நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்

கூடலிழைத்தல்

534 தெள்ளியார்பலர் கைதொழுந்தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலைமணாளனார்
பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட
கொள்ளுமாகில் நீகூடிடுகூடலே (2) 1

535 காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன்
ஓட்டராவந்து என்கைப்பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீகூடிடுகூடலே. (2 ) 2

536 பூமகன்புகழ்வானவர் போற்றுதற்
காமகன் அணிவாணுதல் தேவகி
மாமகன் மிகுசீர் வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே. 3

537 ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட
பூத்தநீள்கடம்பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்தகாளியன்மேல் நடமாடிய
கூத்தனார்வரில் கூடிடுகூடலே. 4

538 மாடமாளிகை சூழ்மதுரைப்பதி
நாடி நந்தெருவின் நடுவேவந்திட்டு
ஓடைமாமதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடுகூடலே. 5

539 அற்றவன் மருதம்முறியநடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன்வரில் கூடிடுகூடலே. 6

540 அன்றின்னாதனசெய் சிசுபாலனும்
நின்றநீள்மருதும் மெருதும்புள்ளும்
வென்றிவேல்விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன்வரில் கூடிடுகூடலே. 7

541 ஆவலன்புடயார்தம் மனத்தன்றி
மேவலன் விரைசூழ் துவராபதிக்
காவலன் கன்றுமேய்த்து விளையாடும்
கோவலன்வரில் கூடிடுகூடலே. 8

542 கொண்டகோலக் குறளுருவாய்ச்சென்று
பண்டுமாவலிதன் பெருவேள்வியில்
அண்டமும்நிலனும்அடியொன்றினால்
கொண்டவன்வரில் கூடிடுகூடலே. 9

543 பழகுநான்மறையின்பொருளாய் மத
ஒழுகுவாரண முய்யவளித்த எம்
அழகனார் அணியாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடுகூடலே. 10

544 ஊடல்கூடல் உணர்தல்புணர்தலை
நீடுநின்ற நிறைபுகழாய்ச்சியர்
கூடலைக் குழற்கோதைமுன்கூறிய
பாடல்பத்தும்வல்லார்க்கு இல்லைபாவமே. 11

1 thought on “நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்”

Leave a ReplyCancel reply