ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமாள்
ஆகாயம் பூமியிடை நீராவி போல் வடிவில்
ஆதாரமான பெருமாள்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
மெய்யான வந்த பெருமாள்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
விளைவாகி நின்ற பெருமாள்
கோலாலம் பூரில்வளர் கோன்தண்ட பாணி இவன்
கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே! (1)
“ஓம்” என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன் உள்ளம்
நலம் யாவும் வீடுவருமே
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம் பூர்செந்தூர்
கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தெண்டாயுதத்தானைக்
குறையாத செல்வம் மிகுமே!
கவியரசு கண்ணதாசன்
