ஏழாம் திருமொழி – ஆனிரை

கண்ணனைப் பூச்சூட அழைத்தல்

182) ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2)

183) கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய்! உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்!
திருவுடையாள்மணவாளா! திருவரங்கத்தேகிடந்தாய்!
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.

184) மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்துஎந்தாய்!
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்.

185) தெருவின்கண்நின்று இளவாய்ச்சிமார்களைத் தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ! உகந்திவைசூட்டநீவாராய்.

186) புள்ளினைவாய்பிளந்திட்டாய்! பொருகரியின் கொம்பொசித்தாய்!
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்!
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்.

187) எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்காண்நம்பி!
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்!
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே! புன்னைப்பூச்சூட்டவாராய்.

188) குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே!
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா!
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைக்கிடந்தஎம்கோவே! குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.

189) சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்!
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்!
ஆமாறறியும்பிரானே! அணியரங்கத்தேகிடந்தாய்!
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.

190) அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள் மணவாளா!
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்!
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய்.

191) செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2)

1 thought on “ஏழாம் திருமொழி – ஆனிரை”

Leave a ReplyCancel reply