை
வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று
கனலேந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய
ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல்
பணிதல் கருமமே. 5

கங்கையோர் வார்சடைமேற் கரந்தான்
கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான்
மறையான் மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி
யவன்மேய ஆரூர்
தங்கையினாற் றொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 6

நீறணி மேனியனாய் நிரம்பா
மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான்
ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன்
சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான்
அவனெம் பெருமானே. 7

(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

வல்லியந் தோலுடையான் வளர்திங்கள்
கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன்
தலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத்
தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத்
தொழுவாரும் புண்ணியரே. 9

செந்துவர் ஆடையினார் உடைவிட்டு
நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்
தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம்
எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான்
அவனெந் தலைமையனே. 10

நல்ல புனற்புகலித் தமிழ்ஞான
சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி
ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை
பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார்
துன்பந் துடைப்பாரே.

திருச்சிற்றம்பலம்

01.104 ஆடல் அரவசைத்தான்

தலம் : சீர்காழி – 03-புகலி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

ஆடல் அரவசைத்தான் அருமாமறை
தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா
டமர்ந்தபிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம்
அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப்
பதியாமே. 1

ஏல மலிகுழலார் இசைபாடி
யெழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற்
குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை
மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும்
புகலிப் பதியாமே. 2

ஆறணி செஞ்சடையான் அழகார்புர
மூன்றும்அன்று வேவ
நீறணி யாகவைத்த
நிமிர்புன்சடை எம்இறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி
யென்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான்
விரும்பும் புகலியதே. 3

வெள்ள மதுசடைமேற் கரந்தான்விர
வார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான்
குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி யழகார்விரைத்
தாமரைமேல் அன்னம்
புள்ளினம் வைகியெழும்
புகலிப் பதிதானே. 4

சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க்
கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான்
அழகாருமை யோடும்உடன்
வேடு படநடந்த விகிர்தன்
குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும்
புகலிப் பதியாமே. 5

மைந்தணி சோலையின்வாய்
மதுப்பாய்வரி வண்டினங்கள்வந்து
நந்திசை பாடநடம்
பயில்கின்ற நம்பன்இடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள்
பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர்
புகலிப் பதிதானே. 6

மங்கையோர் கூறுகந்த மழுவாளன்
வார்சடைமேல் திங்கள்
கங்கை தனைச்சுரந்த
கறைக்கண்டன் கருதும்இடம்
செங்கயல் வார்கழனி திகழும்
புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார்
அவலம் அறியாரே. 7

வல்லிய நுண்ணிடையாள் உமையாள்
விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றறியான்
நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப்
பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான்
உறையும் புகலியதே. 8

தாதலர் தாமரைமேல் அயனுந்
திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய
உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும்
விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ்
புகலிப் பதிதானே. 9

வெந்துவர் மேனியினார் விரிகோ
வணம்நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம்
அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான்
உறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும்
புகலிப் பதிதானே. 10

வேதமோர் கீதம்உணர் வாணர்தொழு
தேத்தமிகு வாசப்
போதனைப் போல்மறையோர்
பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன்
தமிழ்மாலை நாவில்
ஓதவல் லார்உலகில்
உறுநோய் களைவாரே.

திருச்சிற்றம்பலம்

01.103 தோடுடை யானொரு

தலம் : கழுக்குன்றம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : வேதகிரீஸ்வரர் ;
அம்பாள் : சொக்கநாயகி.

திருச்சிற்றம்பலம்

தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ
ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்
நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 1

கேணவல்லான் கேழல்வெண் கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடை மேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள் தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 2

தேனகத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 3

துணையல்செய்தான் தூயவண்
டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்
லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்
மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்
கோயில் கழுக்குன்றே. 4

பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற் றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 5

வெள்ள மெல்லாம் விரிசடை
மேலோர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழ
லேத்துஞ் சிறுத்தொண்டர்1
உள்ள மெல்லாம் உள்கிநின்
றாங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல்செய்
கோயில் கழுக்குன்றே.

பாடம் : 1சிறுதொண்டர் 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

ஆதல் செய்தான் அரக்கர்தங் கோனை யருவரையின்
நோதல் செய்தான் நொடிவரை யின்கண்2 விரலூன்றிப்
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோ டொருபாகம்
காதல் செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.

பாடம் : 2நொடியளவில் 8

இடந்த பெம்மான் ஏனம தாயும் அனமாயும்
தொடர்ந்த பெம்மான் தூமதி சூடி வரையார்தம்
மடந்தை பெம்மான் வார்கழ லோச்சிக் காலனைக்
கடந்த பெம்மான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 9

தேய நின்றான் திரிபுரங் கங்கை சடைமேலே
பாய நின்றான் பலர்புகழ்ந் தேத்த வுலகெல்லாம்
சாய நின்றான் வன்சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 10

கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடிய பத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவ ரோடும் புகுவாரே.

திருச்சிற்றம்பலம்

01.102 உரவார் கலையின் கவிதைப்

தலம் : சீர்காழி – 10-காழி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

உரவார் கலையின் கவிதைப்
புலவர்க் கொருநாளுங்
கரவா வண்கைக் கற்றவர்
சேருங் கலிக்காழி
அரவார் அரையா அவுணர்
புரமூன் றெரிசெய்த
சரவா என்பார் தத்துவ
ஞானத் தலையாரே. 1

மொய்சேர் வண்டுண் மும்மத
நால்வாய் முரண்வேழக்
கைபோல் வாழை காய்குலை
யீனுங் கலிக்காழி
மைசேர் கண்டத் தெண்டோள்
முக்கண் மறையோனே
ஐயா என்பார்க் கல்லல்க
ளான அடையாவே. 2

இளகக் கமலத் தீன்களி
யங்குங் கழிசூழக்
களகப் புரிசைக் கவினார்
சாருங் கலிக்காழி
அளகத் திருநல் நுதலி
பங்கா அரனேயென்
றுளகப் பாடும் அடியார்க்
குறுநோய் அடையாவே. 3

எண்ணார் முத்தம் ஈன்று
மரகதம் போற்காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம்
பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர் பாகா பித்தா
பிரானே யென்பார்க்கு
நண்ணா வினைகள் நாடொறும்
இன்பந் நணுகும்மே. 4

மழையார் சாரற் செம்புனல்
வந்தங் கடிவருடக்
கழையார் கரும்பு கண்வளர்
சோலைக் கலிக்காழி
உழையார் கரவா உமையாள்
கணவா வொளிர்சங்கக்
குழையா என்று கூறவல்
லார்கள் குணவோரே. 5

குறியார் திரைகள் வரைகள்
நின்றுங் கோட்டாறு
கறியார் கழிசம் பிரசங்
கொடுக்குங் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையா
விடையா என்பாரை
அறியா வினைகள் அருநோய்
பாவம் அடையாவே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

உலங்கொள் சங்கத் தார்கலி
யோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வய
லேறுங் கலிக்காழி
இலங்கை மன்னன் தன்னை
யிடர்கண் டருள்செய்த
சலங்கொள் சென்னி மன்னா
என்னத் தவமாமே. 8

ஆவிக் கமலத் தன்னம்
இயங்குங் கழிசூழக்
காவிக் கண்ணார் மங்கலம்
ஓவாக் கலிக்காழிப்
பூவில் தோன்றும் புத்தே
ளொடுமா லவன்தானும்
மேவிப் பரவும் அரசே
யென்ன வினைபோமே. 9

மலையார் மாடம் நீடுயர்
இஞ்சி மஞ்சாருங்
கலையார் மதியஞ் சேர்தரும்
அந்தண் கலிக்காழித்
தலைவா சமணர் சாக்கியர்க்
கென்றும் அறிவொண்ணா
நிலையா யென்னத் தொல்வினை
யாய நில்லாவே. 10

வடிகொள் வாவிச் செங்கழு
நீரிற் கொங்காடிக்
கடிகொள் தென்றல் முன்றினில்
வைகுங் கலிக்காழி
அடிகள் தம்மை அந்தமில்
ஞான சம்பந்தன்
படிகொள் பாடல் வல்லவர்
தம்மேற் பழிபோமே. 11

திருச்சிற்றம்பலம்

01.101 தண்ணார் திங்கட் பொங்கர

தலம் : கண்ணார்கோயில்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : கண்ணாயிரமுடையார்;
அம்பாள் : முருகுவளர்கோதை.

திருச்சிற்றம்பலம்

தண்ணார் திங்கட் பொங்கர
வந்தாழ் புனல்சூடிப்
பெண்ணா ணாய பேரரு
ளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழு
வோர்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை
யாய நணுகும்மே. 1

கந்தமர் சந்துங் காரகி
லுந்தண் கதிர்முத்தும்
வந்தமர் தெண்ணீர் மண்ணி
வளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர்1 சோலைக் கோகிலம்2
ஆடக் குளிர்வண்டு
செந்திசை பாடுஞ் சீர்திகழ்
கண்ணார் கோயிலே.

பாடம் : 1கொந்தமர் 2கோகுலம் 2

பல்லியல் பாணிப் பாரிடம்
ஏத்தப் படுகானில்
எல்லி நடஞ்செய் யீசனெம்
மான்றன் இடமென்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை
மௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்
கண்ணார் கோயிலே. 3

தருவளர் கானந் தங்கிய
துங்கப் பெருவேழம்
மருவளர் கோதை அஞ்ச
வுரித்து மறைநால்வர்க்
குருவளர் ஆல நீழல
மர்ந்தீங்3 குரைசெய்தார்
கருவளர் கண்ணார் கோயி
லடைந்தோர் கற்றோரே.

பாடம் : 3நீழலறந்தீங் 4

மறுமா ணுருவாய்4 மற்றிணை
யின்றி வானோரைச்
செறுமா வலிபாற் சென்றுல
கெல்லாம் அளவிட்ட
குறுமா ணுருவன் தற்குறி
யாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது
கண்ணார் கோயிலே.

பாடம் : 4மறுமானுருவாய் 5

விண்ணவ ருக்காய் வேலையுள்
நஞ்சம் விருப்பாக
உண்ணவ னைத்தே வர்க்கமு
தீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவ னைக்கண் ணார்திகழ்
கோயிற் கனிதன்னை
நண்ணவல் லோர்கட் கில்லை
நமன்பால் நடலையே. 6

முன்னொருகாலத் திந்திரன்
உற்ற முனிசாபம்
பின்னொரு நாளவ் விண்ணவ
ரேத்தப் பெயர்வெய்தித்
தன்னரு ளாற்கண் ஆயிரம்
ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர் நாளுந் துன்னமர்
கண்ணார் கோயிலே. 7

பெருக்கெண் ணாத பேதை
யரக்கன் வரைக்கீழால்
நெருக்குண் ணாத்தன் நீள்கழல்
நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண் ணாதோர் மொய்கதிர்
வாள்தேர் முன்ஈந்த
திருக்கண் ணார்என் பார்சிவ
லோகஞ் சேர்வாரே. 8

செங்கம லப்போ தில்திகழ்
செல்வன் திருமாலும்
அங்கம லக்கண் நோக்கரும்
வண்ணத் தழலானான்
தங்கம லக்கண் ணார்திகழ்
கோயில் தமதுள்ளம்
தங்கம லத்தோ டேத்திட
அண்டத் தமர்வாரே. 9

தாறிடு பெண்ணைத் தட்டுடை
யாருந் தாம்உண்ணும்
சோறுடை யார்சொல் தேறன்மின்
வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடை யன்பரன் என்பணி
வான்நீள் சடைமேலோர்
ஆறுடை யண்ணல்
சேர்வதுகண்ணார் கோயிலே. 10

காமரு கண்ணார் கோயிலு
ளானைக் கடல்சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியல்
மாடப் புகலிக்கோன்
நாமரு தொன்மைத் தன்மையுள்
ஞான சம்பந்தன்
பாமரு பாடல் பத்தும்வல்
லார்மேற் பழிபோமே.

திருச்சிற்றம்பலம்

01.097 எய்யா வென்றித்

தலம் : சீர்காழி – 08-புறவம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : தோணியப்பர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்த
மையார் கண்டன் மாதுமை வைகுந் திருமேனிச்
செய்யான் வெண்ணீ றணிவான் திகழ்பொற் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவம்மே. 1

மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதனென் றேத்தும் நம்பரன் வைகுந் நகர்போலும்
மாதவி மேய வண்டிசை பாட மயிலாடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே. 2

வற்றா நதியும் மதியும் பொதியுஞ் சடைமேலே
புற்றா ரரவின் படமா டவுமிப் புவனிக்கோர்
பற்றா யிடுமின் பலியென் றடைவார் பதிபோலும்
பொற்றா மரையின் பொய்கை நிலாவும் புறவம்மே. 3

துன்னார் புரமும் பிரமன் சிரமுந் துணிசெய்து
மின்னார் சடைமேல் அரவும் மதியும் விளையாடப்
பன்னா ளிடுமின் பலியென் றடைவார் பதிபோலும்
பொன்னார் புரிநூல் அந்தணர் வாழும் புறவம்மே. 4

தேவா அரனே சரணென் றிமையோர் திசைதோறுங்
காவா யென்று வந்தடை யக்கார் விடம்உண்டு
பாவார் மறையும் பயில்வோ ருறையும் பதிபோலும்
பூவார் கோலச் சோலைசுலாவும் புறவம்மே. 5

கற்றறி வெய்திக் காமன்முன் னாகும் முகவெல்லாம்
அற்றர னேநின் னடிசர ணென்னும் அடியோர்க்குப்
பற்றது வாய பாசுப தன்சேர் பதியென்பர்
பொற்றிகழ் மாடத் தொளிகள் நிலாவும் புறவம்மே. 6

எண்டிசை யோரஞ் சிடுவகை கார்சேர் வரையென்னக்
கொண்டெழு கோல முகில்போற் பெரிய கரிதன்னைப்
பண்டுரி செய்தோன் பாவனை செய்யும் பதியென்பர்
புண்டரி கத்தோன் போன்மறை யோர்சேர் புறவம்மே. 7

பரக்குந் தொல்சீர்த் தேவர்கள் சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ் செந்தீப் போலமர் செய்யுந் தொழில்மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித் தானக் காலத்திற்
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவம்மே. 8

மீத்திக ழண்டந் தந்தய னோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொ ணாது முயல்விட்டாங்
கேத்த வெளிப்பா டெய்திய வன்றன் இடமென்பர்
பூத்திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவம்மே. 9

வையகம் நீர்தீ வாயுவும் விண்ணும் முதலானான்
மெய்யல தேரர் உண்டிலை யென்றே நின்றேதம்
கையினி லுண்போர் காண வொணாதான் நகரென்பர்
பொய்யக மில்லாப் பூசுரர் வாழும் புறவம்மே. 10

பொன்னியல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன்னியல் பில்லாச் சண்பையர் கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசை ஈரைந் தேத்தவல் லோர்கட் கிடர்போமே. 11

திருச்சிற்றம்பலம்

01.100 நீடலர்சோதி வெண்பிறையோடு

தலம் : பரங்குன்றம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : பாண்டியநாடு
சுவாமி : பரங்கிரிநாதர்;
அம்பாள் : ஆவுடைநாயகி.

திருச்சிற்றம்பலம்

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1

அங்கமொராறும் அருமறைநான்கும் அருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 2

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே. 3

வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 4

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே. 5

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 6

அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
எயில்படஎய்த எம்மிறைமேய இடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே. 7

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்தோள் இருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே. 8

முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியல்அங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே. 9

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 10

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.

திருச்சிற்றம்பலம்

01.099 வம்பார் குன்றம்

தலம் : குற்றாலம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : பாண்டியநாடு
சுவாமி : குற்றாலநாதர்;
அம்பாள் : சிவகாமியம்மை

திருச்சிற்றம்பலம்

வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
அம்பால் நெய்யோ டாட லமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர்போலுந் நமரங்காள். 1

பொடிகள் பூசித் தொண்டர்பின் செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகள் மேய நன்னகர் போலும் மடியீர்காள். 2

செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலுந் நமரங்காள். 3

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்றேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலுந் நமரங்காள். 4

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்
இலையார் சூலம் ஏந்திய கையான் எயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலுஞ் சிறுதொண்டீர். 5

மைம்மா நீலக்1 கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா ஏனல் உண்கிளி யோப்புங் குற்றாலம்
கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்ளெம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்.

பாடம் : 1மைம்மானீலக் 6

நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோல மஞ்ஞை பேடையொ டாடுங் குற்றாலம்
காலன்தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்ளெம்
சூல பாணி நன்னகர் போலுந் தொழுவீர்காள். 7

போதும் பொன்னும் உந்தி யருவி புடைசூழக்
கூதன் மாரி நுண்துளி தூங்குங் குற்றாலம்
மூதூரி லங்கை முட்டிய கோனை முறைசெய்த
நாதன் மேய நன்னகர் போலுந் நமரங்காள். 8

அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப அரும்பீன்று
குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
பிரமன் னோடு மாலறி யாத பெருமையெம்
பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள். 9

பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் மேறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்
இருந்துண் தேரும் நின்றுண் சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள். 10

மாடவீதி வருபுனற் காழி யார்மன்னன்
கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்
நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே. 11

திருச்சிற்றம்பலம்

01.098 நன்றுடையானைத்

தலம் : சிராப்பள்ளி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : மாத்ருபூதேஸ்வரர்;
அம்பாள் : மட்டுவார்குழலி.

திருச்சிற்றம்பலம்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1

கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. 2

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 3

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே. 4

கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 5

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 6

வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 7

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 8

அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே. 9

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 10

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.096 மன்னி யூரிறை – திருவிருக்குக்குறள்

தலம் : அன்னியூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
திருவிருக்குக்குறள்
சுவாமி : லிகுசாரண்யேஸ்வரர்;
அம்பாள் : பிருகந்நாயகி.

திருச்சிற்றம்பலம்

மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே. 1

பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 2

நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. 3

பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. 4

நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 5

இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. 6

அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. 7

தூர்த்தனைச் செற்ற, தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே1.

பாடம் : 1யுய்ம்மினே 8

இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே. 9

குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 10

பூந்தராய்ப் பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 11

திருச்சிற்றம்பலம்

01.095 தோடொர் காதினன் – திருவிருக்குக்குறள்

தலம் : இடைமருதூர்
அருளியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிருக்குக்குறள்
சுவாமி : மகாலிங்கேசுவரர்;
அம்பாள் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

தோடொர் காதினன், பாடும் மறையினன்
காடு பேணிநின், றாடும் மருதனே. 1

கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 2

எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 3

விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 4

பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 5

கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 6

பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 7

எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 8

இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 9

நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 10

கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. 11

திருச்சிற்றம்பலம்

01.094 நீல மாமிடற் – திருவிருக்குக்குறள்

தலம் : ஆலவாய் (மதுரை)
அருளியவர் : திருஞானசம்பந்தர
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : பாண்டியநாடு
திருவிருக்குக்குறள்
சுவாமி : சோமசுந்தரேஸ்வரர்;
அம்பாள் : மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 1

ஞாலம் ஏழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. 2

ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. 3

அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 4

ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 5

அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 6

அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 7

அரக்க னார்வலி1, நெருக்கன் ஆலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.

பாடம் : 1அரக்கனாள்வலி 8

அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவம் ஓங்குமே. 9

ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே. 10

அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்தமிழ், செடிகள் நீக்குமே. 11

திருச்சிற்றம்பலம்

01.093 நின்று மலர்தூவி – திருவிருக்குக்குறள்

தலம் : முதுகுன்றம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : நடுநாடு
திருவிருக்குக்குறள்
சுவாமி : விருத்தகிரீஸ்வரர்;
அம்பாள் : விருத்தாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே. 1

அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 2

ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வையம் உமதாமே. 3

ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே. 4

மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 5

மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே. 6

விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே. 7

பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 8

இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 9

தேரர் அமணரும், சேரும் வகையில்லான்1
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.

பாடம் : 1வகையில்லா 10

நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வாரே.

திருச்சிற்றம்பலம்

01.091 சித்தந் தெளிவீர்காள் – திருவிருக்குக்குறள்

தலம் : ஆரூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிருக்குக்குறள்
சுவாமி : புற்றிடங்கொண்டார்;
அம்பாள் : அல்லியம்பூங்கோதை.

திருச்சிற்றம்பலம்

சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 2

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 3

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ, நையும் வினைதானே. 4

பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே. 5

பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே. 6

வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வையம் உமதாமே. 7

அரக்கன் ஆண்மையை, நெருக்கி னான்ஆரூர்
கரத்தி னால்தொழத், திருத்த மாகுமே. 8

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 9

கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 10

சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 11

திருச்சிற்றம்பலம்

01.092 வாசி தீரவே – திருவிருக்குக்குறள்

தலம் : வீழிமிழலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : வீழியழகர்;
அம்பாள் : அழகுமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

திருச்சிற்றம்பலம்

01.082 இரும்பொன் மலைவில்லா எரியம்

தலம் : வீழிமிழலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : வீழிநாதஸ்வாமி;
அம்பாள் : சுந்தரகுஜாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே. 1

வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே. 2

பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர்1 வீழி மிழலையே.

பாடம் : 1போன்மாதர் 3

இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 4

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. 5

மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 6

மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. 7

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. 8

கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே. 9

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே. 10

மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழில்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவை2 சொல்ல வல்லோர் நல்லோரே.

பாடம் : 2வாய்மெய்த்திவை. 11

திருச்சிற்றம்பலம்

01.090 அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
திருவிருக்குக்குறள்
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே. 1

காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி உய்ம்மினே. 2

நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே. 3

அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும், எங்க ளீசனே. 4

வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே. 5

பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 6

கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே. 7

நறவம் ஆர்பொழிற், புறவ நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே. 8

தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்றுநினைமினே. 9

அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின், றியலும் உள்ளமே. 10

தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே. 11

தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 12

திருச்சிற்றம்பலம்

01.089 படையார் தருபூதப் பகடார்

தலம் : எருக்கத்தம்புலியூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் குறிஞ்சி
நாடு : நடுநாடு
சுவாமி : நீலகண்டேஸ்வரர்;
அம்பாள் : நீலமலர்கண்ணி.

திருச்சிற்றம்பலம்

படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே. 1

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே. 2

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே. 3

அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத்திரு வாமே. 4

வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 5

நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே. 8

மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார்மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 9

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்தன் அடியே அடைவோமே. 10

ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.

திருச்சிற்றம்பலம்

01.088 முற்றுஞ் சடைமுடிமேன்

தலம் : ஆப்பனூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : பாண்டியநாடு
சுவாமி : அன்னவிநோதன்;
அம்பாள் : குரவங்கழ்குழலி.

திருச்சிற்றம்பலம்

முற்றுஞ் சடைமுடிமேன்
முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம்
அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத்
திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார்
வினைபற் றறுப்பாரே. 1

குரவங் கமழ்குழலாள்
குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி
விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை
அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார்
வினைபற் றறுப்பாரே. 2

முருகு விரிகுழலார்
மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான்
பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை
அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார்
வினைபற் றறுப்பாரே. 3

பிணியும் பிறப்பறுப்பான்
பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச்
சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை
அணியாப்ப னூரானைப்
பணியும் மனமுடையார்
வினைபற் றறுப்பாரே. 4

தகர மணியருவித்
தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்றும்
நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை
அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார்
வினைபற் றறுப்பாரே. 5

ஓடுந் திரிபுரங்கள்
உடனே யுலந்தவியக்
காட திடமாகக்
கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை
அணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார்
வினைபற் றறுப்பாரே. 6

இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 7

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறலழித்தான் அணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 8

கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 9

செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 10

அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.087 சுடுகூ ரெரிமாலை யணிவர்

தலம் : வடுகூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : நடுநாடு
சுவாமி : வடுகீஸ்வரர்;
அம்பாள் : திரிபுரசுந்தரி.

திருச்சிற்றம்பலம்

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. 1

பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடஅன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே. 2

சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே. 3

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக்1 கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.

பாடம் : 1வெரியூட்டி 4

துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே. 5

தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
கிளரும் அரவார்த்துக்2 கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.

பாடம் : 2அரவாட்டிக் 6

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழி கொள்ளார்3
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.

பாடம் : 3உள்ளார் 7

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 8

சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே. 9

திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமான் உணர்கில்லாப்4 பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.

பாடம் : 4உணர்கில்லான் 10

படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.

திருச்சிற்றம்பலம்

01.086 கொட்டும் பறைசீராற் குழும

தலம் : நல்லூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர்;
அம்பாள் : கல்யாணசுந்தரி.

திருச்சிற்றம்பலம்

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. 1

ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே. 2

சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட் கடையா பாவமே. 3

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப் பித்தொழுது
தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே. 4

ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே. 5

கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே. 6

எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. 7

காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம1 மனத்தாரா யிகழா தெழுந் தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.

பாடம் : 1ஏக,ஏவ 8

வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண2 மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.

பாடம் : 2தண்ணன் 9

பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட் கில்லை இடர்தானே. 10

தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.085 கல்லால் நிழல்மேய கறைசேர்

தலம் : நல்லம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : பூமீஸ்வரர்;
அம்பாள் : தேகசௌந்தரி.

திருச்சிற்றம்பலம்

கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1

தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே. 2

அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே. 3

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே. 4

மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே. 5

வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே. 6

அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே. 7

பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே. 8

நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே. 9

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 10

நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.084 புனையும் விரிகொன்றைக்

தலம் : நாகைக்காரோணம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : காயாரோகணேஸ்வரர்;
அம்பாள் : நீலாயதாட்சி

திருச்சிற்றம்பலம்

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்1
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.

பாடம் : 1வழிபட 1

பெண்ணாண் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 2

பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன்2 திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

பாடம் : 2செல்வத்திரைசூழ்ந்த 3

மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ணல் லணியாய
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே. 4

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே. 5

ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே. 6

அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 7

வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்தோள்
இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே. 8

திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே. 9

நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 10

கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாம்
கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.

திருச்சிற்றம்பலம்

01.083 அடையார் புரம்மூன்றும்

தலம் : அம்பர் மாகாளம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : காளகண்டேஸ்சுவரர்;
அம்பாள் : பட்சநாயகி.

திருச்சிற்றம்பலம்

அடையார் புரம்மூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 2

திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கள்மேல் ஒழியா வூனம்மே. 3

கொந்தண்1 பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.

பாடம் : 1கொந்தம் 4

அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 5

பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. 6

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 7

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 8

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 9

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லையிடர் தானே. 10

வெருநீர்2 கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.

பாடம் : 2வெரிநீர். 11

திருச்சிற்றம்பலம்

01.081 நல்லார் தீமேவுந் தொழிலார்

தலம் : சீர்காழி – 10-காழி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

*நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.1 1

துளிவண் தேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே. 2

ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. 3

இப்பதிகத்தில் 4-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 4

இப்பதிகத்தில் 5-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 5

இப்பதிகத்தில் 6-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 7

இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே. 8

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே. 9

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே. 10

வாசம் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.080 கற்றாங் கெரியோம்பிக் கலியை

தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : ஆனந்த நடராஜர்;
அம்பாள் : சிவகாமசுந்தரி.

திருச்சிற்றம்பலம்

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. 2

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. 3

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. 4

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 5

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. 6

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே. 7

கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே. 8

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 9

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. 10

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

திருச்சிற்றம்பலம்

01.079 அயிலுறு படையினர் விடையினர்

தலம் : சீர்காழி – 12-கழுமலம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1

கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 2

எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை யெட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 3

எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறும்மெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 4

ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமைஅக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்திலம் முத்தம்
நிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 5

முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமும் ஏந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 6

கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 7

புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம்பல படஅடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 8

விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை யெனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் இப்பியுஞ் சுமந்து
கலங்கடஞ் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 9

ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 10

கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.078 வரிவள ரவிரொளி

தலம் : இடைச்சுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : ஞானபுரீஸ்வரர்;
அம்பாள் : கோபரத்னாம்பிகை

திருச்சிற்றம்பலம்

வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இளமயில் ஆல
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே 1

ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 2

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு1 வாளர்
வானமும் நிலமையும்2 இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.

பாடம் : 1கனமழு 2நிலைமையும் 3

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோர் அரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 4

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 5

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையின் ஆடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 6

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கும் எரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 7

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம மேவிய இவர்வண மென்னே. 8

பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமும்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 9

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமைய ரடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயல்இள வாளைகள்இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே. 10

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரற்
புணர் மடநடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர்தாமே.

திருச்சிற்றம்பலம்

01.077 பொன்றிரண் டன்ன புரிசடை

தலம் : அச்சிறுபாக்கம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : அகத்தீஸ்வரர்;
அம்பாள் : பாகம்பிரியாள்நாயகி.

திருச்சிற்றம்பலம்

பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1

தேனினும் இனியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 2

காரிரு ளுருவம் மால்வரை புரையக்
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியிற் சேரார்
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருண் மாலை யாடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 3

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
மலைமகள வளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத்
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 4

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும்
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 5

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 6

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 7

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்அணங் காய
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்
பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 8

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
நுகர்புகர் சாந்தமொ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
எய்தலா காததொ ரியல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 9

வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
உள்கலா காததோ ரியல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 10

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே.

திருச்சிற்றம்பலம்

01.076 மலையினார் பருப்பதந்

தலம் : இலம்பையங்கோட்டூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : தொண்டைநாடு
சுவாமி : அரம்பேஸ்வரர்;
அம்பாள் : கனககுஜாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமலன் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 2

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும்
காலனாம் எனதுரை தனதுரை யாகக்
கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்1
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

பாடம் : 1விண்டேங்கும் 3

உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
ஒற்றியூ ருறையும்அண் ணாமலை யண்ணல்
விளம்புவான் எனதுரை தனதுரை யாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 4

தேனுமாய் அமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமாம் எனதுரை தனதுரை யாக
வரிஅரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங்
கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமான் உழிதரும் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 5

மனமுலாம்2 அடியவர்க் கருள்புரி கின்ற
வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலான் எனதுரை தனதுரை யாகத்
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே.

பாடம் : 2மனமுலா 6

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 7

வேருலாம் ஆழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலாம் எனதுரை தனதுரை யாக
ஆகமோர் அரவணிந் துழிதரும் அண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரணம் உழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி3 இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

பாடம் : 3ஏருலாம் பைம்பொழில் 8

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 9

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரை யாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை
களிமுக வண்டொடு தேன்இனம் முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 10

கந்தனை மலிகனை கடலொலி யோதங்
கானலங் கழிவளர் கழுமலமென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.

திருச்சிற்றம்பலம்

01.075 காலைநன் மாமலர்

தலம் : சீர்காழி – 04-வெங்குரு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள
வுதைத்தவன் உமையவள் விருப்பன்எம் பெருமான்
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1

பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
பிறையொடும் அரவினை யணிந்தழ காகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
பரமரெம் அடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி
மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 2

ஓரியல் பில்லா வுருவம தாகி
யொண்திறல் வேடன துருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக்
கறுத்தவற்1 களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று
நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே

பாடம் : 1கறுத்ததற் 3

வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்2
பண்டிகழ் வாகப் பாடியொர் வேதம்
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 2கூடியமுழவம் 4

சடையினர் மேனி நீறது பூசித்
தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந்தழ காகப்
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி3
உமையவள் பாகமும் அமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 3பங்கயக்கண்ணி 5

கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல்வந் தேறிய சங்கமும் இப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
ஓங்குவான் இருளறத் துரப்பஎண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 6

வல்லிநுண் இடையாள் உமையவள் தன்னை
மருகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லறம் உரைத்து ஞானமோ டிருப்ப
நலிந்திட லுற்று வந்தஅக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 7

பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தங்
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார்4 விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 4மலரா 8

ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 9

பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டுவன் தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெருவுற விளித்துவெய் தாய
வேடுடைக் கோலம் விரும்பியவிகிர் தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 10

விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானசம் பந்தன்
நவின்றஇவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியு ஆடியும் பயிலவல் லோர்கள்
விண்ணவர் விமானங் கொடுவர ஏறி
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

01.074 நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை

தலம் ; சீர்காழி – 08-புறவம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

நறவ நிறைவண் டறைதார்க்
கொன்றை நயந்து நயனத்தால்
சுறவஞ் செறிவண் கொடியோன்
உடலம் பொடியா விழிசெய்தான்
புறவம் உறைவண் பதியா
மதியார் புரமூன் றெரிசெய்த
இறைவன் அறவன் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 1

உரவன் புலியின் உரிதோ
லாடை யுடைமேற் படநாகம்
விரவி விரிபூங் கச்சா
வசைத்த விகிர்தன் னுகிர்தன்னாற்
பொருவெங் களிறு பிளிற
வுரித்துப் புறவம் பதியாக
இரவும் பகலும் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 2

பந்த முடைய பூதம்
பாடப் பாதஞ் சிலம்பார்க்கக்
கந்த மல்கு குழலிகாணக்
கரிகாட் டெரியாடி
அந்தண் கடல்சூழ்ந் தழகார்
புறவம் பதியா வமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 3

நினைவார் நினைய இனியான்
பனியார் மலர்தூய் நித்தலுங்
கனையார் விடையொன் றுடையான்
கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான்
கடல்சூழ் புறவம் பதியாக
எனையா ளுடையான் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 4

செங்கண் அரவும் நகுவெண்
டலையும் முகிழ்வெண் திங்களுந்
தங்கு சடையன் விடைய
னுடையன் சரிகோ வணஆடை
பொங்கு திரைவண் கடல்சூழ்ந்
தழகார் புறவம் பதியாக
எங்கும் பரவி இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 5

பின்னு சடைகள் தாழக்
கேழல் எயிறு பிறழப்போய்
அன்ன நடையார் மனைகள்
தோறும் அழகாற் பலிதேர்ந்து
புன்னை மடலின் பொழில்சூழ்ந்
தழகார் புறவம் பதியாக
என்னை யுடையான் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 6

உண்ணற் கரிய நஞ்சை
யுண்டொ ருதோ ழந்தேவர்
விண்ணிற் பொலிய அமுத
மளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற் சிறைவண் டறைபூஞ்
சோலைப் புறவம் பதியாக
எண்ணிற் சிறந்த இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 7

விண்தான் அதிர வியனார்
கயிலை வேரோ டெடுத்தான்றன்
திண்தோ ளுடலும் முடியு
நெரியச் சிறிதே யூன்றிய
புண்தான் ஒழிய அருள்செய்
பெருமான் புறவம் பதியாக
எண்தோ ளுடையான் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 8

நெடியான் நீள்தா மரைமே
லயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி யுடையான்
பவள வரைபோல் திருமார்பிற்
பொடியார் கோலம் உடையான்
கடல்சூழ் புறவம் பதியாக
இடியார் முழவார் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 9

ஆலும் மயிலின் பீலி
யமணர் அறிவில் சிறுதேரர்
கோலும் மொழிகள் ஒழியக்
குழுவுந் தழலும் எழில்வானும்
போலும் வடிவும் உடையான்
கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோ
ரேத்த உமையோ டிருந்தானே. 10

பொன்னார் மாட நீடுஞ்
செல்வப் புறவம் பதியாக
மின்னா ரிடையாள் உமையா
ளோடும் இருந்த விமலனைத்
தன்னார் வஞ்செய் தமிழின்
விரகன் உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடி யாடப்
பிரியார் பரலோ கந்தானே. 11

திருச்சிற்றம்பலம்

01.073 வானார்சோதி மன்னுசென்னி

தலம் : கானூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : செம்மேனிநாதர்;
அம்பாள் : சிவலோகநாயகி.

திருச்சிற்றம்பலம்

வானார்சோதி மன்னுசென்னி
வன்னிபு னங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை
திங்க ளொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப
மாலை யாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி
ஆன்ஊர் செல்வரே. 1

நீந்தலாகா வெள்ளமூழ்கு
நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு
கொன்றை எழிலாரப்
போந்தமென்சொல் இன்பம்பயந்த
மைந்த ரவர்போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய
சாந்த நீற்றாரே. 2

சிறையார்வண்டுந் தேனும்விம்மு
செய்ய மலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு
மால்விடை மேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென்
எழில்நல முங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய
பிறையார் சடையாரே. 3

விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை
மாலை யதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு
தழைபுன் சடைதாழ
எண்ணாவந்தென் இல்புகுந்தங்
கெவ்வ நோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய
விண்ணோர் பெருமானே. 4

தார்கொள் கொன்றைக்
கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு
சேட ராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென்
னுள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய
கறைக்கண் டத்தாரே. 5

முளிவெள்ளெலும்பு நீறுநூலும்
மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென்
இல்லே புகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர்
தேற லார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய
ஒளிவெண் பிறையாரே. 6

மூவாவண்ணர் முளைவெண்பிறையர்
முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார்
பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம்
புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய
தேவ தேவரே. 7

தமிழின்நீர்மை பேசித்தாளம்
வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல்
செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல
நீர்மை யதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய
பவள வண்ணரே. 8

அந்தமாதி அயனும்மாலும்
ஆர்க்கும் அறிவரியான்
சிந்தையுள்ளும் நாவின் மேலுஞ்
சென்னியு மன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை
காலை யாடுவான்
கந்தமல்கு கானூர்மேய
எந்தை பெம்மானே. 9

ஆமையரவோ டேனவெண்கொம்
பக்கு மாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல
உள்வெந் நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங்
கோணாகணையானும்
சேமமாய செல்வர்கானூர்
மேய சேடரே. 10

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங்
கானூர் மேயானைப்
பழுதில்ஞான சம்பந்தன்சொற்
பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள்
சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கும் அன்புசெய்வார்
அல்லல் அறுப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.072 வாரார் கொங்கை மாதோர்

தலம் : குடந்தைக்காரோணம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : சோமநாதர்;
அம்பாள் : சோமசுந்தரி

திருச்சிற்றம்பலம்

வாரார் கொங்கை மாதோர்
பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள்
சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி
யந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண்டோள்
எந்தை காரோ ணத்தாரே. 1

முடியார் மன்னர் மடமான்
விழியார் மூவுல கும்மேத்தும்
படியார் பவள வாயார்
பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார் விடையார் மாட
வீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவ
மயிலார் காரோ ணத்தாரே. 2

மலையார் மங்கை பங்கர்
அங்கை அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள்
வாழை யழகார் குடமூக்கில்
முலையா ரணிபொன் முளைவெண்
நகையார் மூவா மதியினார்
கலையார் மொழியார் காதல்
செய்யுங் காரோ ணத்தாரே. 3

போதார் புனல்சேர் கந்தம்
உந்திப் பொலியவ் வழகாரும்
தாதார் பொழில்சூழ்ந் தெழிலார்
புறவி லந்தண்குட மூக்கில்
மாதார் மங்கை பாக
மாக மனைகள் பலிதேர்வார்
காதார் குழையர் காள
கண்டர் காரோ ணத்தாரே. 4

பூவார் பொய்கை அலர்தா
மரைசெங் கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்த ணாளர்
சீரா லடிபோற்றக்
கூவார் குயில்கள் ஆலும்
மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை
காவார் பொழில்சூழ்ந் தழகார்
குடந்தைக் காரோ ணத்தாரே. 5

மூப்பூர் நலிய நெதியார்
விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண்
டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பா ருடலில் அடுநோய
அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா
வண்ணங் காரோணத்தாரே. 6

ஊனார் தலைகை யேந்தி
யுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை
மானார் தோலார் புலியி
னுடையார் கரியின் னுரிபோர்வை
தேனார் மொழியார் திளைத்தங்
காடித் திகழுங் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார்
செல்வக் காரோ ணத்தாரே. 7

வரையார் திரள்தோள் மதவா
ளரக்கன் எடுப்ப மலைசேரும்
விரையார் பாதம் நுதியா
லூன்ற நெரிந்து சிரம்பத்தும்
உரையார் கீதம் பாடக்
கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும்
கரையார் பொன்னி சூழ்தண்
குடந்தைக் காரோ ணத்தாரே. 8

கரிய மாலுஞ் செய்ய
பூமேல் அயனுங் கழறிப்போய்
அரிய அண்டந் தேடிப்
புக்கும் அளக்க வொண்கிலார்
தெரிய அரிய தேவர்
செல்வந் திகழுங் குடமூக்கில்
கரிய கண்டர் கால
காலர் காரோ ணத்தாரே. 9

நாணார் அமணர் நல்ல
தறியார் நாளுங் குரத்திகள்
பேணார் தூய்மை1 மாசு
கழியார் பேச லவரோடும்
சேணார் மதிதோய் மாட
மல்கு செல்வ நெடுவீதிக்
கோணா கரமொன் றுடையார்
குடந்தைக் காரோ ணத்தாரே.

பாடம் : 1தாமெய் 10

கருவார் பொழில்சூழ்ந் தழகார்
செல்வக் காரோ ணத்தாரைத்
திருவார் செல்வம் மல்கு
சண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலையிவைபத்
துரைப்பா ருலகத்துக்
கருவா ரிடும்பைப் பிறப்ப
தறுத்துக் கவலை கழிவாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.071 பிறைகொள் சடையர்

தலம் : நறையூர்ச்சித்தீச்சரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : சித்தநாதேசுவரர்;
அம்பாள் : அழகம்மை.

திருச்சிற்றம்பலம்

பிறைகொள் சடையர் புலியி னுரியர்
பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர் கபால
மேந்துங் கையர் கங்காளர்
மறைகொள் கீதம் பாடச்
சேடர் மனையில் மகிழ்வெய்திச்
சிறைகொள் வண்டு தேனார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1

பொங்கார் சடையர் புனலர்
அனலர் பூதம் பாடவே
தங்கா தலியுந் தாமும்
உடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னி
மத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையுஞ்
சேருஞ் சித்தீச் சரத்தாரே. 2

முடிகொள் சடையர் முளைவெண்
மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள் நூலர் புலியி
னதளர் புரிபுன் சடைதாழக்
கடிகொள் சோலை வயல்சூழ்
மடுவிற் கயலா ரினம்பாயக்
கொடிகொள் மாடக் குழாமார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 3

பின்தாழ் சடைமேல் நகுவெண்
டலையர் பிரமன் தலையேந்தி
மின்தா ழுருவிற் சங்கார்
குழைதான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி
புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 4

நீரார் முடியர் கறைகொள்
கண்டர் மறைகள் நிறைநாவர்
பாரார் புகழால் பத்தர்
சித்தர் பாடி யாடவே
தேரார் வீதி முழவார்
விழவின் ஒலியுந் திசைசெல்லச்
சீரார் கோலம் பொலியும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 5

நீண்ட சடையர் நிரைகொள்
கொன்றை விரைகொள் மலர்மாலை
தூண்டு சுடர்பொன் னொளிகொள்
மேனிப் பவளத் தெழிலார்வந்
தீண்டு மாடம் எழிலார்
சோலை யிலங்கு கோபுரம்
தீண்டு மதியந் திகழும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 6

குழலார் சடையர் கொக்கின்
இறகர் கோல நிறமத்தம்
தழலார் மேனித் தவள
நீற்றர் சரிகோவ ணக்கீளர்
எழிலார் நாகம் புலியின்
உடைமேல் இசைத்து1 விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப
வருவார் சித்தீச் சரத்தாரே.

பாடம் : 1இசைந்து 7

கரையார் கடல்சூழ் இலங்கை
மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளா லெடுக்க
முடிகள் நெரித்து மனமொன்றி
உரையார் கீதம் பாட
நல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 8

நெடியான் பிரமன் நேடிக்
காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியா ரவரும் அருமா
மறையும் அண்டத் தமரரும்
முடியால் வணங்கிக் குணங்க
ளேத்தி முதல்வா வருளென்னச்
செடியார் செந்நெல் திகழும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 9

நின்றுண் சமணர் இருந்துண்
தேரர் நீண்ட போர்வையார்
ஒன்று முணரா ஊமர்
வாயில் உரைகேட் டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ண முலையில்
கபால மயல்பொழியச்2
சென்றுண் டார்ந்து சேரும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பாடம் : 2வழியச் 10

குயிலார் கோல மாத
விகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேரும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்த
காழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க் கினிய பாடல்
வல்லார் பாவ நாசமே.

திருச்சிற்றம்பலம்

01.062 நாளாய போகாமே

தலம் : கோளிலி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : கோளிலிநாதர்;
அம்பாள் : வண்டமர்பூங்குழலி

திருச்சிற்றம்பலம்

நாளாய போகாமே
நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங்
கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்குமவன்
கோளிலியெம் பெருமானே. 1

ஆடரவத் தழகாமை
அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன்
துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று
பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்
கோளிலியெம் பெருமானே. 2

நன்றுநகு நாண்மலரால்
நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய
லுற்றவன்தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர்
கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழுங்
கோளிலியெம் பெருமானே. 3

வந்தமண லால்இலிங்கம்
மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந்
தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ்
சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான்
கோளிலியெம் பெருமானே. 4

வஞ்சமனத் தஞ்சொடுக்கி
வைகலும்நற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும்
நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப்
பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங்
கோளிலியெம் பெருமானே. 5

தாவியவ1 னுடனிருந்துங்
காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி
அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி
யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற்
கோளிலியெம் பெருமானே.

பாடம் : 1காவியவன் 6

கல்நவிலு மால்வரையான்
கார்திகழு மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான்
தோத்திரஞ்செய்2 வாயினுளான்
மில்நவிலுஞ் செஞ்சடையான்
வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலும் சூலத்தான்
கோளிலியெம் பெருமானே.

பாடம் : 2தோத்திரஞ்சேர், தோத்திரஞ்சொல் 7

அந்தரத்தில் தேரூரும்
அரக்கன்மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால்
ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட
வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக்
கோளிலியெம் பெருமானே. 8

நாணமுடை வேதியனும்
நாரணனும் நண்ணவொணாத்
தாணுஎனை யாளுடையான்
தன்னடியார்க் கன்புடைமை
பாணன்இசை பத்திமையாற்
பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக்
கோளிலியெம் பெருமானே. 9

தடுக்கமருஞ் சமணரொடு
தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரும் மொழிகேளா
தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகந்
நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங்
கோளிலியெம் பெருமானே. 10

நம்பனைநல் அடியார்கள்
நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற்
கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச்
சம்பந்தன் வண்தமிழ்கொண்
டின்பமர வல்லார்க
ளெய்துவர்கள் ஈசனையே.

திருச்சிற்றம்பலம்

01.070 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்

தலம் : ஈங்கோய்மலை
அருளியவர் ; திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : மரகதாசலேஸ்வரர்;
அம்பாள் : மரகதவல்லி.

திருச்சிற்றம்பலம்

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்
மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள்
தேவி பாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங்
கடவுள் உலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 1

சூலப்படையொன் றேந்திஇரவிற்
சுடுகா டிடமாகக்
கோலச்சடைகள் தாழக்குழல்யாழ்
மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண
ஆடும் பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும்
ஈங்கோய் மலையாரே. 2

கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார்
கரியின் உரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார்
கொடியார் வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனிற்பூசும்
பெம்மான் எமையாள்வார்
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 3

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல்
மலையான் மகளோடும்
குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங்
குளிர்புன் சடைதாழப்
பறையுங்குழலுங் கழலும்ஆர்ப்பப்
படுகாட் டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 4

நொந்தசுடலைப் பொடிநீறணிவார்
நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவுந்நிலவு
கமழ்புன் சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப்
படுகாட் டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல்
ஈங்கோய் மலையாரே. 5

நீறார்அகலம் உடையார்நிரையார்
கொன்றை அரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால்
அவுணர் புரம்மூன்றும்
சீறாஎரிசெய் தேவர்பெருமான்
செங்கண் அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 6

வினையாயினதீர்த் தருளேபுரியும்
விகிர்தன் விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும்
நம்பா னலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான்
தலையோ டனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 7

பரக்கும்பெருமை இலங்கையென்னும்
பதியிற் பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும்
அணியார் விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி
யென்று நின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 8

வரியார்புலியின் உரிதோலுடையான்
மலையான் மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும்
பெம்மான் திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம்
அளவில் பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள் பெருமான்
ஈங்கோய் மலையாரே. 9

பிண்டியேன்று பெயராநிற்கும்
பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும்
மதியில் தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா
துமையோ டுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான்
ஈங்கோய் மலையாரே. 10

விழவாரொலியும் முழவும்ஓவா
வேணு புரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சே
ரணிகொள் சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ்
ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார்
கவலை களைவாரே.

திருச்சிற்றம்பலம்

01.069 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்

தலம் : அண்ணாமலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : நடுநாடு
சுவாமி : அருணாசலேஸ்வரர்;
அம்பாள் : அபீதகுஜாம்பாள்

திருச்சிற்றம்பலம்

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்
புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின்
நிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 1

மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத் தடக்கும் அதுவும்
நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொற்பேசும் வேடர் மடவார்
இதணம் அதுஏறி
அஞ்சொற்கிளிகள் ஆயோ
என்னும் அண்ணாமலையாரே. 2

ஞானத்திரளாய் நின்றபெருமான்
நல்ல அடியார்மேல்
ஊனத்திரளை நீக்கும்அதுவும்
உண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி
இழியும் இரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 3

இழைத்த இடையாள் உமையாள்பங்கர்
இமையோர் பெருமானார்
தழைத்தசடையார் விடையொன் றேறித்
தரியார் புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப்
பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்
சாரல் அண்ணாமலையாரே. 4

உருவில்திகழும் உமையாள்பங்கர்
இமையோர் பெருமானார்
செருவில் லொருகால் வளையவூன்றிச்
செந்தீ யெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த
பருமாமணி முத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 5

எனைத்தோரூழி யடியாரேத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன்
கைமேல்குழல்ஊத
அனைத்துஞ் சென்று
திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 6

வந்தித்திருக்கும் அடியார்தங்கள்
வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும்
பரமனுறை கோயில்
முந்தியெழுந்த முழவின் ஓசை
முதுகல்வரைகள் மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல்
அண்ணாமலையாரே. 7

மறந்தான்கருதி வலியைநினைந்து
மாறாயெடுத்தான்தோள்
நிறந்தான்முரிய நெறியவூன்றி
நிறையஅருள் செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று
தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்
செய்தார் அண்ணாமலையாரே. 8

தேடிக்காணார் திருமால்பிரமன்
தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேய் உகுத்த
முத்தம்பல கொண்டு
கூடிக்குறவர் மடவார்
குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல்
அண்ணாமலையாரே. 9

தட்டையி டுக்கித் தலையைப்பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்
பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்
தணையும் அண்ணாமலையாரே. 10

அல்லாடரவம் இயங்குஞ்சாரல்
அண்ணாமலையாரை
நல்லார் பரவப்
படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான
பத்தும் இவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்
வணங்க மன்னிவாழ்வாரே.

திருச்சிற்றம்பலம்

01.068 பொடிகொளுருவர் புலியினதளர்

தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : வடநாடு
சுவாமி : கைலாயநாதர்;
அம்பாள்: கைலாயநாயகி.

திருச்சிற்றம்பலம்

பொடிகொளுருவர் புலியினதளர்
புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள் கொன்றை கலந்த
நீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல்
தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார்
கயிலை மலையாரே. 1

புரிகொள்சடையார் அடியர்க் கெளியார்
கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த
தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க
இருள்1 கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக்
கயிலை மலையாரே.

பாடம் : 1மழுங்கியிருள் 2

மாவினுரிவை மங்கைவெருவ
மூடி முடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த
இறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர்
திரங்கல் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ்
கயிலை மலையாரே. 3

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட
முதல்வர் மதனன்றன்
தென்னீர்உருவம் அழியத்திருக்கண்
சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி
னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்தேடுங்
கயிலை மலையாரே. 4

ஒன்றும்பலவு மாயவேடத்
தொருவர்கழல் சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார்
கூடித் திரண்டெங்கும்
தென்றியிருளில்திகைத்த கரிதண்
சாரல் நெறியோடிக்
கன்றும் பிடியும் அடிவாரஞ்சேர்
கயிலை மலையாரே. 5

தாதார் கொன்றை
தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த
புனிதர் பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய்
அறநான் கருள்செய்த
காதார் குழையர் வேதத்திரளர்
கயிலை மலையாரே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே
லெரியொண் பகழியார்
எடுத்தான் திரள்தோள்
முடிகள்பத்தும்இடிய விரல்வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டாராளாக்
குறுகி வருங்கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலா லுதைத்தார்
கயிலை மலையாரே. 8

ஊணாப் பலிகொண் டுலகிலேற்றார்
இலகு மணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார்
புகழு மிருவர்தாம்
பேணாவோடி நேடஎங்கும்
பிறங்கும் எரியாகிக்
காணாவண்ணம் உயர்ந்தார் போலுங்
கயிலை மலையாரே. 9

விருதுபகரும் வெஞ்சொற்சமணர்
வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக் கொள்ளார்
புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்
தம்பால்இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார் போலுங்
கயிலை மலையாரே. 10

போரார்கடலிற் புனல்சூழ்காழிப்
புகழார் சம்பந்தன்
காரார் மேகங் குடிகொள் சாரற்
கயிலை மலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை
செப்பும் அடியார்மேல்
வாரா பிணிகள்
வானோருலகில் மருவுமனத்தாரே.

திருச்சிற்றம்பலம்

01.067 வேதமோதி வெண்ணூல்பூண்டு

தலம் : பழனம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : ஆபத்சகாயர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

வேதமோதி வெண்ணூல்பூண்டு
வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார்
புலியி னுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும்
நம்பா எனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார்
பழன நகராரே. 1

கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும்
உடையார் காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப்
பொன்றப்புறந் தாளால்
எண்ணாதுதைத்த எந்தைபெருமான்
இமவான் மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப்
பழன நகராரே. 2

பிறையும்புனலுஞ் சடைமேலுடையார்
பறைபோல் விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையார்
உலகர் தலைமகன்
அறையும்மலர்கொண் டடியார்பரவி
ஆடல் பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியும்ஓவாப்
பழன நகராரே. 3

உரமன்னுயர்கோட் டுலறுகூகை
யலறும் மயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி
யெழிலா ரலர்மேலைப்
பிரமன்தலையின் நறவமேற்ற
பெம்மான் எமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன்
பழன நகராரே. 4

குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த
கொல்லேறுடை யண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங்
கடல்போற் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள்
குதிகொண் டெதிருந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும்
பழன நகராரே. 5

வீளைக்குரலும் விளிசங்கொலியும்
விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப்
பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கிற்
குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப்
பழன நகராரே. 6

பொய்யாமொழியார் முறையாலேத்திப்
புகழ்வார் திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல்
சேர்ந்த அகலத்தார்
கையாடலினார் புனலால்மல்கு
சடைமேற் பிறையோடும்
பையாடரவ1 முடனேவைத்தார்
பழன நகராரே.

பாடம் : 1பைவாயரவ 7

மஞ்சோங்குயரம் உடையான்மலையை
மாறா யெடுத்தான்தோள்
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும்
அடர வூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த
நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த
பழன நகராரே. 8

கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை
கமழ்புன் சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக
முழுதுந் தாவிய
நெடியான்நீள்தா மரைமேலயனும்
நேடிக் காணாத
படியார்பொடியா டகலமுடையார்
பழன நகராரே. 9

கண்டான் கழுவா முன்னேயோடிக்
கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல்
லோரார் பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ
மதுவாய் மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும்
பழன நகராரே. 10

வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும்
வேணுபுரந்தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க
ஞான சம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும்
பெருமான் பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும்
வல்லார் நல்லாரே.

திருச்சிற்றம்பலம்

01.066 பங்கமேறு மதிசேர்சடையார்

தலம் : சீர்காழி – 09-சண்பை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே. 1

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே. 2

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 3

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே. 4

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம் அருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய1 கொல்லை யெருதேறி
நலமார் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே.

பாடம் : 1குன்றொத்துடைய 5

மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து மெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன் மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று 7

இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யும் அம்மான்ஏரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையால்
தரளத்தோடு பவளம்ஈனுஞ் சண்பை நகராரே. 8

மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன் மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே. 9

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே. 10

வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம் பந்தன்சொற்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.

திருச்சிற்றம்பலம்

01.065 அடையார் தம்புரங்கள்

தலம் : பல்லவனீச்சுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பல்லவனேசுவரர்;
அம்பாள் : சௌந்தரநாயகி.

திருச்சிற்றம்பலம்

அடையார் தம்புரங்கள் மூன்றும்
ஆரழ லில்லழுந்த
விடையார் மேனிய ராய்ச்சீறும்
வித்தகர் மேயவிடம்
கடையார் மாடம் நீடியெங்கு1
கங்குல்புறந் தடவப்
படையார் புரிசைப் பட்டினஞ்சேர்
பல்லவ னீச்சரமே.

பாடம் : 1நீடியோங்கும் 1

எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறும்
எந்தைபிரான் இமையோர்
கண்ணா யுலகங் காக்கநின்ற
கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு
வைகலுந்தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே. 2

மங்கை யங்கோர் பாகமாக
வாள்2 நில வார்சடைமேல்
கங்கை யங்கே வாழவைத்த
கள்வன் இருந்தஇடம்
பொங்க யஞ்சேர் புணரியோத
மீதுயர் பொய்கையின்மேல்
பங்க யஞ்சேர் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

பாடம் : 2வான் 3

தாரார் கொன்றை பொன்தயங்கச்
சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம்வைத்த
நின்மலன் மன்னுமிடம்
போரார் வேற்கண் மாதர்மைந்தர்
புக்கிசை பாடலினாற்
பாரார் கின்ற பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே. 4

மைசேர் கண்டர் அண்டவாணர்
வானவ ருந்துதிப்ப
மெய்சேர் பொடியர்3 அடியாரேத்த
மேவி இருந்தவிடங்
கைசேர் வளையார் விழைவினோடு
காதன்மை யாற்கழலே
பைசே ரரவார் அல்குலார்சேர்
பல்லவ னீச்சரமே.

பாடம் : 3மெய்சேர்கோடி 5

குழலி னோசை வீணைமொந்தை
கொட்ட முழவதிரக்
கழலி னோசை யார்க்கஆடுங்
கடவு ளிருந்தவிடஞ்
சுழியி லாருங் கடலிலோதந்
தெண்டிரை மொண்டெறியப்
பழியி லார்கள் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே. 6

வெந்த லாய வேந்தன்வேள்வி
வேரறச் சாடிவிண்ணோர்
வந்தெ லாமுன் பேணநின்ற
மைந்தன் மகிழ்ந்தஇடம்
மந்த லாய மல்லிகையும்
புன்னை வளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே. 7

தேரரக்கன் மால்வரையைத்
தெற்றி யெடுக்கஅவன்
தாரரக்குந் திண்முடிகள்
ஊன்றிய சங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த
காலமெ லாமுணரப்
பாரரக்கம் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே. 8

அங்க மாறும் வேதநான்கும்
ஓதும் அயன்நெடுமால்
தங்க ணாலும் நேடநின்ற
சங்கரன் தங்குமிடம்
வங்க மாரு முத்தம்இப்பி
வார்கட லூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே. 9

உண்டுடுக்கை யின்றியேநின்
றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார்
கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை
சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும்
பல்லவ னீச்சரமே. 10

பத்த ரேத்தும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரத்தெம்
அத்தன் தன்னை அணிகொள்காழி
ஞானசம் பந்தன்சொல்
சித்தஞ் சேரச் செப்பும்மாந்தர்
தீவினை நோயிலராய்
ஒத்த மைந்த உம்பர்வானில்
உயர்வினொ டோங்குவரே.

திருச்சிற்றம்பலம்

01.064 அறையார்புனலு மாமலரும்

தலம் : பூவணம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : பாண்டியநாடு
சுவாமி : பாஸ்கரபுரீஸ்வரர்;
அம்பாள் : சுந்தரநாயகி.

திருச்சிற்றம்பலம்

அறையார்புனலு மாமலரும்
ஆடர வார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர்
கூறுடை யானிடமாம்
முறையால்1 முடிசேர் தென்னர்சேரர்
சோழர்கள் தாம்வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந்
தென்திருப் பூவணமே.

பாடம் : 1முறையார் 1

மருவார்மதில்மூன் றொன்றஎய்து
மாமலை யான்மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த
வும்பர் பிரானவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக்
கழல்மன்னர் காத்தளித்த
திருவால்மலிந்த சேடர்வாழுந்
தென்திருப் பூவணமே. 2

போரார்மதமா உரிவைபோர்த்துப்
பொடியணி மேனியனாய்க்
காரார் கடலின் நஞ்சமுண்ட
கண்ணுதல் விண்ணவனூர்
பாரார் வைகைப் புனல்வாய்பரப்பிப்
பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற
தென்திருப் பூவணமே. 3

கடியாரலங்கற் கொன்றைசூடிக்
காதிலொர் வார்குழையன்
கொடியார்வெள்ளை யேறுகந்த
கோவண வன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும்
பல்புக ழாற்பரவச்
செடியார்வைகை சூழநின்ற
தென்திருப் பூவணமே. 4

கூரார்வாளி சிலையிற்கோத்துக்
கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர்
பால்மகிழ்ந் தானிடமாம்
ஆராவன்பில் தென்னர்சேரர்
சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந்
தென்திருப் பூவணமே. 5

நன்றுதீதென் றொன்றிலாத
நான்மறை யோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற
தேவர் பிரானிடமாம்
குன்றிலொன்றி ஓங்கமல்கு
குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந்
தென்திருப் பூவணமே. 6

பைவாயரவம் அரையிற்சாத்திப்
பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி
ஏறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார்2 மைந்தரோடுங்
கலவியி னால்நெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத்
தென்திருப் பூவணமே.

பாடம் : 2கைவாழ்வினையார் 7

மாடவீதி மன்னிலங்கை
மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள்
கொள்கையி னார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப்
பன்மணி பொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும்
உயர்திருப் பூவணமே. 8

பொய்யாவேத நாவினானும்
பூமகள் காதலனும்
கையால்தொழுது கழல்கள்போற்றக்
கனலெரி யானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட
வைகை மணிகொழித்துச்
செய்யார்கமலம் தேன்அரும்புந்
தென்திருப் பூவணமே. 9

அலையார்புனலை நீத்தவருந்
தேரரும் அன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த
நின்மலன் தன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும்
மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந்
தென்திருப் பூவணமே. 10

திண்ணார்புரிசை மாடமோங்குந்
தென்திருப் பூவணத்துப்
பெண்ணார்மேனி யெம்மிறையைப்
பேரியல் இன்தமிழால்
நண்ணாருட்கக் காழிமல்கு
ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார்
பயில்வது வானிடையே.

திருச்சிற்றம்பலம்

01.063 எரியார்மழுவொன் றேந்தி – பல்பெயர்ப்பத்து

தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

எரியார்மழுவொன் றேந்தி
அங்கை யிடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய்
மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன்
தாமரைநான் முகத்தன்
பெரியான் பிரமன் பேணியாண்ட
பிரமபுரத்தானே. 1

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப்
பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார்
கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி
யிந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை
வேணுபுரத்தானே. 2

நகலார்தலையும் வெண்பிறையும்
நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய்
பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில்
அயலின் மையாலமரர்1
புகலால்மலிந்த பூம்புகலி
மேவியபுண்ணியனே.

பாடம் : 1அயலின்மயலாலமரர் 3

சங்கோடிலங்கத் தோடுபெய்து
காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா
யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ்
செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட
வெங்குருமேயவனே. 4

தணிநீர்மதியஞ் சூடிநீடு
தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய்
பெய்கலை வவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும்
ஆழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த
தோணிபுரத்தானே. 5

கவர்பூம்புனலுந் தண்மதியுங்
கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா
யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாய
அவள்தன் மன்னனாள்மண்மேல்
தவர்பூம்பதிக ளெங்குமெங்குந்
தங்குதராயவனே. 6

முலையாழ்கெழுவ2 மொந்தைகொட்ட
முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய்
நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந்
தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன்
சிரபுரமேயவனே.

பாடம் : 2முலையாழ்கெழும் 7

எருதேகொணர்கென் றேறியங்கை
இடுதலையேகலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய்
கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு
ளொருபதுதேர் தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட
புறவமர் புண்ணியனே. 8

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந்
தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணம்
காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா
யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச்
சண்பையமர்ந்தவனே. 9

நிழலால்மலிந்த கொன்றைசூடி
நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய்
கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகம் கவ்வைதீர
ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக்
காழியமர்ந்தவனே. 10

கட்டார் துழாயன் தாமரையா
னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய்
செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள
நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ்
கொச்சையமர்ந்தவனே. 11

கடையார்கொடிநன் மாடவீதிக்
கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக
ஞானசம்பந் தன்நல்ல
படையார்மழுவன் மேல்மொழிந்த
பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும்
அமருலகாள்பவரே.

திருச்சிற்றம்பலம்

01.061 நறைகொண்ட மலர்தூவி

தலம் : செங்காட்டங்குடி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : உத்தராபதீஸ்வரர்;
அம்பாள் : குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

நறைகொண்ட மலர்தூவி
விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார்
முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ்
செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான்
கணபதீச் சரத்தானே. 1

வாரேற்ற பறையொலியுஞ்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ
டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்றம் உடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே. 2

வரந்தையான் சோபுரத்தான்
மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான்
கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான்
கணபதீச் சரத்தானே. 3

தொங்கலுங் கமழ்சாந்தும்
அகில்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த
அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த
செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்1
கணபதீச் சரத்தானே.

பாடம் : 1யோர்சடையான் 4

பாலினால் நறுநெய்யாற்
பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை
கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ்
செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான்
கணபதீச் சரத்தானே. 5

நுண்ணியான் மிகப்பெரியான்
ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நம்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே. 6

மையினார் மலர்நெடுங்கண்
மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம்
அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச்2
செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான்
கணபதீச் சரத்தானே.

பாடம் : 2அகன்கழனிச் 7

தோடுடையான் குழையுடையான்
அரக்கன்தன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான்
பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங்
குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையான் நாடுடையான்
கணபதீச் சரத்தானே. 8

ஆனூரா வுழிதருவான்
அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான்
வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங்
குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான்
கணபதீச் சரத்தானே. 9

செடிநுகருஞ் சமணர்களுஞ்
சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க்
கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்
கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே. 10

கறையிலங்கு மலர்க்குவளை
கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச்
செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார்
வானுலகத் திருப்பாரே 11

திருச்சிற்றம்பலம்

01.060 வண்டரங்கப் புனற்கமல

தலம் : சீர்காழி – 05-தோணிபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

வண்டரங்கப் புனற்கமல
மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும்
அளியரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர்
திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை
பரிந்தொருகாற் பகராயே. 1

எறிசுறவங் கழிக்கானல்
இளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும்
அருவினையேன்1 பயனன்றே
செறிசிறார் பதம்ஓதுந்
திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார்2 மலர்க்கண்ணி
வேதியர்க்கு விளம்பாயே.

பாடம் : 1அருவினையின் 2வெறிநீறார் 2

பண்பழனக் கோட்டகத்து
வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே
கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால்
பழியாமோ மொழியாயே. 3

காண்டகைய செங்கா லொண்
கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து
பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத்
திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென்
றடியறிய உணர்த்தாயே. 4

பாராரே யெனையொருகால்
தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற்
கபோ தகங்காள்
தேராரும் நெடுவீதித்
திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக்
கென்நிலைமை நிகழ்த்தீரே. 5

சேற்றெழுந்த மலர்க்கமலச்
செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள்
விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி
புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே
கூடுமா கூறீரே. 6

முன்றில்வாய் மடல்பெண்ணைக்
குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறுநோய்
அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந்
திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென்
கூர்பயலை கூறீரே. 7

பானாறு மலர்ச்சூதப்
பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக
மொழியும்எழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்தமரர்
கோனாரை யென்னிடத்தே3
வரவொருகாற் கூவாயே.

பாடம் : 3என்னிடைக்கே 8

நற்பதங்கள் மிகஅறிவாய்
நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகிற்
பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர்
திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென்
மெய்ப்பயலை விளம்பாயே. 9

சிறையாரும் மடக்கிளியே
இங்கேவாதே னொடுபால்
முறையாலே உணத்தருவன்
மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடல்றோணி
புரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம்
எனக்கொருகாற் பேசாயே. 10

போர்மிகுத்த வயல்தோணி
புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத்
திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன்
சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார்
சிவலோகஞ் சேர்வாரே.

திருச்சிற்றம்பலம்

01.059 ஒடுங்கும் பிணிபிறவி

தலம் : தூங்கானைமாடம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : நடுநாடு
சுவாமி : சுடர்க்கொழுந்தீசர்;
அம்பாள் : ஆமோதனம்பாள்.

திருச்சிற்றம்பலம்

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீ ரெல்லாம்
அடிக ளடிநிழற்கீ ழாளாம் வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்கும்
கெழுமனைகள் தோறும் மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 1

பிணிநீர சாதல் பிறத்தலிவை
பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலகம் எய்தலுறில்
அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணிநீல கண்டம் உடையபிரான்
மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழும்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 2

சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர்1
அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

பாடம் : 1தலம்வந்துநீர் 3

ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை
முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 4

மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியல்தீர மேலுலக மெய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா
லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 5

பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா
படர்நோக்கிற் கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு
நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 6

இறையூண் துகளோ டிடுக்கண் எய்தி
யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
நீள்கழ லேநாளும் நினைமின் சென்னிப்
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றை
பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 7

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
இறையே பிரியா தெழுந்து போதும்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
காதலி யுந்தானுங் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 8

நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத்
தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 9

பகடூர்பசி நலிய நோய்வருதலாற்
பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
திருந்திழை யுந்தானும் பொருந்திவாழும்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 10

மண்ணார் முழவதிரும் மாடவீதி
வயற்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல் பத்துங்
கருத்துணரக் கற்றாருங் கேட்டாருங்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும்
விதியது வேயாகும் வினைமாயுமே. 11

திருச்சிற்றம்பலம்

01.058 அரியும் நம்வினை

தலம் : கரவீரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : கரவீரேஸ்வரர்;
அம்பாள் : பிரத்யக்ஷமின்னம்மை.

திருச்சிற்றம்பலம்

அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டம்
கரிய வன்திக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. 1

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்திக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. 2

ஏதம் வந்தடை யாஇனி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே. 3

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டம்
கறைய வன்திக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே. 4

பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னான்உறை யுங்கர வீரத்தைத்
நண்ணு வார்வினை நாசமே. 5

நிழலி னார்மதி சூடிய நீள்சடை1
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.

பாடம் : 1சூடினன் நீள்சடை 6

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
தொண்டர் மேல்துயர் தூரமே. 7

புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே. 8

வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தான்உறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே. 9

செடிஅ மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்2
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.

பாடம் : 2கொள்ளன்மின் 10

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வால்தமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.

திருச்சிற்றம்பலம்

01.057 ஒள்ளி துள்ளக் கதிக்கா

தலம் : வேற்காடு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : தொண்டைநாடு
சுவாமி : வேதபுரீஸ்வரர்;
அம்பாள் : பாலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே. 1

ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே. 2

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே. 3

ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வி டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ்ப டும்மவர் பாவமே. 4

காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே. 5

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. 6

மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னான்உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 7

மூரல் வெண்மதி சூடும் முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே. 8

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னான்உனறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடரப்பட் டான்இறை
நெருக்கி னானை நினைமினே. 9

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாஎழில்
கூறி னார்க்கில்லை குற்றமே. 10

விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே. 11

திருச்சிற்றம்பலம்

01.056 காரார் கொன்றை கலந்த

தலம் : பாற்றுறை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : ஆதிமூலேசுவரர்;
அம்பாள் : மேகலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே. 1

நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே. 2

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளும் உறைவரே. 3

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே. 4

மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே. 5

போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே. 6

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே. 7

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே. 8

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே. 9

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே. 10

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே. 11

திருச்சிற்றம்பலம்

01.055 ஊறி யார்தரு நஞ்சினை

தலம் : மாற்பேறு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : தொண்டைநாடு
சுவாமி : தயாநிதீஸ்வரர்;
அம்பாள் : கருணாம்பிகை. 11

திருச்சிற்றம்பலம்

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே. 1

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே. 2

பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே. 3

சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே. 4

மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே. 5

உரையா தாரில்லை யொன்றும்நின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தஎம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே. 8

இருவர் தேவருந் தேடித் திரிந்தினி1
ஒருவராலறி வொண்ணிலன்2
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.

பாடம் : 1திரிந்ததில்; 2லறிவுண்டிலன் – லறியுண்டிலன். 9

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்3
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.

பாடம் : 3கொள்ளலும் 10

மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

திருச்சிற்றம்பலம்

01.054 பூத்தேர்ந் தாயன கொண்டுநின்

தலம் : ஓத்தூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : தொண்டைநாடு
சுவாமி : வேதநாதர்;
அம்பாள் : இளமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. 1

இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. 2

உள்வேர் போல நொடிமை யினார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 3

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே. 4

குழையார் காதீர்1 கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே.

பாடம் : 1காதா 5

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே. 6

தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே. 7

என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 8

நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரே2யுமை நேடியே.

பாடம் : 2நின்றாரே 9

கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே. 10

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

திருச்சிற்றம்பலம்

01.053 தேவராயும் அசுரராயுஞ்

தலம் : முதுகுன்றம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : நடுநாடு
சுவாமி : விருத்தகிரீஸ்வரர்;
அம்பாள் : விருத்தாம்பிகை. 11

திருச்சிற்றம்பலம்

தேவராயும் அசுரராயுஞ்
சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும்
விண்எரிகால் நீரும்
மேவராய விரைமலரோன்
செங்கண்மால் ஈசன்என்னும்
மூவராய முதலொருவன்
மேயதுமு துகுன்றே. 1

பற்றுமாகி வானுளோர்க்குப்
பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர் தீக் காலு1
மேலை விண்இயமா னனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய்
மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான்
மேயதுமு துகுன்றே.

பாடம் : 1தீகாலும் 2

வாரிமாகம் வைகுதிங்கள்
வாளரவஞ் சூடி
நாரிபாகம்2 நயந்துபூமேல்
நான்முகன்றன் தலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன்
செற்றலுந் தோன்றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான்
மேயதுமு துகுன்றே.

பாடம் : 2நாரிபாகர் 3

பாடுவாருக் கருளும்எந்தை
பனிமுதுபௌ வமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி
யண்டர்நிலை கெடலும்
நாடுதானும் ஊடுமோடி
ஞாலமும்நான் முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத்
துயர்ந்ததுமு துகுன்றே. 4

வழங்குதிங்கள் வன்னிமத்தம்
மாசுணம்மீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத்
தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க
பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி
மேயதுமு துகுன்றே. 5

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட்
டொல்லரா நல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந்
தான்நினைத்தைம் புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க்
கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி
மேயதுமு துகுன்றே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்துபோயிற்று. 7

மயங்கும்மாயம் வல்லராகி
வானினொடு நீரும்
இயங்குவோருக் கிறைவனாய
இராவணன்தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன்
புணர்முலைமா துமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த
மேயதுமு துகுன்றே. 8

ஞாலமுண்ட மாலும்மற்றை
நான்முகனும் மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா
ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம்
இசையஎப்போ தும்ஏத்தும்
மூலமுண்ட நீற்றர் வாயான்
மேயதுமு துகுன்றே. 9

உறிகொள்கையர் சீவரத்தர்
உண்டுழல்மிண்டர் சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே
நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப்
பொங்குவிடத் தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன்
மேயதுமு துகுன்றே. 10

மொய்த்துவானோர் பல்கணங்கள்
வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமையென்னும்
பிரமபுரத் தலைவன்
…. …. …. …. …. …. …. ….

இப்பதிகத்தில் 11-ஆம் செய்யுளில் பின்னிரண்டடிகள் மறைந்துபோயின.

திருச்சிற்றம்பலம்

01.052 மறையுடையாய் தோலுடையாய்

தலம் : நெடுங்களம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : நித்யசுந்தரேஸ்வரர்;
அம்பாள் : மங்களநாயகி.

திருச்சிற்றம்பலம்

மறையுடையாய் தோலுடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய்
கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 1

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ்
கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த
திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல்
பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 2

நின்னடியே வழிபடுவான்
நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல்
என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும்
பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 3

மலைபுரிந்த மன்னவன்றன்
மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும்
அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய்
தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 4

பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார்
பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு
தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா2 அன்பினோடுந்
தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே.

பாடம் : 1பாங்கிநல்லார் 2தாங்கிநல்லா 5

விருத்தனாகிப் பாலனாகி
வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக்
கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன்
அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 6

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக்
கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த
மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்
றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 7

குன்றின்உச்சி மேல்விளங்குங்
கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை
யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா
லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 8

வேழவெண்கொம் பொசித்தமாலும்
விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர்
சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான்
கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 9

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற
வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந்
தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால்
தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய்
நெடுங்களம்மே யவனே. 10

நீடவல்ல வார்சடையான்
மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற்
சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை
ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார்
பாவம் பறையுமே. 11

திருச்சிற்றம்பலம்

பெருமாள் திருமொழி

பெருமாள் திருமொழி தனியன்கள்

பெருமாள் திருமொழி
முதல் திருமொழி – இருளிரியச்சுடர்மணிகள்
இரண்டாம் திருமொழி – தேட்டருந்திறல்
மூன்றாம் திருமொழி – மெய்யில்வாழ்க்கையை
நான்காம் திருமொழி – ஊனேறு
ஐந்தாம் திருமொழி – தருதுயரந்தடாயேல்
ஆறாம் திருமொழி – ஏர்மலர்ப்பூங்குழல்
ஏழாம்திருமொழி – ஆலைநீள்கரும்பு
எட்டாம்திருமொழி – மன்னுபுகழ்
ஒன்பதாம்திருமொழி – வன்தாளினிணை
பத்தாம்திருமொழி – அங்கணெடுமதின்

பத்தாம் திருமொழி – அங்கணெடுமதின்

ஸ்ரீ ராமாயணகதைச் சுருக்கம்

741 அங்கணெடுமதிள்புடைசூழயோத்தியென்னும்
அணிநகரத்துலகனைத்தும்விளக்கும்சோதி
வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக்காய்த்தோன்றி
விண்முழுதுமுயக்கொண்டவீரன்தன்னை
செங்கணெடுங்கருமுகிலையிராமன்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை
என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2) 1

742 வந்தெதிர்ந்ததாடகைதன்உரத்தைக்கீறி
வருகுருதிபொழிதரவன்கணையொன்றேவி
மந்திரங்கொள்மறைமுனிவன்வேள்விகாத்து
வல்லரக்கருயிருண்டமைந்தன்காண்மின்
செந்தளிர்வாய்மலர்நகைசேர்செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
அந்தணர்களொருமூவாயிரவரேத்த
அணிமணியாசனத்திருந்தவம்மான்றானே. 2

743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்
சினவிடையோன்சிலையிறுத்துமழுவாளேந்தி
வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை
தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
எவ்வரிவெஞ்சிலைத்தடக்கையிராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே. 3

744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால்
தென்னகரந்துறந்து துறைக்கங்கைதன்னைப்
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குபாதுகமுமரசுமீந்து
சித்திரகூடத்திருந்தான்றன்னைஇன்று
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்குஇமையவர்நேரொவ்வார்தாமே. 4

745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்றனுயிரைவாங்கி
சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்
திரிதலால்தவமுடைத்தித்தரணிதானே. 5

746 தனமருவுவைதேகிபிரியலுற்றுத்
தளர்வெய்திச்சடாயுவைவைகுந்தத்தேற்றி
வனமருவுகவியரசன்காதல்கொண்டு
வாலியைகொன்றிலங்கைநகரரக்கர்கோமான்
சினமடங்கமாருதியால்சுடுவித்தானைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
இனிதமர்ந்தஅம்மானைஇராமன்றன்னை
ஏத்துவாரிணையடியேயேத்தினேனே. 6

747 குரைகடலையடலம்பால்மறுகவெய்து
குலைகட்டிமறுகரையையதனாலேறி
எரிநெடுவேலரக்கரொடுமிலங்கைவேந்தன்
இன்னுயிர்கொண்டவன்தம்பிக்கரசுமீந்து
திருமகளோடினிதமர்ந்தசெல்வன்றன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
அரசமர்ந்தானடிசூடுமரசையல்லால்
அரசாகவெண்ணேன்மற்றரசுதானே. 7

748 அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி
அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்
தன் பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி
உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள்
செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்
பருகுவோம்இன்னமுதம்மதியோமன்றே. 8

749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று
செழுமறையோனுயிர்மீட்டுத் தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்
தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட
திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
உறைவானை மறவாதவுள்ளந்தன்னை
உடையோம்மற்றுறுதுயரமடையோமன்றே. 9

750 அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி
அடலரவப்பகையேறியசுரர்தம்மை
வென்று இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற
விண்முழுதுமெதிர்வரத்தன்தாமம்மேவி
சென்றினிதுவீற்றிருந்தவம்மான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
என்றும்நின்றானவனிவனென்றேத்திநாளும்
இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2) 10

751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை
எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று
அதுமுதலாத்தன்னுலகம்புக்கதீறா
கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2) 11

ஒன்பதாம் திருமொழி – வன்தாளினிணை

தனயன்கான்புகத்தசரதன்புலம்புதல்

730 வன்தாளினிணைவணங்கிவளநகரம்
தொழுதேத்தமன்னனாவான்
நின்றாயை அரியணைமேலிருந்தாயை
நெடுங்கானம்படரப்போகு
என்றாள் எம்மிராமாவோ!
உனைப்பயந்தகைகேசிதஞ்சொற்கேட்டு
நன்றாகநானிலத்தையாள்வித்தேன்
நன்மகனே! உன்னைநானே. (2) 1

731 வெவ்வாயேன்வெவ்வுரைகேட்டுஇருநிலத்தை
வேண்டாதேவிரைந்து வென்றி
மைவாயகளிறொழிந்துதேரொழிந்து
மாவொழிந்துவனமேமேவி
நெய்வாயவேல்நெடுங்கண்நேரிழையும்
இளங்கோவும்பின்புபோக
எவ்வாறுநடந்தனை? எம்மிரமாவோ!
எம்பெருமான்! என்செய்கேனே? 2

732 கொல்லணைவேல்வரிநெடுங்கண்கோசலைதன்
குலமதலாய்! குனிவில்லேந்தும்
மல்லணைந்தவரைத்தோளா! வல்வினையேன்
மனமுருக்கும்வகையேகற்றாய்
மெல்லணைமேல்முன்துயின்றாய்
இன்றினிப்போய்வியன்கானமரத்தின்நீழல்
கல்லணைமேல்கண்டுயிலக்கற்றனையோ?
காகுத்தா! கரியகோவே! 3

733 வாபோகுவாஇன்னம்வந்து
ஒருகால்கண்டுபோமலராள்கூந்தல்
வேய்போலுமெழில்தோளிதன்பொருட்டா
விடையோன்றன்வில்லைச்செற்றாய்!
மாபோகுநெடுங்கானம்வல்வினையேன்
மனமுருக்கும்மகனே! இன்று
நீபோகஎன்னெஞ்சம்இருபிளவாய்ப்
போகாதேநிற்குமாறே! 4

734 பொருந்தார்கைவேல்நுதிபோல்
பரல்பாயமெல்லடிகள்குருதிசோர
விரும்பாதகான்விரும்பிவெயிலுறைப்ப
வெம்பசிநோய்கூர இன்று
பெரும்பாவியேன்மகனே! போகின்றாய்
கேகயர்கோன்மகளாய்ப்பெற்ற
அரும்பாவிசொற்கேட்டஅருவினையேன்
என்செய்கேன்? அந்தோ! யானே. 5

735 அம்மாவென்றுகந்தழைக்கும்ஆர்வச்சொல்
கேளாதே அணிசேர்மார்வம்
என்மார்வத்திடையழுந்தத்தழுவாதே
முழுசாதேமோவாதுச்சி
கைம்மாவின்நடையன்னமென்னடையும்
கமலம்போல்முகமும்காணாது
எம்மானையென்மகனையிழந்திட்ட
இழிதகையேனிருக்கின்றேனே. 6

736 பூமருவுநறுங்குஞ்சிபுஞ்சடையாய்ப்புனைந்து
பூந்துகில்சேரல்குல்
காமரெழில்விழலுடுத்துக்கலனணியாது
அங்கங்களழகுமாறி
ஏமருதோளென்புதல்வன்யானின்று
செலத்தக்கவனந்தான்சேர்தல்
தூமறையீர்! இதுதகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர்நீரே. 7

737 பொன்பெற்றாரெழில்வேதப்புதல்வனையும்
தம்பியையும்பூவைபோலும்
மின்பற்றாநுண்மருங்குல்மெல்லியலென்
மருகிகையும்வனத்தில்போக்கி
நின்பற்றாநின்மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும்நீள்வானில்போக்க
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில்
இனிதாகவிருக்கின்றாயே. 8

738 முன்னொருநாள்மழுவாளிசிலைவாங்கி
அவன்தவத்தைமுற்றும்செற்றாய்
உன்னையுமுன்னருமையையுமுன்மோயின்
வருத்தமும்ஒன்றாகக்கொள்ளாது
என்னையும்என்மெய்யுரையும்மெய்யாகக்
கொண்டுவனம்புக்கஎந்தாய்!
நின்னையேமகனாகப்பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும்நெடுந்தோள்வேந்தே! 9

739 தேன்நகுமாமலர்க்கூந்தல்கௌசலையும்
சுமித்திரையும்சிந்தைநோவ
கூனுருவில்கொடுந்தொழுத்தைசொற்கேட்ட
கொடியவள்தன்சொற்கொண்டு இன்று
கானகமேமிகவிரும்பிநீதுறந்த
வளநகரைத்துறந்து நானும்
வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
மனுகுலத்தார்தங்கள்கோவே! 10

740 ஏரார்ந்தகருநெடுமால்இராமனாய்
வனம்புக்கஅதனுக்காற்றா
தாரர்ந்ததடவரைத்தோள்தயரதன்தான்
புலம்பியஅப்புலம்பல்தன்னை
கூரார்ந்தவேல்வலவன்கோழியர்கோன்
குடைக்குலசேகரஞ்சொற்செய்த
சீரார்ந்ததமிழ்மாலையிவைவல்லார்
தீநெறிக்கண்செல்லார்தாமே. (2) 11

எட்டாம் திருமொழி – மன்னுபுகழ்

சக்கரவர்த்தித்திருமகனைக்கௌசலையார்தாலாட்டும்பாசுரம்

719 மன்னுபுகழ்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!
தென்னிலங்கைகோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!
என்னுடையஇன்னமுதே! இராகவனே! தாலேலோ. (2) 1

720 புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம்படைத்தவனே!
திண்டிறலாள்தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தய்!
கண்டவர்தம்மனம்வழங்கும் கணபுரத்தென்கருமணியே!
எண்டிசையுமாளுடையாய்! இராகவனே! தாலேலோ. 2

721 கொங்குமலிகருங்குழலாள் கோசலைதன்குலமதலாய்!
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகாதாசரதீ!
கங்கையிலும்தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே!
எங்கள்குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ. 3

722 தாமரைமேலயனவனைப் படைத்தவனே! தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன்மணவாளா! வண்டினங்கள்
காமரங்களிசைபாடும் கணபுரத்தென்கருமணியே!
ஏமருவும்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. 4

723 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 5

724 சுற்றமெல்லாம்பின்தொடரத்தொல்கானமடைந்தவனே!
அற்றவர்கட்கருமருந்தே! அயோத்திநகர்க்கதிபதியே!
கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே!
சிற்றவைதன்சொல்கொண்ட சீராமா! தாலேலோ. 6

725 ஆலினிலைப்பாலகனாய் அன்றுலகமுண்டவனே!
வாலியைகொன்று அரசுஇளையவானரத்துக்களித்தவனே!
காலின்மணிகரையலைக்கும் கணபுரத்தென்கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ. 7

726 மலையதனாலணைகட்டி மதிளிலங்கையழித்தவனே!
அலைகடலைக்கடைந்து அமரர்க்கமுதருளிச்செய்தவனே!
கலைவலவர்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே!
சிலைவலவா! சேவகனே! சீராம! தாலேலோ. (2) 8

727 தளையவிழும்நறுங்குஞ்சித் தயரதன்றன்குலமதலாய்!
வளையவொருசிலையதனால் மதிளிலங்கையழித்தவனே!
களைகழுநீர்மருங்கலரும் கணபுரத்தென்கருமணியே!
இளையவர்கட்கருளுடையாய்! இராகவனே! தாலேலோ. 9

728 தேவரையுமசுரரையும் திசைகளையும்படைத்தவனே!
யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர்த்துயின்றவனே!
காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே!
ஏவரிவெஞ்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (2) 10

729 கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்காகுத்தன்!
தன்னடிமேல் தாலேலோஎன்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும்வேல்வலவன் குடைக்குலசேகரஞ்சொன்ன
பன்னியநூல்பத்தும்வல்லார் பாங்காயபத்தர்களே (2) 11

ஏழாம்திருமொழி – ஆலைநீள்கரும்பு

கண்ணனதுபிள்ளைச்செயல்களைக்காணப்பெறாததேவகியின்புலம்பல்

708 ஆலைநீள்கரும்பன்னவன்தாலோ
அம்புயுத்தடங்கண்ணினன்தாலோ
வேலைநீர்நிறத்தன்னவன்தாலோ
வேழப்போதகமன்னவன்தாலோ
ஏலவார்குழலென்மகன்தாலோ
என்றென்றுன்னைஎன்வாயிடைநிறைய
தாலொலித்திடும்திருவினையில்லாத்
தாயரில்கடையாயினதாயே. (2) 1

709 வடிக்கொளஞ்சனமெழுதுசெம்மலர்க்கண்மருவி
மேலினிதொன்றினைநோக்கி
முடக்கிச்சேவடிமலர்ச்சிறுகருந்தாள்
பொலியுநீர்முகில்குழவியேபோல
அடக்கியாரச்செஞ்சிறுவிரலனைத்தும்
அங்கையோடணைந்தானையிற்கிடந்த
கிடக்கைகண்டிடப்பெற்றிலனந்தோ!
கேசவா! கெடுவேன்கெடுவேனே. 2

710 முந்தைநன்முறையுன்புடைமகளிர்
முறைமுறைதந்தம்குறங்கிடையிருத்தி
எந்தையே! என்றன்குலப்பெருஞ்சுடரே!
எழுமுகில்கணத்தெழில்கவரேறே!
உந்தையாவன்என்றுரைப்பநின்செங்கேழ்
விரலினும்கடைக்கண்ணினும்காட்ட
நந்தன்பெற்றனன்நல்வினையில்லா
நங்கள்கோன்வசுதேவன்பெற்றிலனே. 3

711 களிநிலாவெழில்மதிபுரைமுகமும்
கண்ணனே! திண்கைமார்வும்திண்டோளும்
தளிமலர்க்கருங்குழல்பிறையதுவும்
தடங்கொள்தாமரைக்கண்களும்பொலிந்த
இளமையின்பத்தைஇன்றென்றன்கண்ணால்
பருகுவேற்கிவள்தாயெனநினைந்த
அளவில்பிள்ளைமையின்பத்தையிழந்த
பாவியேனெனதாவிநில்லாதே. 4

712 மருவுநின்திருநெற்றியில்சுட்டியசைதர
மணிவாயிடைமுத்தம்
தருதலும் உன்தன்தாதையைப்போலும்
வடிவுகண்டுகொண்டுள்ளமுள்குளிர
விரலைச்செஞ்சிறுவாயிடைச்சேர்த்து
வெகுளியாய்நின்றுரைக்கும்அவ்வுரையும்
திருவிலேனொன்றும்பெற்றிலேன்எல்லாம்
தெய்வநங்கையசோதைபெற்றாளே. 5

713 தண்ணந்தாமரைக்கண்ணனே! கண்ணா!
தவழ்ந்தெழுந்துதளர்ந்ததோர்நடையால்
மண்ணில்செம்பொடியாடிவந்துஎன்தன்
மார்வில்மன்னிடப்பெற்றிலேனந்தோ
வண்ணச்செஞ்சிறுகைவிரலனைத்தும்
வாரிவாய்க்கொண்டஅடிசிலின்மிச்சல்
உண்ணப்பெற்றிலேன்ஓ! கொடுவினையேன்
என்னைஎஞ்செய்யப்பெற்றதெம்மோயே? 6

714 குழகனே! என்றன்கோமளப்பிள்ளாய்!
கோவிந்தா! என்குடங்கையில்மன்னி
ஒழுகுபேரெழிலிளஞ்சிறுதளிர்போல்
ஒருகையாலொருமுலைமுகம்நெருடா
மழலைமென்னகையிடையிடையருளா
வாயிலேமுலையிருக்கவென்முகத்தே
எழில்கொள்நின்திருக்கண்ணிணைநோக்கத்
தன்னையும்இழந்தேனிழந்தேனே. 7

715 முழுதும்வெண்ணெயளைந்துதொட்டுண்ணும்
முகிழிளஞ்சிறுத்தாமரைக்கையும்
எழில்கொள்தாம்புகொண்டடிப்பதற்கெள்கு
நிலையும்வெண்தயிர்தோய்ந்தசெவ்வாயும்
அழுகையுமஞ்சிநோக்குமந்நோக்கும்
அணிகொள்செஞ்சிறுவாய்நெளிப்பதுவும்
தொழுகையும்இவைகண்டஅசோதை
தொல்லையின்பத்திறுதிகண்டாளே. 8

716 குன்றினால்குடைகவித்ததும்கோலக்
குரவைகோத்ததும்குடமாட்டும்
கன்றினால்விளவெறிந்ததும்காலால்
காளியன்தலைமிதித்ததுமுதலா
வென்றிசேர்பிள்ளைநல்விளையாட்டமனைத்திலும்
அங்கென்னுள்ளமுள்குளிர
ஒன்றும்கண்டிடப்பெற்றிலேனடியேன்
காணுமாறினியுண்டெனிலருளே. 9

717 வஞ்சமேவியநெஞ்சுடைப்பேய்ச்சி
வரண்டுநார்நரம்பெழக்கரிந்துக்க
நஞ்சமார்தருசுழிமுலையந்தோ!
சுவைத்துநீயருள்செய்துவளர்ந்தாய்
கஞ்சன்நாள்கவர்கருமுகிலெந்தாய் !
கடைப்பட்டேன்வெறிதேமுலைசுமந்து
தஞ்சமேலொன்றிலேனுய்ந்திருந்தேன்
தக்கதேநல்லதாயைப்பெற்றாயே. 10

718 மல்லைமாநகர்க்கிறையவன்தன்னை
வான்செலுத்திவந்தீங்கணைமாயத்து
எல்லையில்பிள்ளைசெய்வனகாணாத்
தெய்வத்தேவகிபுலம்பியபுலம்பல்
கொல்லிகாவலன்மாலடிமுடிமேல்
கோலமாம்குலசேகரன்சொன்ன
நல்லிசைத்தமிழ்மாலைவல்லார்கள்
நண்ணுவாரொல்லைநாரணனுலகே. (2) 11

ஆறாம் திருமொழி – ஏர்மலர்ப்பூங்குழல்

ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்கியுரைத்தல்

698 ஏர்மலர்ப்பூங்குழலாயர்மாதர்
எனைப்பலருள்ளவிவ்வூரில் உன்தன்
மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே
உன்தன்பொய்யைக்கேட்டு
கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்
கூசிநடுங்கியமுனையாற்றில்
வார்மணற்குன்றில்புலரநின்றேன்
வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (2) 1

699 கெண்டையொண்கண்மடவாளொருத்தி
கீழையகத்துத்தயிர்கடையக்
கண்டு ஒல்லைநானும்கடைவனென்று
கள்ளவிழியைவிழித்துப்புக்கு
வண்டமர்பூங்குழல்தாழ்ந்துலாவ
வாண்முகம்வேர்ப்பச்செவ்வாய்த்துடிப்ப
தண்டயிர்நீகடைந்திட்டவண்ணம்
தாமோதரா! மெய்யறிவன்நானே. 2

700 கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கேயொருத்திதன்பால்
மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து
ஒருபேதைக்குப்பொய்குறித்து
புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்
புணர்திஅவளுக்கும்மெய்யனல்லை
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே
வளர்கின்றதாலுன்றன்மாயைதானே. 3

701 தாய்முலைப்பாலிலமுதிருக்கத்
தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று
பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு
பித்தனென்றேபிறரேசநின்றாய்
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப
யான்விடவந்தஎன்தூதியோடே
நீமிகுபோகத்தைநன்குகந்தாய்
அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே. 4

702 மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு
வீங்கிருள்வாயென்றன்வீதியூடே
பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்
போகின்றபோதுநான்கண்டுநின்றேன்
கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்
கைவிளிக்கின்றதும்கண்டேநின்றேன்
என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?
இன்னமங்கேநடநம்பி! நீயே. 5

703 மற்பொருதோளுடைவாசுதேவா!
வல்வினையேன்துயில்கொண்டவாறே
இற்றையிரவிடையேமத்தென்னை
இன்னணைமேலிட்டகன்றுநீபோய்
அற்றையிரவுமோர்பிற்றைநாளும்
அரிவையரோடும்அணைந்துவந்தாய்
எற்றுக்குநீயென்மருங்கில்வந்தாய் ?
எம்பெருமான்! நீயெழுந்தருளே. 6

704 பையரவின்னணைப்பள்ளியினாய்!
பண்டையோமல்லோம்நாம் நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம்
வைகியெம்சேரிவரவொழிநீ
செய்யவுடையும்திருமுகமும்
செங்கனிவாயும்குழலும்கண்டு
பொய்யொருநாள்பட்டதேயமையும்
புள்ளுவம்பேசாதேபோகுநம்பீ! 7

705 என்னைவருகவெனக்குறித்திட்டு
இனமலர்முல்லையின்பந்தர்நீழல்
மன்னியவளைப்புணரப்புக்கு
மற்றென்னைக்கண்டுழறாநெகிழ்ந்தாய்
பொன்னிறவாடையைக்கையில்தாங்கிப்
பொய்யச்சங்காட்டிநீபோதியேலும்
இன்னமென்கையகத்தீங்கொருநாள்வருதியேல்
என்சினம்தீர்வன்நானே. 8

706 மங்கலநல்வனமாலைமார்விலிலங்க
மயில்தழைப்பீலிசூடி
பொங்கிளவாடையரையில்சாத்திப்
பூங்கொத்துக்காதிற்புணரப்பெய்து
கொங்குநறுங்குழலார்களோடு
குழைந்துகுழலினிதூதிவந்தாய்
எங்களுக்கேயொருநாள்வந்தூத
உன்குழலின்னிசைபோதராதே. 9

707 அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை
நயந்திளவாய்ச்சிமார்கள்
எல்லிப்பொழுதினிலேமத்தூடி
எள்கியுரைத்தவுரையதனை
கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான்
குலசேகரனின்னிசையில்மேவி
சொல்லியவின்தமிழ்மாலைபத்தும்
சொல்லவல்லார்க்கில்லைதுன்பந்தானே. (2) 10

ஐந்தாம் திருமொழி – தருதுயரந்தடாயேல்

விற்றுவக்கோட்டம்மானிடம்வேறுகதியில்லைஎன்றுஆழ்வார்தெரிவித்தல்

688 தருதுயரம்தடாயேல் உன்சரணல்லால்சரணில்லை
விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே!
அரிசினத்தாலீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தேயழும் குழவிஅதுவேபோன்றிருந்தேனே. (2) 1

689 கண்டாரிகழ்வனவே காதலன்தான்செய்திடினும்
கொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல்
விண்டோய்மதிள்புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா! நீ
கொண்டாளாயாகிலும் உன்குரைகழலேகூறுவனே. 2

690 மீன்நோக்கும்நீள்வயல்சூழ் விற்றுவக்கோட்டம்மா! என்
பால்நோக்காயாகிலும் உன்பற்றல்லால்பற்றில்லேன்
தான்நோக்காது எத்துயரம்செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கிவாழும் குடிபோன்றிருந்தேனே. 3

691 வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால்
மாளாதகாதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர்தரினும் விற்றுவக்கோட்டம்மா! நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே. 4

692 வெங்கண்திண்களிறடர்த்தாய்! விற்றுவக்கோட்டம்மானே!
எங்குப்போயுய்கேன்? உன்னிணையடியேயடையலல்லால்
எங்கும்போய்க்கரைகாணாது எறிகடல்வாய்மீண்டேயும்
வங்கத்தின்கூம்பேறும் மாப்பறவைபோன்றேனே. 5

693 செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர்வெங்கதிரோற்கல்லால் அலராவால்
வெந்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா! உன்
அந்தமில்சீர்க்கல்லால் அகங்குழையமாட்டேனே. 6

694 எத்தனையும் வான்மறந்தகாலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்தமாமுகிலே பார்த்திருக்கும்மற்றவைபோல்
மெய்த்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா! என்
சித்தம்மிகவுன்பாலே வைப்பனடியேனே. 7

695 தொக்கிலங்குயாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப்புறம்நிற்கமாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்குமுகில்நிறத்தாய்! விற்றுவக்கோட்டம்மா! உன்
புக்கிலங்குசீரல்லால் புக்கிலன்காண்புண்ணியனே! 8

696 நின்னையேதான்வேண்டி நீள்செல்வம்வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையேசேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா!
நின்னையேதான்வேண்டி நிற்பனடியேனே. 9

697 விற்றுவக்கோட்டம்மா! நீவேண்டாயேயாயிடினும்
மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன
நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே. (2) 10

நான்காம் திருமொழி – ஊனேறு

ஆழ்வார்திருவேங்கடமலையிற்பிறத்தலைஅவாவுதல்

677 ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன்
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லால்
கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. (2) 1

678 ஆனாதசெல்வத்து அரம்பையர்கள்தற்சூழ
வானாளும்செல்வமும் மண்ணரசும்யான்வேண்டேன்
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில்
மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே. 2

679 பின்னிட்டசடையானும் பிரமனும்இந்திரனும்
துன்னிட்டுப்புகலரிய வைகுந்தநீள்வாசல்
மின்வட்டச்சுடராழி வேங்கடக்கோன்தானுமிழும்
பொன்வட்டில்பிடித்து உடனேபுகப்பெறுவேனாவேனே. 3

680 ஒண்பவளவேலையுலவு தண்பாற்கடலுள்
கண்துயிலும்மாயோன் கழலிணைகள்காண்பதற்கு
பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும்வேங்கடத்து
செண்பகமாய்நிற்கும் திருவுடையேனாவேனே. 4

681 கம்பமதயானை கழுத்தகத்தின்மேலிருந்து
இன்பமரும்செல்வமும் இவ்வரசும்யான்வேண்டேன்
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலைமேல்
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே. 5

682 மின்னனையநுண்ணிடையார் உருப்பசியும்மேனகையும்
அன்னவர்தம்பாடலொடும் ஆடலவையாதரியேன்
தென்னவெனவண்டினங்கள் பண்பாடும்வேங்கடத்துள்
அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவனே. 6

683 வானாளும்மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல்
கானாறாய்ப்பாயும் கருத்துடையேனாவேனே. 7

684 பிறையேறுசடையானும் பிரமனுமிந்திரனும்
முறையாயபெருவேள்விக் குறைமுடிப்பான்மறையானான்
வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல்
நெறியாய்க்கிடக்கும் நிலையுடையேனாவேனே. 8

685 செடியாயவல்வினைகள் தீர்க்கும்திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய்காண்பேனே. (2) 9

686 உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன்
செம்பவளவாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான்பொன்மலைமேல்ஏதுனுமாவேனே. 10

687 மன்னியதண்சாரல் வடவேங்கடத்தான்தன்
பொன்னியலும்சேவடிகள்காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும்கூர்வேல் குலசேகரன்சொன்ன
பன்னியநூல்தமிழ்வல்லார் பாங்காயபத்தர்களே. 11

இரண்டாம் திருமொழி – தேட்டருந்திறல்

அரங்கனடியாரதுஅடிமைத்திறத்தில்ஈடுபடுதல்

658 தேட்டரும்திறல்தேனினைத் தென்னரங்கனை திருமாதுவாழ்
வாட்டமில்வனமாலைமார்வனைவாழ்த்தி மால்கொள்சிந்தையராய்
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும்மெய்யடியார்கள்தம்
ஈட்டம்கண்டிடக்கூடுமேல் அதுகாணும்கண்பயனாவதே (2) 1

659 தோடுலாமலர்மங்கை தோளிணைதோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரைமேய்த்தும் இவையேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந்தாடும்வேட்கையென்னாவதே? 2

660 ஏறடர்த்ததும்ஏனமாய்நிலம்கீண்டதும் முன்னிராமனாய்
மாறடர்த்ததும்மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்டுஅரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர்சேவடிச்செழுஞ்சேறு என்சென்னிக்கணிவனே. 3

661 தோய்த்ததண்தயிர்வெண்ணெய்பாலுடன்உண்டலும் உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடையெம்பிரான் என்னரங்கனுக்கடியார்களாய்
நாத்தழும்பெழநாரணாவென்றழைத்து மெய்தழும்பத்தொழு
தேத்தி இன்புறும்தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென்நெஞ்சமே. 4

662 பொய்சிலைக்குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவீர்த்தகோன்
செய்சிலைச்சுடர்சூழொளித் திண்ணமாமதிள்தென்னரங்கனாம்
மெய்சிலைக்கருமேகமொன்று தம்நெஞ்சில்நின்றுதிகழப்போய்
மெய்சிலிர்ப்பவர்தம்மையேநினைந் தென்மனம்மெய்சிலிர்க்குமே. 5

663 ஆதியந்தமனந்தமற்புதமானவானவானவர்தம்பிரான்
பாதமாமலர்சூடும்பத்தியிலாத பாவிகளுய்ந்திட
தீதில்நன்னெறிகாட்டி எங்கும்திரிந்தரங்கனெம்மானுக்கே
காதல்செய்தொண்டர்க்கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென்னெஞ்சமே. 6

664 காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வனரங்கனென்னும் அரும்பெருஞ்சுடரொன்றினை
சேரும்நெஞ்சினராகிச் சேர்ந்துகசிந்திழிந்தகண்ணீர்களால்
வாரநிற்பவர்தாளிணைக்கு ஒருவாரமாகுமென்னெஞ்சமே. 7

665 மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுநறுந்துழாய்
மாலையுற்றவரைப்பெருந்திருமார்வனை மலர்க்கண்ணனை
மாலையுற்றெழுந்தாடிப்பாடித் திரிந்தரங்கனெம்மானுக்கே
மாலையுற்றிடும்தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென்நெஞ்சமே. 8

666 மொய்த்துக்கண்பனிசோரமெய்கள்சிலிர்ப்ப ஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடுநட்டமிட்டெழுந்து ஆடிப்பாடியிறைஞ்சி என்
அத்தனச்சனரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தராமவர்பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும்பித்தரே. 9

667 அல்லிமாமலர்மங்கைநாதன்அரங்கன்மெய்யடியார்கள்தம்
எல்லையிலடிமைத்திறத்தினில்என்றுமேவுமனத்தனாம்
கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன்
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே. (2) 10

மூன்றாம் திருமொழி – மெய்யில்வாழ்க்கையை

ஆழ்வார்உலகத்தோடுதாம்சேராதுஅரங்கனன்பராதல்

668 மெய்யில்வாழ்க்கையை மெய்யெனக்கொள்ளும் இவ்
வையந்தன்னொடும் கூடுவதில்லையான்
ஐயனேஅரங்கா என்றழைக்கின்றேன்
மையல்கொண்டொழிந்தேன் என்தன்மாலுக்கே. (2) 1

669 நூலினேரிடையார்திறத்தே நிற்கும்
ஞாலந்தன்னொடும் கூடுவதில்லையான்
ஆலியாஅழையா அரங்கா! என்று
மாலெழுந்தொழிந்தே ன் என்தன்மாலுக்கே. 2

670 மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும்
பாரினாரொடும் கூடுவதில்லையான்
ஆரமார்வன் அரங்கனனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன்பித்தனே. 3

671 உண்டியேயுடையே யுகந்தோடும் இம்
மண்டலத்தொடும் கூடுவதில்லையான்
அண்டவாணன் அரங்கன் வன்பேய்முலை
உண்டவாயன்தன் உன்மத்தன்காண்மினே. 4

672 தீதில்நன்னெறிநிற்கஅல்லாதுசெய்
நீதியாரொடும் கூடுவதில்லையான்
ஆதிஆயன் அரங்கன் அந்தாமரைப்
பேதைமாமணவாளன்றன் பித்தனே. 5

673 எம்பரத்தரல்லாரொடும் கூடலன்
உம்பர்வாழ்வை ஒன்றாககருதிலன்
தம்பிரானமரர்க்கு அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையும்பித்தனே. 6

674 எத்திறத்திலும் யாரொடும்கூடும் அச்
சித்தந்தன்னைத்தவிர்த்தனன் செங்கண்மால்
அத்தனே! அரங்கா! என்றழைக்கின்றேன்
பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே. 7

675 பேயரே எனக்குயாவரும் யானுமோர்
பேயனேஎவர்க்கும் இதுபேசியென்?
ஆயனேஅரங்கா என்றழைக்கின்றேன்
பேயனாயொழிந்தேன் எம்பிரானுக்கே. 8

676 அங்கையாழி அரங்கனடியிணை
தங்குசிந்தைத் தனிப்பெரும்பித்தனாம்
கொங்கர்கோன் குலசேகரன்சொன்னசொல்
இங்குவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 9

முதல் திருமொழி – இருளிரியச்சுடர்மணிகள்

ஸ்ரீரங்கநாதனதுசேவையைநாடுதல்

647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி
இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த
அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்
அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி
திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும்
கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்
கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2) 1

648 வாயோரீரைஞ்ஞாறுதுதங்களார்ந்த
வளையுடம்பினழல்நாகம்உமிழ்ந்தசெந்தீ
வீயாதமலர்ச்சென்னிவிதானமேபோல்
மேன்மேலும்மிகவெங்கும்பரந்ததன்கீழ்
காயாம்பூமலர்ப்பிறங்கலன்னமாலைக்
கடியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
மாயோனைமணத்தூணேபற்றிநின்றுஎன்
வாயாரஎன்றுகொலோவாழ்த்தும்நாளே? 2

649 எம்மாண்பின்அயன்நான்குநாவினாலும்
எடுத்தேத்திஈரிரண்டுமுகமுங்கொண்டு
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடும்
தொழுதேத்திஇனிதிறைஞ்சநின்ற செம்பொன்
அம்மான்றன்மலர்க்கமலக்கொப்பூழ்தோன்ற
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
அம்மான்றனடியிணைக்கீழலர்களிட்டங்
கடியவரோடென்றுகொலோஅணுகும்நாளே? 3

650 மாவினைவாய்பிளந்துகந்தமாலைவேலை
வண்ணணைஎன்கண்ணணை வன்குன்றமேந்தி
ஆவினையன்றுய்யக்கொண்டஆயரேற்றை
அமரர்கள்தந்தலைவனைஅந்தமிழினின்பப்
பாவினை அவ்வடமொழியைப்பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
கோவினைநாவுறவழுத்திஎன்றன்கைகள்
கொய்ம்மலர்தூய்என்றுகொலோகூப்பும்நாளே? 4

651 இணையில்லாவின்னிசையாழ்கெழுமியின்பத்
தும்புருவும்நாரதனுமிறைஞ்சியேத்த
துணையில்லாத்தொன்மறைநூல்தோத்திரத்தால்
தொன்மலர்க்கணயன்வணங்கியோவாதேத்த
மணிமாடமாளிகைகள்மல்குசெல்வ
மதிளரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
மணிவண்ணனம்மானைக்கண்டுகொண்டுஎன்
மலர்சென்னியென்றுகொலோவணங்கும்நாளே? 5

652 அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை
அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும்
தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்
திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும்
களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்
கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும்
ஒளிமதிசேர்திருமுகமும்கண்டுகொண்டுஎன்
உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே? 6

653 மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி
ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்
துறந்து இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்
தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான
அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
நிறம்திகழும்மாயோனைக்கண்டுஎன்கண்கள்
நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே? 7

654 கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்
கொலையாழிகொடுந்தண்டுகொற்றவொள்வாள்
காலார்ந்தகதிக்கருடனென்னும்வென்றிக்
கடும்பறவையிவையனைத்தும்புறஞ்சூழ்காப்ப
சேலார்ந்தநெடுங்கழனிசோலைசூழ்ந்த
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும்
மாலோனைக்கண்டின்பக்கலவியெய்தி
வல்வினையேனென்றுகொலோவாழும்நாளே? 8

655 தூராதமனக்காதல்தொண்டர்தங்கள்
குழாம்குழுமித்திருப்புகழ்கள்பலவும்பாடி
ஆராதமனக்களிப்போடழுதகண்ணீர்
மழைசோரநினைந்துருகியேத்திநாளும்
சீரார்ந்தமுழுவோசைபரவைகாட்டும்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும்
போராழியம்மானைக்கண்டுதுள்ளிப்
பூதலத்திலென்றுகொலோபுரளும்நாளே? 9

656 வன்பெருவானகமுய்யஅமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய
துன்பமிகுதுயரகலஅயர்வொன்றில்லாச்
சுகம்வளரஅகமகிழுந்தொண்டர்வாழ
அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்
அணியரங்கன்திருமுற்றத்து அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டுயானும்
இசைந்துடனேயென்றுகொலோவிருக்குநாளே? (2) 10

657 திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும்
கடல்விளங்குகருமேனியம்மான்றன்னைக்
கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால்
குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்
கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த
நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2) 11