தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை
391) தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்
தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட
எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற
கண்டமென்னும்கடிநகரே. (2)
392) சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச்
சந்திரன்வெங்கதிரஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின்
மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும்
நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
393) அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி
அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்
கெதிர்முகவசுரர்தலைகளையிடறும்
எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில்
சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
394) இமையவர்இறுமாந்திருந்தரசாள
ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும்
நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும்
இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
395) ழுவதோர்படையும்உலக்கையும்வில்லும்
ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய
மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம்
இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
396) தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம்
சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை
மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர்
அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.
397) விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி
மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனையுதைத்த
மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும்
அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.
398) திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து
தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும்
அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம்
நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை
கண்டமென்னும்கடிநகரே.
399) வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடியத்
தலைப்பற்றிக்கரைமரஞ்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே. (2)
400) மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய
எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே. (2)
401) பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து
உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன்
விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை
தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே
குளித்திருந்தகணக்காமே. (2)

[…] ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும […]