01.094 நீல மாமிடற் – திருவிருக்குக்குறள்

தலம் : ஆலவாய் (மதுரை)
அருளியவர் : திருஞானசம்பந்தர
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : பாண்டியநாடு
திருவிருக்குக்குறள்
சுவாமி : சோமசுந்தரேஸ்வரர்;
அம்பாள் : மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 1

ஞாலம் ஏழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. 2

ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. 3

அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 4

ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 5

அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 6

அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 7

அரக்க னார்வலி1, நெருக்கன் ஆலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.

பாடம் : 1அரக்கனாள்வலி 8

அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவம் ஓங்குமே. 9

ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே. 10

அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்தமிழ், செடிகள் நீக்குமே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a ReplyCancel reply