மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
மூலம்
மகரம் அளறு – 01
மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி
மதியும்இர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்
சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே
செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி
தருகவுளும் உறுவள் எயிறுந்
தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
தருதுணைவன் அமரர்குயிலுங்
குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
குயமொடமர் புரியுமுருகன்
குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
குலையவிடு கொடியவேலே.
வெங்காள கண்டர் – 02
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே.
வேதாள பூதமொடு – 03
வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.
அண்டர் உலகும் சுழல – 04
அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.
ஆலமாய் அவுணரு – 05
ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மைஒளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன்ப ருக்கு முற்றா
மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்கு மெட்டா
முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருந்
தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
சரவணக் குமரன் வேலே.
பந்தாடலிற்கழ – 06
பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
பாடலினொ டாடலின்எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்
தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரஉப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே.
அண்டங்கள் ஒருகோடி – 07
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.
மாமுதல் தடிந்து – 08
மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.
தேடுதற் கரிதான – 09
தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து
சேவடி பிடித்ததெனவும்
நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
நிகழ்கின்ற துங்கநெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
றடலெரிக் கொடிய உக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே
சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
றாய்திமித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேலே.
வலாரியல லாகுலமி – 10
வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.
பதம் பிரித்தது
மகரம் அளறு – 01
மகரம் அளறு இடைபுரள உரகம் கணபண மவுலி
மதியும் இரவியும் அலையவே
வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல
மகிழ்வு பெறும் அறு சிறையவாம்
சிகரவரை மனை மறுகு தொறும் நுளைய மகளிர் செழு
செநெல்களொடு தரளம் இடவே
செகம் சிரம் பகிரதி முதல் நதிகள் கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரம் மிருகமதம் என மணம் மருவு கட கலுழி
தரு கவுளும் உறு வள் எயிறும்
தழை செவியும் நுதல் விழியும் உடைய ஒரு கடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகர மலை எயினர் குல மட மயிலும் என இருவர்
குயமொடு அமர் புரியும் முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலைய விடு கொடிய வேலே.
வெங்காள கண்டர் – 02
வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்
சதுர்முகனும் நின்று இரப்ப
சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாஷி சைவ
சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன்
செம்பொன் திருக்கை வேலே.
வேதாள பூதமொடு – 03
வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வெம் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமும் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரி எலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்த வைவேல்
தாது ஆர் மலர்ச் சுனைப் பழநி மலை சோலை மலை
தனிப் பரங்குன்று ஏரகம்
தணிகை செந்தூர் இடைக்கழி ஆவினன்குடி
தடங்கடல் இலங்கை அதனில்
போது ஆர் பொழில் கதிர்காமத் தலத்தினைப்
புகழும் அவர் அவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செம் கை வேலே.
அண்டர் உலகும் சுழல – 04
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலை கடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே
மண்டலம் நிறைந்த ரவி சத கோடி மதி உதிரம்
மாணப் பிறங்க அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் மருளச் சிரம
வகை வகையில் சுழலும் வேல்
தண்டமுடம் கொடிய பாசமுடனும் கரிய
சந்தமுடனும் பிறைகள்போல்
தந்தமுடனும் தழலும் வெம் கணுடனும் பகடு
தன்புறம் வருஞ் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்சல் என மென்சரண
கஞ்சம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம் புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.
ஆலமாய் அவுணரு – 05
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளி மீது
அரிய தவமுநிவருக்கு இந்துவின் தண் என்று
அமைந்து அன்பருக்கு முற்றா
மூலமாம் வினை அறுத்து அவர்கள் வெம் பகையினை
முடித்து இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆநந்தம் நல்கும் பதம் அளித்து எந்த
மூதண்டமும் புகழும் வேல்
ஏல மா யானையின் கோடு அதில் சொரி முத்தும்
இன்பணைகள் உமிழும் முத்தும்
இனி வாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவம் ஆரும்
தாலம் மா மரம் முதல் பொருள் படைத்திடும் எயினர்
தரு வநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவண குமரன் வேலே.
பந்தாடலிற்கழ – 06
பந்து ஆடலில் கழங்கு ஆடலில் சுடர் ஊசல்
பாடலினொடு ஆடலில் எலாம்
பழம் தெவ்வர் கட்கம் துணித்து இந்திரற்கு அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தம் ஆரு நாள் மலர்க் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்தாமும்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித் தரங்கச் சடிலருக்கு அரிய
மந்த்ர உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா அலங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்து ஆர் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செம் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன்
கோலத் திருக் கை வேலே.
அண்டங்கள் ஒருகோடி – 07
அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி
அநந்தம் ஆயினும் மேவினால்
அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல்
அறியாது சூரன் உடலைக்
கண்டம் பட பொருது காலனும் குலைவு உறும்
கடிய கொலை புரியும் அது செம்
கநக அசலத்தை கடைந்து முனை இட்டு
கடுக்கின்ற துங்க நெடு வேல்
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவ அந்தகன் மாயவன்
தழல் விழி கொடுவரி பரு உடல் பல தலை
தமனிய சுடிகையின் மேல்
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மங்கையும் பதம் வருடவே
மதுமலர் கண் துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக் கை வேலே.
மாமுதல் தடிந்து – 08
மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய்
வலிய தானவர் மார்பு இடம்
வழி கண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான்தனை சிறைவிடுத்து
ஓம இருடி தலைவர் ஆசி பெற்று உயர் வானில்
உம்பர்சொல் துதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில்
ஒப்பு இல் புகழ் பெற்ற வை வேல்
சோமகலச ப்ரபா அலங்கார தர ஜடா
சூடி கால அந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம்
துரக கேசரம் அம்பரம்
சேம வடவாம் அம்புயம் பரண சங்கு ஆபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜாநந சகோதர குகன்
செம்பொன் திருக்கை வேலே.
தேடுதற் கரிதான – 09
தேடுதற்கு அரிது ஆன நவமணி அழுத்தி இடு
செம் கரனை அமுதம் வாய் கொள்
செயம் அளித்து அருள் எனக்கு என உவப்பொடு வந்து
சேவடி பிடித்தது எனவும்
நீடு மை கடல் சுட்டதிற்கு அடைந்து எழு கடலும்
நீ எமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடு வேல்
ஆடும் ஐ கணபண கதிர் முடி புடை எயிற்று
அடல் எரி கொடிய உக்ர
அழல் விழி படு கொலை கடைய கட்செவியினுக்கு
அரசினை தனி எடுத்தே
சாடும் மைப்புயல் எனப் பசுநிற சிகரியில்
தாய் திமித்துடன் நடிக்கும்
சமர மயில் வாகனன் அமரர் தொழும் நாயகன்
சண்முகன் தன்கை வேலே.
வலாரியல லாகுலமி – 10
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய
மால் அறியும் நாலு மறை நூல்
வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும்
உலோக நிலை நீர் நிலை இலா
ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல்
உலாவிய நிலாவிய கொலைவேல்
சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா
சின சிலா தணி விலா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய
சேவக சராப முகில் ஆம்
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை
மேவிய விலாச அகலன்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே.
