பெய்யெனப் பெய்யும் மழை!

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”
என்பது ஔவை கூற்று.

“நடக்காத ஒன்று நடந்தால் மழைபெய்யும்” என்றும் “அத்திபூத்தால் ஆறு பெருகிவிடும்” என்றும் “புண்ணியவான் பெய்யென்றால் மழை பெய்யும்” என்றும் சொற்றொடர்கள் நம்மிடையே வழங்கப் பெருகின்றன. மழை பற்றிய விஞ்ஞானக் கருத்துக்கள் வேறாக இருப்பினும் மக்களின் நல்லெண்ணத்திற்கும் செயலுக்கும் ஏற்றபடியே மழை பெய்யும் என்பது நம் முன்னோர்கள் கருத்து.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் ‘பாடுவார் முத்தப்பர்’.பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டில் திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் ‘கீழச்சிவல்பட்டி’யில் கி.பி1750ஆம் ஆண்டு தனவணிக குலத்தில் அழகப்ப செட்டியார் – லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றினார் முத்தப்பர். இயல்பாகவே தமிழ்க்கவிதை பாடும் ஆற்றலுடையவராய் விளங்கினார். கவிபாடும் ஆற்றலோடு, பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். எனவே இவரை அனைவரும் ‘பாடுவார் முத்தப்பர்’ என்று அழைத்தனர்.

இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார், செவ்வூர் அழகுப் புலவர் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார்.

பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள் குன்றக்குடி சண்முகநாதருக்கு ஒரு வெள்ளி மயில் வாகனம் செய்து வைத்தார். நல்லதொரு நாளில் குன்றக்குடியில் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவிழா அன்று முருகப்பெருமான் புது வெள்ளி மயில் வாகனத்தில் ஏறி பவனி வந்தார். முன்வரிசையில் முத்தப்பரும் சேனாபதியடிகளும் சென்று கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக மழையில்லாமல் ஊர் வறட்சியடைந்திருந்த காலம் அது.

சேனாபதியடிகள் கேட்டார் “முத்தப்பா! நீண்ட நெடுங்காலமாக மழையே இல்லாமல் நாடு வறண்டு கிடக்கிறது, நாட்டு மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நீ தான் உன் பாடலால், இறையருளால் மழை பொழிய செய்ய வேண்டும்”.

“நான் பாடுகிறேன் இறையருளால் மழை பொழியும்” என்றார் முத்தப்பர். பின்னர் தெற்கு ரத வீதிக்கு சென்றதும் சுவாமியை கீழே இறக்கி வைத்தார்கள். “பாடு” என்று சேனாபதியடிகள் கூற முத்தப்பர் பாடினார்;

“அள்ளிநிதி யங்கொடுக்கும் புலன்வயற்சே
னாபதிஎன் ஐயன் குன்றை
வள்ளிமண வாளனுக்கு வெள்ளிமயில்
செய்துவைத்த மகிமை பாரீர்!
வெள்ளியறி யாமல்மழை பெய்கிறதே
என்றமொழி மெய்தான்; வெள்ளிப்
புள்ளிமயி லேறிமுரு கன்பவனி
வரக்கண்டு பொழிந்த வாறே!”

பாட்டு முடியவில்லை. அதற்குள்ளாக மழை ‘சோ’வென்று கொட்டத் தொடங்கியது. நெடு நேரமாகியும் நிற்கவில்லை. மனமகிழ்ந்த சேனாபதியடிகள் “போதும்! முத்தப்பா போதும்! குன்றக்குடி கழனிகள் செழிக்க தேவையான அளவு நீர் நிரம்பிவிட்டது” என்றார்.

மழைபொழிய பாடிய வள்ளல் மழையை நிறுத்தவும் பாடினார்;

“வந்து மழைபொழியும் வானேவெஞ் சூர்தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில் – தொந்தரையாய்
நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல; மாற்றிவிடு!
கீர்த்திவரும்; நாட்டன்மொழி கேள்.”

பாட்டும் நின்றது! மழையும் நின்றது!

குன்றக்குடியில் மழை பொழியவும் நிற்கவும் பாடிய முத்தப்பர் “ஏழை எளியோர்களின் குடி ஈடேறும் படிக்கு” என்ற தன் வாக்குப்படி பலமுறை மழை பொழிய பாட்டு பாடி மழைபொழிய செய்து மக்களின் உழைப்புக்குப் பலன் கிடைக்கச் செய்திருக்கிறார். நெடுமரம் மலையரசி கோயிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலிலும் மழை வேண்டி முத்தப்பர் பாடியுள்ளார்.

குன்றக்குடியில் முத்தப்பர் மழை வேண்டி பாடியதின் நினைவாக அங்கே அவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

அன்பன்
பழ.கைலாஷ்.