கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்
244) சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை. (2)
245) கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா! கேசவா! பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனே! முத்தம்தா.
246) காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச்
சூடிவருகின்றதாமோதரா! கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா! நீராட்டமைத்து வைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான்.
247) கடியார்பொழிலணிவேங்கடவா! கரும்போரேறே! நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே!
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய் நீஎம்பிரான்.
248) பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே!
எஞ்சிற்றாயர்சிங்கமே! சீதைமணாளா! சிறுக்குட்டச்செங்கண்மாலே!
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும்.
249) அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா! நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய்.
250) பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா! உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்ஙனமாவர்களே.
251) கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
காட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா! உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்.
252) திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணேர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா! நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு.
253) புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2)

[…] மூன்றாம் திருமொழி – சீலைக்குதம்பை […]