முதல்திருமொழி – தன்னேராயிரம்

யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்

223) தன்னேராயிரம்பிள்ளைகளோடு
தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு
ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச
வாய்வைத்தபிரானே!
அன்னே! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே. (2)

224) பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்
போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி
வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையாள்ஒருகன்னியை
வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

225) கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக்
குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரைப்
பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ!
உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

226) மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை
மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று
குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா! உன்னைப்புறம்பலபேசுவ
புத்தகத்துக்குளகேட்டேன்!
ஐயா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

227) முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயி
னோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த
கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல
நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

228) கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக்
கற்றாநிரைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு
விளங்கனிவீழஎறிந்தபிரானே!
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச்
சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

229) மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு
வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச்
சுற்றும்தொழநின்றசோதி!
பொருட்டாயமிலேன்எம்பெருமான்!
உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்
கரட்டா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

230) வாளாவாகிலும்காணகில்லார்
பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து
நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி
கெட்டேன்! வாழ்வில்லை நந்தன்
காளாய்! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

231)தாய்மார்மோர்விற்கப்போவர்
தமப்பன்மார்கற்றாநிரைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களை
நேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து
கண்டார்கழறத்திரியும்
ஆயா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

232) தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச்
சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை
மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்
உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

233) கரார்மேனிநிறத்தெம்பிரானைக்
கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான்
அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசை மாலைவல்லார்
இருடீகேசனடியாரே. (2)

1 thought on “முதல்திருமொழி – தன்னேராயிரம்”

Leave a ReplyCancel reply