கலித்துறை – 02 (3 வது கலியியல்)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

ஊரும் பேரறை நாவிழி மூக்கு முறுகாதும்
சீருங் காயமு நின்னன வென்று தெரியாமே
ஊரும் பேருரு வாதியெ லாநம் முடையென்னா
ஆரும் பேதைய ரோவுணர் வார்நூ லயிலோனே. – (48)

தான தனத்தா தான தனத்தா தனதானா.

வீவு ணுதிப்பே மேவு சகத்தாள் வினையீரே
மூவர் முதற்றே வாக விருப்போன் முதுவேதா
யாவு நினைப்பா லீயு முரத்தான் யதிராசா
தூவி மயிற்கோ னேய மிகுத்தோர் சுகமேலே. – (49)

ஈரைந் தாகிய வங்குலி கூப்பி யீரெழிற்கை
சேர நெஞ்சிலு நெற்றியின் மேலுஞ் செய்வதுபோல்
ஓரைந் தைந்தையுஞ் சேயவன் பாதத் தொட்டிவிடா
வீரம் விஞ்சிட நாடுதிர் மோக்க வேட்கையரே. – (50)

மட்டி லீர்கரும் பேனழுக் கேறு வார்கதுப்பை
வெட்டி யந்தலை முண்டிதம் பார்த்த மேன்மையைப்போல்
எட்டு நெஞ்செழு மிவ்வுல காசை யேமழித்துப்
பிட்டு ணீசுரன் மைந்தனை நாடிற் பீடுறுமே. – (51)

கூடுந றுங்கே சங்களி லொன்றுங் கொய்யாமல்
நீடுதல் கண்ட வாறணி மன்றுண் ணின்றாடு
பீடுடை நம்பர் நந்தன னின்பம் பெய்மேகம்
நாடுத வந்தா னீளினி னைந்த நன்காமே. – (52)

தானன தான தானன தான தானானா

நாரண னான ராமனும் ராம னாடார்வே
பூரண மான வேடனு நீறு பூசீசா
காரண னேயெ னாநினை வேலர் காறானே
ஆரரு ளீதெ ணாரரு ளாழி யாடாரே. – (53)

வான்மதி வளர்செவ் வேணியன் மொய்ம்பா மலையேறி
கூன்மதி யெனுட னீவிளை யாடுங் குணியோவென்
மேன்மதி முகவெம் மானயி லானை விழைவோரே
தேன்மதி யுறுவார் கீழ்நடை மேவார் திகையாரே. – (54)

தத்த தத்தன தத்த தத்தன தத்தனா

சொக்க ரிக்குடி மக்க ளுக்குள துக்கமால்
பொக்கெ னக்கெட வக்கி புக்கெழு மக்கியாய்
நக்க டுக்கைகொ ணக்கர் பக்கந டக்குமா
வுக்கி ரக்குக னுக்கு மிக்கதி ருக்குமோ. – (55)

ஏசறு சென்னியின் மாமணி மின்முடி யேதாங்கும்
ஆசையொ டிவ்வுல காளினு முண்ணல மாமோசேய்
தேசவிர் பொன்னடி யேமுடி மேலணி தெய்வீக
தாசரு ளங்களி யேகொளும் வாதனை சாராதே. – (56)

தந்தா தனனா தனனா தன்னா தன்னா.

ஒன்றாய் மிகையா யுயிரா யுடலா யுறவாய்
அன்றா யறிவா மொளியாய் வெளியா யருளாய்
நின்றே நிறைதே வொருதே வதுவே நிகழ்சேய்
என்றே யுணர்வா ரணவார் நசைநோ யினையே. – (57)

தானா தானா தானா தானா தானானா (நெட்டெழுத்துச் செய்யுள்]

காரீ மாலோ டானா வேதா காணாமா
சீரீ மாதே வாமே லோனீ சேயானோ
னாரீ காலே பாடே ணேசா னாவோரா
லேரீ தூமா னாவா ரேசா லேகாரே. – (58)

தனதன தானா தன்னா தன்னா தனனா

திருமுரு காமா சிலைபோழ் திறலோய் தெருளோய்
குருமுரு காகோ குகவே டழைநீள் குருகே
றொருமுரு காமான் மகளார் வலவா வுரனார்
செருமுரு காகா வெனவோ துநர்பார் செனியார். – (59)

தன்னா தன்னா தனதன தனதன தானதனா.

அறுகா லளிமூ சலர்பல தருதரு வார்வளமே
சிறுகா லனம்வாழ் பலகுள முளவெழில் சேர்பொழிலே
உறுகா லனிலா மதுரையி லுறைமுரு கோனஞரே
தெறுகா றருவா னடிநினை மதியினர் சீர்பெறவே. – (60)

அம்பொ னோதியை யார்திருத் தவரெனக் குனித்தோன்
வெம்பு வஞ்சகர் முப்புர வியன்கெடச் சிரித்தோன்
நம்பு மாமக னாகிய நறுங்கய முகத்தான்
தம்பி யன்புடை யார்நமன் விடுதுயர் தடுப்பார். – (61)

தரும மூர்த்தியென் சண்முகன் றாணினைந் தாற்று
கரும யாகமு ளார்க்கிடு புண்ணியங் கரிசில்
பெருமை யாயொரு பிறப்பள வுந்தவ யாகக்
குருமை யார்க்கிட னூறள வும்பலன் கொடுக்கும். – (62)

சேய வன்றன தாணினைந் தேசறு செபஞ்செய்
நேய யாகமு ளார்க்கிடு புண்ணிய நிரம்பா
ஆயி ரம்பிறப் பளவுந் தியான வியாகர்க்
கீயு நன்மையொர் பிரமகற் பாந்தமின் பிசைக்கும். – (63)

தீனர் நாயக னாயவர் பூசைகொள் செவ்வேள்
கான மேதரு தாளச ரோருகக் கடிசால்
ஞான யாகமு ளார்க்கிடு நல்லவை பெரிய
மான மாம்பிர ளயமள வும்பலன் வழங்கும். – (64)

கரவயிற் பெருமான் றிருவருட் பொலிவினைக் கண்டால்
இரவொடு பகலும் மிரவினிற் பகலிர வுகளும்
பரவிய பகலிற் பகலிர வென்பவு மிலைவான்
இரவியி னுயர்வா மறிவுள ததையுயிரேயும். – (65)

முன்பி னீட்டிய குற்றமெ லாமற முன்னியே
அன்பர் மாட்டரு ளேவளர்க் கின்றகண் ணாளநான்
இன்பம் வேட்டுனை யேபுகழ் வேலையி லிங்குளேன்
துன்ப மோட்டுபு கோடிக டம்பணி சூடியே. – (66)

வானை நோக்கும ரங்களு லாத்தரு வானரம்
போனை வேனுனை யேபிடி யேனிருள் போழுநீ
பூனை போலெனை யேகொடு போகுதி பூம்புன
மானை நேடிவ னம்புகு நெட்டயின் மள்ளனே. – (67)

கோவென்ற படைமீளி யனைவோரு நனிநாடு கோவாளிதான்
நோவென்ற சிகியாகி வருகால மதிலேறி ஞொள்காதசூ
ரேவென்ற திதிபால ருயர்வாழ்வு தரல்போல வேசூழுநான்
காவென்ற பொழுதேகை தருவாயொர் விபுவாய காங்கேயனே. – (68)

தான தந்தனன தந்தன தனந்த தனனா

நீ டை கொண்டவிரு மிஞ்சிகொ ளிலஞ்சி நிலைவாழ்
கோடை மஞ்சரிவி ரும்புள மலிந்த குமரா
பாடை வந்திடுமு னங்கரு துகின்ற படியே
பீடை வென்றமல வின்பது பிறங்க நினையே. – (69)

மாதமொரு பூப்பூத்து வருடமொரு காய்காய்க்கும் வல்லி
ஏதுமிடை யூறின்றிப் படருமர மாயிருந்த வென்னை
வாதனையிஃதாமெனவென் மனமிருந்து வேறுசெய்த வாறு
கோதிருளும் வேறுபட வருள்புரிதி வேல்பிடித்த கோவே. – (70)

எண்ணிறந்த விவகாரத் துள்ளுழன்று நாளுநின்ற வெனைநீ
நண்ணிவந்து நறுமதிதான் சொல்லியதண் ணளிவழியி னடப்பான்
பெண்ணலமும் பொன்னலமு மண்ணலமு நான்விடுத்த பிறகும்
உண்ணலநன் கெய்தாத தென்கொனுதி வேற்பெரும வுரையே. (71)

மணிகொள் பொற்பணிக ளேபூண் மாதா மகனாம்வீ
யணிகொள் மற்புயவி சாகா நாகா வருளாளா
திணிகொள் வஜ்ரவயி லீசா தேசா சிறியேனோர்
துணிகொள் சிற்ககன மாநீ யாமா துயிலீயே. – (72)

தந்தத்தா தந்தத்தா தனதன தனதன தந்தத்தா

பந்தப்பா டஞ்சிச்சூர் பரிவுறு பெரியவர் பண்டத்தா
நந்தப்பா நெஞ்சுக்கோர் நலமரு ளிறையென நண்புற்றோர்
எந்தப்பா டுஞ்செற்றா ளிதவரு ளறுமுக வென்கட்டார்
சந்தப்பா கொண்டப்பா சமநிலை யெனைநனி தம்பித்தாள். – (73)

பூவாய விந்த வுலகத்து வாழ்வைய பொய்யெனத்தம்
நாவார வோதிமெய்ஞ் ஞானோப தேச நவில்கவென்பார்
தாவாய வில்லத் தவாவினை விட்டே தழுவுமென்னிற்
போவார் மறுமொழி சொல்லாது வீணர்தண் போரியனே. – (74)

ஓயாத நாட்டத்தி னின்றே யடையரு ளுண்மைநிலைக்
கேயாசை வைப்பவர்க் கிங்கொரு பாடு மியைவதின்றென்
றாயாத பேர்க்கந்த வுண்மைதா னெவ்வா றறிவிலுறுஞ்
சேயாகி யெங்கு நிறைவா யிருக்கின்ற சின்மயனே. – (75)

கண்ணன் சனகன் முதலாய பேர்கண்மெய்க் கண்ணுளராய்
எண்ணில் வினைசெய்ய வில்லைகொ னாஞ்செயி னென்னையென்பர்
அண்ணிய சன்மத்திற் றானே மருளற்ற வாற்றலவர்
நண்ணின ரென்றறி யாதார் திருவள்ளி நாயகனே. – (76)

செத்தறச் சுத்தி புரிந்தநற் செம்பினைச் சேற்றினடு
வைத்தெடுத் தானுங் களிம்பூ றிடாதந்த வாறிச்சையின்
வித்தவித் தானா வருட்கட லாமுன் விபுத்துவவான்
சித்தணைந் தாற்பின்பு செய்து சேயவனே. – (77)

இப்பா ரெமக்குள்ள வேலையுங் காலமு மெண்ணங்களும்
தப்பாம லின்னுஞ் சிலநாளிற் றீருமச் சந்தர்ப்பமா
துப்பாய முத்தியை நாடுவே மென்பார் துணிபுநரி
உப்பாழி வற்றுமென் றொள்வேலை காத்தலொக் குங்குகனே. – (78)

நெஞ்சு முடம்பு மசைவறச் செய்துன்னு நிட்டையது
நெஞ்சு முடம்புந் தளராத வர்க்கே நிலைத்தலின்றேல்
நெஞ்சு முடம்புந் தளர்ந்தவர்க் கோவுண் ணிரம்புமென்றன்
நெஞ்சு முடம்பும் பணிந்துய்ய வாக்கயி னின்மலனே. – (79)

வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந்தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே. – (82)

அறிவான சாயுச்சி யந்தா வலதரு ளாற்பசுமை
செறிவான புன்புழு வைச்செங் குளவி செயுமுறைபோற்
பொறிவான நாடர் பிரானீ யெனையும் புரிதிவண்மை
முறிவான நெஞ்ச ரறியாத வாறு முககுருவே. – (83)

பிணிமுகங் கோடிகண் டாசைகொள் பேரெழிற் பீலியுடைப்
பிணிமுகங் காதலித் தேறி யுலாத்தரு பேழயிலோய்
பிணிமுகங் காணென் கலக்கற வென்னைப் பிறங்கருளிற்
பிணிமுகங் காட்டியுன் சேவடிச் சீர்வைத்துப் பேணுதியே. – (84)

வளைக்கை யெனக்கு மிலையுமை மைந்தவிம் மாநிலத்தோம்
வளைக்கை யெனக்கு மரபத னான்மல மாய்த்தருள்கு
வளைக்கை யெனக்கு யிலவுள்ள கட்குற மாதணங்கெ
வளைக்கை யெனக்கு நலமென்று நாடொரு வாலியனே. – (85)

தகையயி லானை நிரஞ்சன ஞானத் தனிக்கடியைத்
தகையயி லானை நனிகாத்த கண்ணன் சதாநினைதீ
தகையயி லானை யெயிற்றத்த னாரிளை ஞன்றனையார்
தகையயி லானை யிறைஞ்சடி யார்கட் சழக்கிலையே. (85)

தனதன தானன தானன தானன தானதனா.

அலைவளர் சாகர மேவளை காசினி யாசையரோ
கலைவளர் மாமதி போலெழின் மாமயல் காதருடான்
இலைவளர் வேலிறை யேயுறு மோநவி லேழைமையேன்
முலைவளர் கோதையர் மோகமு றாதுயு மாறருளே. – (86)

நேரடியாகிய அளவடி விருத்தமென்னும்

சொல்லுய ராரியன் சுருதி போற்சொலும்
நல்லுரை யேற்றவர் நடுவிற் சோர்வுறா
மல்லுயர் சிந்தையின் மதித்த வான்பொருள்
வில்லுயர் நின்னடி விளங்கொள் வேலனே. – (87)

பணமலி பாம்புகொள் பரற்கி யாணரென்
மணமலி சேயென வருமெஃ கீசுரா
நிணமலி யாக்கையி னிரம்பிக் கோஒதுண்
குணமலி யாவியென் குறையை நூறியாள். – (88)

நூல்வழி தேறிய நுண்ணுணர் வோங்குபு
மால்வழி யேபிற வென்றறி மாண்பினர்
தோல்வழி நின்னடி சூழுவர் சூழ்கலர்
நீல்வழி கூடுவர் நீளயி லரசே. – (89)

ஒருசிவ னெழுதிய வுயர்திரு முறையுநல்
இருவரொ டொருவர்செய் யிசைமலி முறைகளும்
நிருமல வருணைய னிறைபுகழ் களுமுணர்
அருளுடை யவரயி லரையவு னடியர். – (90)

குககுக குககுக குருபர வெனநனி
புகனல் முளருமு னணியடி புகழளி
மிகவுறு நருமர ஹரமனு விரதரு
மகமுனு நருமரு ளமுதுற லுறுதி. – (91)

பொய்த்திடு மலகைகள் பொய்ப்பத நினைபவர்
பொய்க்கதி யுறுவது பொய்ப்பிலை யவர்வழி
பொய்த்திட வெனைவளை பொய்ச்சட முளவரை
பொய்ப்படர் பொடிவளர் பொற்பயி லரசே. – (92)

மாயவ ளக்கர் மயலற வேசொலு
பாயமு றைச்செந் நெறியுறு பாவகர்
காயம தைப்போ டளவுன கான்மலர்
நேயமி ருப்பர் நெடிலயி லரசே. – (93)

மேவு வாருனை வேண்டுநர் மேன்கதி
மேவு வாருனை வேண்டலர் வீழ்கதி
மேவு வாரக மேயொளிர் மேனுதி
மேவு வாரயில் வேந்தெனு மீசனே. – (94)

கோமி னையன்வி லென்பதுங் குன்றமே
மாமன் வன்குடை யென்பதுங் குன்றமே
நீமன் னுந்தென் னிகேதனங் குன்றமே
பூமி னின்னயில் போழ்ந்ததுங் குன்றமே. – (95)

அழகு டம்பு ளமேத்திய மாருநேர்
பழவு யிர்க்கணு மாசு படர்ந்ததான்
மழவ னாய்வரு வானவ னேயது
கழலு மாறு கடைக்கணித் தாளெனை. – (96)

செய்யு நற்கடன் றீர்ந்தவெச் செவ்வியும்
மெய்யும் பொய்யு மிழற்றுரை யாய்ந்துமெய்
உய்யு மாறுனை யுன்னு மெனைக்கொளாய்
கையுங் காலுமில் கந்த சுவாமியே. – (97)

வெண்பொன் போற்பல் விளங்கந்த ணாளர்சூழ்
பொன்கொண் மன்றுட் புராணன் குமாரனே
பைங்கண் மாகணம் பாடிப் பழிச்சுநின்
செங்க ழற்செல்வ மென்றெனைச் சேருமோ. – (98)

சீஇர் விஞ்சிய தேவர்கள் வாழ்விசும்
பூஉர் பம்பெழி லோகையின் மேனவில்
ஓஓர் சின்மய வோகைநல் காய்குகப்
பேஎர் கொண்ட பிரானெனு மெந்தையே. – (99)

திருவே லவனரு டேடார் வினெரி
எரியஞ் செனையினி யேயெம் மருளே
அருளே யெனுமடி யார்தே நினைதி
அருளே யெனுமடி யார்தே நினைதி. – (100)

தனனா தன்னா தனனா தனனா

நனிசூழ் நனிசூழ் நனிசூழ் நனிசூழ்
தனிவே லவனார் சரண்மா மலரே
தொனிபோ யிருளாய் வளையோர் துகள்போய்
இனிதா நலமே யெழுமா றுளமே. – (101)

நீண்ட வைச்சுரி யந்திரு வீரம்
மனவை ராக்கிய நற்புகழ் ஞானம்
ஆறு முள்ளப கேசனி எங்கோ
விசாக னென்றறி வார்தெளி வுள்ளார். – (102)

வாகை வாரணத் தோகையற் பாடும்
ஓகை யோங்கிய பின்பவ னன்பின்
ஈகை யீடெனக் குற்றன நீருந்
தோகை தோன்றவற் பாடுதி ரன்பீர். – (103)

அருண்மு தற்பொரு ளறுமுகற் பாடு
திருவி ழந்துமை திமிர்நுதன் மாந்தர்
உருவி யந்தணி யுயர்கவி பாடின்
வருவ தென்சொலும் வளர்புவி யீரே. – (104)

தனனா தனதன தனதன தனனா

பகவா னறுமுக னடிபுகழ் பரிவேம்
உகமே வெவரையும் வியனென வுனியே
பகரே மொருகவி யெனுநிலை படர்வோர்
துகடீ ரருணிலை யடைவது துணிபே. – (105)

கங்கைப கஞ்சசி கண்டம ணிந்தோன்
பங்குறு பண்புமை பங்கயக் கைம்மே
வங்கிள ரள்ளயி லத்தனைப் பாடல்
சங்கையில் சத்தனை சற்சனர் மாட்டே. – (106)

அடிமுதற்சீரு மூன்றாநான்காஞ்சீரு
முதலெழுத்தொன்றத் தொடுக்கும்
மேற்கதுவாய்மோனைத்தொடைச்செய்யுள்.

தேடரு மங்குக தேவனைத் தேடிப்
பாடணி யிற்றன பாடுறு பாங்கும்
ஆடருள் வல்லமை யாரழ காதி
கூடிட வாற்றுவர் கூர்மதி கூர்ந்தோர். – (107)

தெள்ளிய தென்கவி வாணரைத் தெவ்வாற்
கள்ளமில் கல்வியி லார்நனி கண்ணார்
எள்ளவ ரெவ்வுரை யுங்கெட வெந்தாய்
வள்ளிமன் வண்பதம் பாடுவர் வல்லார். – (108)

மலர்ந்தநன் மருமலி மலரணை மறுவில்
அலங்கலென் னணிமண மறுமிழி வடையும்
உலம்பழ குரையணி யுலர்விழி வுறலின்
றிலங்கிடு மிதையயி லிறைக்கிட லியைபே. – (109)

மாதா வேனை மாகா மாவேகா
வேதா தூயா வீமா மாமாயா
நாதா வேலா ஞானே சாநீதா
போதா நாகா போகா நீயேகா. – (110)

தானா தானா தானா தானானா

தாவா னோநா னேநீ தானாமா
தூவே பூவே தோலா வேலோனே
கோவே வீடீ கோனே வானோனே
தேவே வாவே சேயே மாதாயே. – (111)

நம்பா வெம்பா நல்லா ருள்கயிலா
வம்பா வென்பார் கொம்பா மன்முகையார்
அம்பார் கண்ணா னையா ரம்பிகைசேய்
அம்பா தம்பே ணும்பே றண்ணுவரே. – (112)

தீயார் தேடா வாயா வாயா
வீயா வாயா வில்லா காயா
தூயா சேயா தூயா டாயா
தாயா வாவா தாளீ தற்கே. – (113)

பெரிதுஞ் சிறிதும் பேசும் படியிழி
தெருளுந் தனுளார் பேதுஞ் சிகுநனி
விரிவிண் குகனை மெய்யுட் குவிவுடன்
ஒருகா லிருகான் முக்கா லுனினே. – (114)

மாறா வருள்வேன் மனன்மெய் யடியவர்
காறே கதையா ரமிதஞ் சமமற
ஈறே முதலே பறையா யிடை
ஏறா ரிழியார் கருதார் மறவார். – (115)

தேஎன் பாகுநெய் திண்ண்கண் டாசில்
வாஅன் கன்னலும் பின்போக மரூஉ
நாஅன் பேஎணு நன்ன்செவ் வேள்கேள். – (116)

தூஉ மாமணி துன்ன்றொர் தாஅர்
பூஉ ணீஇணல் வேலண்ணல் பூஉங்
காஅ னாஅடல் காஅண்ட லோஒங்
கேஎ ரேறுந ரெந்தைக ளாவார். – (117)

தானான தான தானான தான்.

தாமேவு போத மேதேவர் தாழ்வில்
பூமாலை சூடு போர்வேலன் மீது
பாமாலை பாடி யேபேணு தாசர்
நாமூட ராகி டோநாளு நாடு. – (118)

ஏரார் பெண்கா ளெம்பெரு மானைக்
கூடா வாழ்வென் வாழ்வருள் கூராய்
ஆனா வன்பா லாள்குக வென்றோர்
வாதே செய்துய் வேபெற வாரீர். – (119)

வல்லினவெதுகைச்செய்யுள்.

தத்தன தனனா தந்தன தான.

மச்சறு தகைசான் மங்கைய ரேகை
கொட்டியுண் மகிழ்வே கொண்டொரு ஞான
முத்தியை யருள்சேய் மொய்ம்பணி பாட
இக்கணம் வருவீ ரின்பரி வோடு. – (120)

எம்பெருமா னாஞ்செவ்வே ளியற்பே ரோதிக்
கண்டவொலி கலகலக்கக் கனிந்து பாடிச்
சுந்தரமா நடிப்பதற்குத் தொடர்ந்து வாரீர்
மஞ்சொழியா விளங்கன்னி மாரே யன்றே. – (121)

மெய்யுரை யோர்சூழு மேதைவி சாகன்
நல்லரு ளேவாழி நாளுமெ னாவாட்
கொள்ளடி யேபாடி நாடுதிர் கோல
மவ்வலை நேர்மூரன் மாமுகை யீரே. – (122)

தொண்டக மேநாளுந் தொனிதரு சீறூர்
அண்டக னீணாக வணிபுற வுள்ளீர்
முண்டக னார்பேணு முருகன பாதங்
கண்டக மேமாவின் களிகொள வாரீர். – (123)

தன்ன தானன தான தானதன / தைன தானன தான தானதன

செம்மை நாய்கழு கோமை சேர்சுரமார்
நன்மை மானுடர் காளெ னானறவே
மெய்மை யோதிய வேல னார்பெயரே
உண்மை யாநித மோதி வாழ்மினரோ. – (124)

மாமல் குங்குளிர் குல்லை வச்சிகளீ
பூமல் கும்பொழின் முல்லை யச்சுதனார்
தூமல் குந்துதி சொல்லு மற்புடையீர்
சேய்மல் கன்பதர் செல்லு மிக்குயர்வீர். – (125)

தாத்த தானன தான தானதன

ஏர்க்கு ழாமுழு மேசி லாமருத
மாக்க ளேபெரு வான மாமுருக
ஆக்கை போமுன மாள வாவெனவொர்
நோக்க மாகுதிர் நூறு வீர்துயரை. – (126)

தான தல்லன தான தானதனா

ஓவ லில்லலை வீசு மோர்கடனீர்
மேவு முள்ளிக டாழை வீறிடையீர்
கோல்வி டல்லக வூழர் கோள்கடிசேய்
தாவி னல்லடி தாழ்வி ரேலுயர்வீர். – (127)

தான தன்னன தான தந்தனனா.

போதல் பின்னுறல் கூறு புந்தியர்நூல்
ஓதல் பன்னுத லோடு ளன்புடையார்
ஈத லெண்ணுவ ரேதில் கந்தனையே
தாழ்த றண்ணல மாகு மென்றறிவார். – (128)

தான தையன தந்த தானதனா.

காதன் மல்குயி ரென்ற காரிகைதான்
ஏர்கொ ளுள்ளிட மென்ற பூவணைமேல்
ஆத வுள்ளமெ னங்கை யாலணையா
ஏத மில்லயி லெந்தை மேவுவளே. – (129)

சூரி யன்றொழு தூய வந்தணரே
ஏரி லங்கயி லீச னங்குமுளான்
நாளு மென்றவ னாடு நண்புறினே
பீளு டம்படை பீடை வெந்திடுமே. – (130)

தான தந்தன தன்ன தானதனா

கானி லங்கடி துன்ன வேகமழ்தார்
கோடி தந்தெழில் வண்மை கூர்செடிகாள்
ஆசி னுஞ்சும மண்ணல் சேயுருவே
சாரி னுஞ்சிறு சன்ம மோசனமாம். – (131)

கானார் பக்கி களேயறி வார்பெரியோர்
கோனா யிட்டர் குழாமுட னேவருசேய்க்
கானா வன்பி னருஞ்சிறை வீசுமினோ
ஊனா ரங்க முறாநல மேவிடுவீர். – (132)

காவாழ் கிள்ளை களேமயில் காலடியார்
கோவா மெந்தை குகேசன சீரெழிலே
பாவா மாறு பகர்ந்தினி தாடுமினோ
தூவா ரோகை சுரந்திடு நும்மகமே. – (133)

தாத்தந்தன தானன தானன தானதனா

நீற்கண்டன றாமக னாய்வரு நீளுயிரார்
நீற்கண்டற வேபுரி நேரயி லாள்கரவேள்
வாற்கெண்டைகண் மால்கொளு மேர்கெழு மான்மகள்கோ
வாற்கெண்டைகள் பாய்புய மாதிரம் வான்வரையே. – (134)

தனன தானதன தான தானன

செருநர் காதுகுக தேவை வேலொடு
திருவு லாமிதய நாடு சீரியர்
தெருள ராயிதய தேசு கூடுவர்
சிரம மேதுமடை யாது தீவிரம். – (135)

ஆசி றம்முடலை லிங்க மாநினை
நேச மோடுயிரி னின்றவ் வாறதில்
நாச மில்குகனை நாட்டு வோருயர்
தேசி லங்குசிவ லிங்க மாகுவர். – (136)

தோலார் திருலீ லைகளைச் சொலுமுந்தை
நூலே யறியா நொசிவுள் ளவர்முன்னோர்
காலே தறிவார் கதியென் னடைவாரேர்
வேலா விமலா விபுவா யவிர்சோதீ. – (137)

குளவம் பகமா றுளவெங் குருநாதா
அளவில் கலையே தமிலா தறிவோராய்க்
களமில் களனே பெறினுங் கவிநாதர்
மிளிருன் கழலைப் புகழ்நூல் விழையாரோ. – (138)

செல்வப் பொருளோர் செயுநல் வினைபோலே
கல்விப் பொருளோர் கமழுன் கழன்மேதை
சொல்வித் தையிலே யுயர்வார் துகடீர்வார்
நல்வித் தகவே லிறைமா நடையானே. – (139)

வீடு வெறுக்கா தொருசெவ் வேள்பெயரிற்
பாடு திருப்பா வுயர்வே பாடதினும்
வீடு வெறுத்தே வெளிநின் றோரருளாற்
பாடு திருப்பா வுயர்வே பாடகரே. – (140)

முந்தை நோன்மையி னானன் முத்தமிழ்
வந்து ளார்குகன் வாழ்த்தி யின்னருட்
சிந்து மூழ்கிவி டாத சேர்க்கையிற்
சொந்த மாயுறு வார்சு வாமியை. – (141)

எனக்கு நற்றமி ழீந்த சேயருள்
நினைக்கு நெஞ்சுடை யோய்தள் ளாடிடின்
தனக்கி லாபமெய் தாது தாழ்வெளி
மனக்கு மீனம தாமம் மானசம்.

தேனுறழ் முத்தமிழ் விரகு சிறந்துளவுன்
மீனுறழ் சித்திர ஞெகிழி மிடைந்தசரண்
பானினை வுற்றவர் பயில்கலை விஞ்சையராய்
மேனிலை பற்றுவர் விரைசெய் கடம்பணியோய். – (143)

சேடை கொண்டதமிழ் செவ்விய தேவ
பாடை யென்றறவர் பன்னுவர் தேமார்
கோடை யங்குகனை யேயிது கொண்டு
பாடை யிங்கிதம றாமதர் பண்ணும். – (144)

மங்கலமுத லீரைந் தங்கமுமுள மாணார்
இங்கிதகவி மாலை யேசினின்முடி வேய்வோர்
தங்கமினுட லோடு சங்கமொருவி யந்தந்
துங்கவமுது சேர்வர் சுந்தரமுரு கோனே. – (145)

தான்னதன் தானா தான்னதன தானா

தீதறுசுக போதா சேடகடக கோகா
சாதறெறுகு கேசா சாடுதவறு சாடு
சூதறுபகை தீதீ சோதிபதிப கேசா
கோதறுகடி தாதா கோடிபடிக பாதா. – (146)

முன்மைமனுமுன் ஞான முன்னுமனனை நண்ணா
நன்மைநினைநன் மோன நண்ணினஙன நண்ணு
மென்மைமுனிமன் னேம னெண்ணமெனைமு னாமே
மென்மைமணிமின் மஞ்ஞை மின்னுமினிமை மன்னே. – (147)

வையவயவு லாவு வாலிலிழிவர் வாயால்
வையவளவி லாரி லேவிழைவரை வாரி
வெய்யவழலி லீயோர் வேலையுரிய ராவோர்
வெய்யவலலை யேவில் வேலவவளி யாயே. – (148)

வம்புமலர் முடிமுருகன் மதியுடையா ரெவரும்
பம்புமளி யால்விரும்பப் படுபொருளா யிடலால்
நம்பனெனும் பெயருமணை வானெனுநன் னடையர்
கும்புபடர் குகவெனையுங் கொளவருளி னினையே. – (149)

கரியபிரான் மருகனெனக் கனகமயில் வருவோன்
பிரியமுளார் மனம்போலப் பேருதவி செயலாற்
பெரியபிரா னெனும்பெயரும் பெறுவனெனா வறிவோர்க்
குரியபரா பரவெனையு முவகையொடு நினையே. – (150)

வச்சிரத்தோ டயில்பிடிக்கு மருமரைக்கை மழவன்
எச்சகப்பே ரழியினுந்தா னழிவடையா வெழிலால்
அச்சுதப்பே ருறுவனெனா வறியறிஞர் மனமே
வுச்சிதப்பா வகியெனையு முவகையொடு நினையே. – (151)

எண்ணரிய குகபரம்விண் ணென்னுமறி வுடனும்
மண்ணுலக கிரியையொடு மன்னிமிளிர் வதனால்
விண்ணுமணு மதுவயவென் றேயறியும் விறலோர்
நண்ணுநடை வருகுமர நம்பெனையு நினையே. – (152)

எண்ண ரியகு கபரம்விண் ணென்னு மறிவுடனும்
மண்ணு லககி ரியையொடு மன்னி மிளிர்வதனால்
விண்ணு மணும துவயவென் றேயறி யும்விறலோர்
நண்ணு நடைவ ருகுமர நம்பெ னையுநினையே.

பூமணமே புனன்மணமே பொங்களிமா மணமே
காமணமே கனிமணமே கம்மெனவே கமழு
மீமருவீ கமலைவள மேயவொரு தளியுய்
சேமகுகா வுவகைநெய்தை செய்யவெற்கு நினையே. – (153)

பூமண மேபுனன் மணமே பொங்களி
மாமண மேகா மணமே கனிமண
மேகம் மெனவே கமழு மீமரு
வீக மலைவள மேய வொருதளி
யுய்சே மகுகா வுவகை
நெய்தை செய்ய வெற்கு நினையே.

மூன்றெழுத்து மெம்பெருமான் முருகிருக்கை முதலிற்
றோன்றெழுத்து மீற்றெழுத்துந் துரைமுருகன் கரணம்
ஊன்றெழுத்து ளிடைகடைதா மோங்குமர னிலையங்
கான்றிளைக்குங் கோதைசொல்லிற் கமலைகலை மலையே. – (154)

கன்மநெறி காய்ந்தவர்கள் போனனிக தைத்தே
தன்மநெறி காய்ந்துகறை யண்முவினை தன்னைக்
கொன்மனசி லெள்ளளவு நீக்குமதி கொள்ளார்
சன்மமென வாகுவர்சொல் சண்முகபி ரானே. – (155)

தானா தானானா தானா தானானா

சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா நேயாவோ யாயே தேயாளே. (156) [1]

சேயா சேயாதே
தேயா சேயாசே
மாயா மாயாவா
வாயா மாயாமா. – [2]

வாயா மாவாயா
மாயா சேமாசே
யோயா நேயாவோ
யாயே தேயாளே. – [3]

தைன்னாதன தனத்தத்தன தனத்தந்தன தனத்த

பொய்ந்நூல்வழி யொழித்துக்குரு புரக்குந்திற முரைக்கும்
மெய்ந்நூல்வழி பிடித்துத்தவ மிகுக்கும்பொறி யடக்கர்
செய்ந்நூல்வழி சிறக்கக்களி திளைத்தின்பமு தளிக்கும்
மொய்ந்நூல்புக ழயிற்கைக்குக முருக்கென்றுயர் முருக்கு. – (157)

தனனாதன தனனாதன் தனனாதன தனனா.

எயிலேறிய புவியாமிதி லெளியேன்மட முடைமா
பயிலேறிய முகையார்தரு பயனாடுத லறிவாம்
வெயிலேறிய பெரியார்நடை விடலேவிழை யினுமே
மயிலேறிய முருகாவெனை மறவேலெனை மறவேல். – (158)

புலைமாதருள் கிடுமாறவர் புணர்மாமறை யவரும்
முலைமாதருண் மறையோர்மகண் முலைபுல்லிய கலரும்
அலைமாதருள் கெவருந்திரு வமுதம்பெற விலையோ
மலைமாதருள் குமராவெனை மறவேலெனை மறவேல். – (159)

விதிமீறிய பெயரும்புலை மிசையுந்தவ றுளரும்
பதிமீறிய பெயரும்பல பலகோதுசெய் தவரும்
திதிமீறிய கதிமேவினர் சிறியேனவை யுறினும்
மதிமீறிய குகனேயெனை மறவேலெனை மறவேல். – (160)

ஓரைந்தையும் வென்றோர்நவி லுரையின்படி யேயிய்
ஈரைந்துகொ டேயுன்னடி யிணையேதொழு மெவரும்
ஊரைந்தினு முயர்திய்யொரு மூன்றெய்துவ ரேநார்
வாரைந்தொழின் முருகாவெனை மறவேலெனை மறவேல். – (161)

இறைமறைமுடி வெனுமுறைகளி லிடைவருகவி படனம்
முறையொடுபணி யொருபுனிதமு முயலுநியம மிலராய்
நிறை பொருணமை யலதிலையென நினதடிமலர் பரவாக்
கறையருறுவ தவலமெனது கறைதெறுகர வயிலோய். – (162)

தன்னதான தன்னதன்ன, தன்னதனன தனனதனன

மருணைவுறமெய் கருதுமறிஞர் மனமுண்டன் மிடுகுருபர
கருணையிறைவர் புதல்வபெரிய கலைஞரினிது புகழறுமுக
அருணைவளரு மருணகிரியி னமலபரம் சரவணபவ
இருணைவுறவு னடியைநினையெ னிடர்தொலைவுற வருடியருடி. – (163)

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.