மேகவிடுதூது
577 விண்ணீலமேலாப்பு விரித்தாற்போல்மேகங்காள்!
தெண்ணீர்பாய்வேங்கடத்து என் திருமாலும்போந்தானே?
கண்ணீர்கள்முலைக்குவட்டில் துளிசோரச்சோர்வேனை
பெண்ணீர்மையீடழிக்கும் இது தமக்கோர்பெருமையே. (2) 1
578 மாமுத்தநிதிசொரியும் மாமுகில்காள்! வேங்கடத்துச்
சாமத்தினிறங்கொண்ட தாடாளன்வார்த்தையென்னே
காமத்தீயுள்புகுந்து கதுவப்பட்டிடைக்கங்குல்
ஏமத்தோர்தென்றலுக்கு இங்கிலக்காய்நானிருப்பேனே. 2
579 ஒளிவண்ணம்வளைசிந்தை உறக்கத்தோடிவையெல்லாம்
எளிமையாலிட்டென்னை ஈடழியப்போயினவால்
குளிரருவிவேங்கடத்து என்கோவிந்தன்குணம்பாடி
அளியத்தமேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே. 3
580 மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத்திருமங்கை தங்கியசீர்மார்வற்கு
என்னாகத்திளங்கொங்கை விரும்பித்தாம்நாள்தோறும்
பொன்னாகம்புல்குதற்கு என்புரிவுடைமைசெப்புமினே. 4
581 வான்கொண்டுகிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்துத்
தேன்கொண்டமலர்ச்சிதறத் திரண்டேறிப்பொழிவீர்காள்!
ஊன்கொண்டவள்ளுகிரால் இரணியனையுடலிடந்தான்
தான்கொண்டசரிவளைகள் தருமாகில்சாற்றுமினே. 5
582 சலங்கொண்டுகிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! மாவலியை
நிலங்கொண்டான்வேங்கடத்தே நிரந்தேறிப்பொழிவீர்காள்
உலங்குண்டவிளங்கனிபோல் உள்மெலியப்புகுந்து என்னை
நலங்கொண்டநாரணற்கு என்நடலைநோய்செப்புமினே. 6
583 சங்கமாகடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால்சேவடிக்கீழ் அடிவீழ்ச்சிவிண்ணப்பம்
கொங்கைமேல்குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவிதங்குமென்றுஉரையீரே. (2) 7
584 கார்காலத்தெழுகின்ற கார்முகில்காள்! வேங்கடத்துப்
போர்காலத்தெழுந்தருளிப் பொருதவனார்பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கில் அம்பழவிலைபோல்வீழ்வேனை
வார்காலத்தொருநாள் தம்வாசகம்தந்தருளாரே. 8
585 மதயானைபோலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாகவாழ்வீர்காள்! பாம்பணையான்வார்த்தையென்னே!
கதியென்றும்தானாவான் கருதாது ஓர்பெண்கொடியை
வதைசெய்தான்என்னும்சொல் வையகத்தார்மதியாரே. (2) 9
586 நாகத்தினணையானை நன்னுதலாள்நயந்துரைசெய்
மேகத்தைவேங்கடக்கோன் விடுதூதில்விண்ணப்பம்
போகத்தில்வழுவாத புதுவையர்கோன்கோதைதமிழ்
ஆகத்துவைத்துரைப்பார் அவரடியாராகுவரே. (2) 10

[…] […]