கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்
23) சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே. (2)
24) முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே.
25) பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
26) உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே.
27) பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குகளைவந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
28) மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.
29) இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டோடும் பரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே.
30) வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே.
31) அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே.
32) பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
33) நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.
34) மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.
35) வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
36) எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு
அந்தொண்டைவாயமுதாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
37) நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே.
38) விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.
39)பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே.
40) மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
41) முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.
42) அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
43) சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2)

[…] இரண்டாம் திருமொழி – சீதக்கடல் […]