எண்சீர்க்களிநெடிலடியான்வருவன – 05 (2-வது ஆசிரியவியல்)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

நெடியபசுந் தோகையுடை மயில்காள் கேளீர்
நின்மலனாய்ச் சின்மயனாய் நிகரில் லானாய்
அடியவர்கட் கெளியவனா யானந் தத்தே
னாயெங்கு மிருப்பவனா யடியே னுள்ளே
குடிகொளறி வாயென்று முளவோர் செவ்வேள்
குழகுமயி லூர்தியெனு நாமந் தாங்க
வடிவுடைநுங் குலஞ்செய்த தவந்தா னென்னே
மாறாநும் மாண்புடைமை யென்னே யென்னே. – (102)

காலமறி ஞானிகள்போ லுதயந் தேர்ந்து
களிபெருகக் கூவுநறுங் கோழி காளோ
தூலமறி புன்மதியே துறுமி யாடு
துகளுள்ளா ரெத்துணையுந் தெரியொண் ணாத
மூலமறி யோகிகள்கண் ணாகுஞ் செவ்வேண்
முருகுறுகோ ழிக்கொடியோ னெனும்பேர் தாங்க
ஞாலமறி நுங்குலஞ்செய் துளநோன் பென்னே
நலியாநும் மாண்புடைமை யென்னே யென்னே. – (103)

அறிவுயிர்கட் குண்டாகுஞ் சனனத் தீட்டு
மாயுமுடிந் தெய்துகிற மரணத் தீட்டும்
பொறியறவுள் ளழுத்துகிற மலத்தின் றீட்டும்
புனிதமிலா திடைகூடும் பாவத் தீட்டுஞ்
சிறிதுமிலா தோட்டிறைவன் கடம்ப னென்னுந்
திருநாமங் கோடற்குக் கடம்பு காணும்
வறிதற்ற குலஞ்செய்த தவந்தா னென்னே
மங்காநும் மாண்புடைமை யென்னே யென்னே. – (104)

அழுக்கதனை நீக்கிநலஞ் செய்சீர் சான்ற
வருட்கங்கை யேமறைக டேடிக் காணா
விழுக்கடவு ளானபிரான் வேதன் சூழு
மெய்த்தேவன் வேடரது வேடங் கொள்வோன்
இழுக்கறுசே யோனென்னு மெம்மா னாளு
மெழிற்கங்கை மைந்தனெனும் பெயரொன் றேற்க
வழுக்கறுநீ செய்ததவ மென்னே யென்னே – (105)

மாறாநின் மாண்புடைமை யென்னே யென்னே.
நறுமீனே போன்றசிறு சதங்கைக் கால
னவையறுதெய் வானைமணந் தவனோ ராறு
குறுமீனே சோட்டிறைவ னெனுமீ டில்லான்
கோதிலறு மீன்மைந்த னெனும்பேர் தாங்கச்
சிறுமீனே பெருமீனே யனந்த மாகத்
திகழ்பெரிய விண்ணிலொளி திளைக்க வீசும்
அறுமீனே நுங்களருந் தவந்தா னென்னே
யழியாநும் மாண்புடைமை யென்னே யென்னே. – (106)

ஆண்டன்மை பெண்டன்மை யலியின றன்மை
யனைத்துமிருந் தவ்வியல்பொன் றில்லா மேலோன்
காண்டன்மை யாளரருட் கண்ணாய் நானா
கலையீயுஞ் சீராளன் கரிய காலன்
ஏண்டன்மை யெருக்கியசெங் காலன் சேயோ
னெனும்பெரிய சாமிவிசா கப்பே ரேற்கச்
சேண்டன்மை சிறந்துசுடர் விசாக மேநீ
செய்ததவ மென்னேசால் பென்னே யென்னே. – (107)

கொலைபுரியுங் கூரியவன் படையே தாங்கு
குன்றவர்கா ளெம்பெருமா னடியார் ஞான
நிலைபுரியும் பேரருளோ னெடுங்கூர் வேல
னிறைபரமற் கோம்பொருள்சொல் லாசா னென்பான்
அலைபுரியுங் கார்கோள்சூ ழவனி மீதே
ரார்குறவர் மகள்கொண்க னெனும்பேர் தாங்கச்
சிலைபுரிநுங் குலஞ்செய்த தவந்தா னென்னே
சிறுமையினும் மாண்புடைமை யென்னே யென்னே. – (108)

சீலங்கொள் வோரெல்லாம் வணங்கி யாணர்த்
தேவர்கா ளிளம்பெருமா னிணையில் லாதான்
காலங்கள் கடந்தபிரா னுருவில் லாதான்
கருணையே யுருவாக வுடைய தூயோன்
ஆலங்கொள் கண்டமுளான் மகனாய் நுங்கட்
கருள்சேனா பதியென்னும் பெயரொன் றேற்கக்
கோலங்கொ ணீயிரிழைத் துளநோன் பென்னே
குன்றாநும் மாண்புடைமை யென்னே யென்னே. – (109)

ஒருருவு மோர்பெயரு மிலியென் றோதெம்
முடையானா யொளிர்சுப்ர மணிய னெல்லாப்
பாருயிரு மாள்பொருட்டே யவையெண் ணொண்ணாப்
பலதாங்கி நிற்கின்றான் பார்வா ழன்பீர்
சீருருவுஞ் சீர்ப்பெயரு மிலாத வீன
தெய்வப்பேர் வேறுபெயர் தாங்கா தன்னோன்
ஏருயரும் பேர்தாங்கி யேத்த நீவி
ரென்னதவஞ் செய்தீரோ முன்னை நாளில். – (110)

அசைவற்ற தெய்வமெனச் செறிகு கேசற்
கசைவான திருநடன முளதென் றோதல்
இசைவற்ற தீர்வையெனி னிறைவற் கந்த
விருவகையு மிலையென்றா லாட்ட வாடும்
நசையுற்ற வுலகில்லை யதுதா னில்லா
நறும்பரமு மிலையெனவா மதனா லீசன்
வசையற்ற ஞானியைப்போ லிரண்டு நீரு
மரீஇயிருப் பானென்பார் மதியுள் ளாரே. – (111)

நனவிற்கா முறுமுலகத் திழிபோ கத்தை
நாணாளு நச்சுமவா நீங்கா தார்க்குக்
கனவித்தை யினர்ஞானா னந்த நூல்கள்
கழறுநிலை கைவருமோ துவித நோக்காம்
மனவித்தி யாசத்திற் கியைந்த மூர்த்த
வழிபாடே கைவருமென் றறையு மாவிற்
பனவிருத்தி யுடையாரத் துவித யோகாற்
பார்க்கவரு குகனேயென் பரிவா யுள்ளான். – (112)

நீரொலிபோ லூரவர்கூ டொலியுஞ் சார்போர்
நீடுயரா லாடொலிகூ வொலியுங் காரார்
காரொலிபோ லாநமனா வொலியுஞ் சாவே
காண்முழுவே ணார்முருடீ யொலியும் போமா
பேரொலியீ நூபுரமார் சரணன் சூர்மா
பீறயிலோ னேயெனுளே பெருகன் பாலே
கீரொலியா லேயவனீ ரடியும் பாடோர்
கேடிலியா னேனருளே கிளரன் பீரே. – (113)

சீவசத்தி யெனுமதற்கு மும்மலமுந் தூலஞ்
செறியவற்றிற் கதுசூக்க முயிர்க்கதுவுந் தூலம்
சீவசத்திக் குயிர்சூக்க மவ்வுயிருங் குகனாந்
தேவனது சத்தியினுக் கேதூல மதுவுஞ்
சீவனுக்குச் சூக்கமது வுங்குகற்குத் தூலந்
திகழ்குகனவ் வரியசத்திக் கேசூக்க மெனவோர்
சீவரவ னாகவெனிற் சீவசுதந் திரத்தைச்
சேரிறைவற் களித்திடுவார் தெள்ளுணர்வி னாலே. – (114)

தலமுறைநீ ருயிருமலை சலமுறையா சலம்வாழ்
சரவுயிருந் தலமுறையா வெனுமதுபோ லுலகாம்
புலமுடையார் தவநடைசேர் மனமடையார் சிவமா
புண்ணியமுள் ளாருலகோர் வினைவழியி னுழையார்
நலமுடையீ ரிவையுணர்ந்து நசைமனதைத் திருத்தி
ஞாலநுழை யாமலருண் ஞானநுழைந் திருக்க
மலமடுகோ பாலபிரான் வாரயிற்கை மழவன்
மலரடியை நனிநினைமின் வருபகலு மிரவும். – (115)

தன்ன தானன தந்த தானதனா, தனன தானன தந்த தானதனா

தொன்மை நூலள வின்றி யோதினுமே
சுகுர்த மாவிர தஞ்செய் தானுமரோ
புன்மை மாறிட வென்று பாசனையே
புரியு மீசுர னண்பி லாவிடினோர்
நன்மை யேதென வெந்தை யாயசதா
நடன மேதரு கந்த மாதனவேள்
மென்மை யீரடி நம்பு மாதவரே
விமல மாமரு ளின்ப றாதவரே. – (116)

பூரண வருவவு பாசனை யினுமொரு
புரையுமி லுருவவு பாசனை யெளிதென
ஆரண மொழிவண மாசறு பரிவுட
னயருரு வகருமம் யாவும கோசர
காரண னாகிய கடவுள டைகவெனொர்
கடமையை யுடையவர் கருமிக ளோவலர்
சூரண வாநெறி யீதென விழைபவர்
தொழுமுரு காவெனை வளைகவு னருளே. – (117)

அவனை யேமறந் தாற்றறன் செயலென்
றாம தேதரு முதிப்புட னுலப்பும்
எவனு நானிலை யென்றிழைப் பானே
லேத மின்னெறி யேயுள னவனே
மவுனி யாவனெல் லாஞ்சிவன் செயலா
வழங்க யோக்கிய னெனுமுறை யோர்வோர்
சிவப ரம்பொரு ளீதென வணக்கஞ்
செய்வி சாகவெ னைக்கொள நினையே. – (118)

தனத்த தன்னன தனதன தனனா, தனத்த தன்னன தனதன தனனா

திறத்த மண்ணென மழையென விரிவே
திளைத்த விண்ணென வளியென வெரியாம்
நிறத்து மின்னென வுளபொருள் களின்மே
னிகழ்த்து மின்னுயிர் களினிறை பெரியோன்
மறத்தை யெண்ணுநர் புரிசெய றமதா
வலிக்க முன்னுவ திலையிதை யுடையோர்
குறத்தி மன்னவ குருபர வருளே
கொடுத்தி யென்னொரு பரிவெனை நுழையே. – (119)

நெஞ்சி னேர்பு விருத்தி மீறி நிகழுஞ் சீவச் செயலு ளோர்கள்
அஞ்சி டாம லிழைப்ப வெல்லா மாதி சிவனின் செயலென் றோதின்
விஞ்சு நரகத் தீயில் வேவர் மீண்ட னந்த யோனி சேர்வர்
கிஞ்ச முந்தப் பாரென் போர்கள் கேண்மை வேல னடிமை நானே. – (120)

தான்ன தானன தனனத் தனத்தன
தான்ன தானன தனனத் தனத்தன

கோமள வார்முகை மலையைச் சுமப்பவர்
கோசிக மேகலை யரையிற் றரிப்பவர்
மாமண நாண்மலர் குழலிற் றரிப்பவர்
மாலையி லாடவர் மடியைப் பிடிப்பவர்
ஆமட மாதரை யறவிட் டருட்கட
லாடிட வேநினை யடியர்க் ககப்படும்
ஓமய வேலவ னடியைத் துதித்தலு
மோர்நினை வாதலு முறுவர்க் குமுக்கியம். – (121)

தையன தனதனத் தானனத் தானனா
தையன தனதனத் தானனத் தானனா

வள்ளியை மணமுடித் தோன்மலர்ப் பாதமே
வல்லையி லுறனயப் பாமெனச் சூழுமா
ஒள்ளிய வெயிறுடைக் கோவணத் தாருமே
யுவ்வியி னிமிர்சடைத் தாபதத் தாருமே
தெள்ளிய மதிமறைக் காடிருப் பாருமே
செவ்விய தலைமழித் தேகறத் தாருமே
எள்ளிய மனமதைத் தானடக் கார்கணே
யெவ்வித மதிமதர்ப் பேறுநட் பாளரே. – (122)

தானா தனாதன தத்த தத்தன, தானா தனாதன தத்த தத்தன

நாமா ரெனாவறி யத்தி ளைப்பவர் நானா விகாரம றுத்த ணைத்திடு
கோமா னனாமய னற்பு தப்பொறி கோணாத போதகன் விட்டு புத்திரி
சீமா னிராகுல சித்த னொப்பறு சேயோ னறாமலி பொற்ப தத்தினை
யேமா சிலாதெணின் முற்பி றப்புட னேயா வுமேயறி நிட்டை பற்றுவர். – (123)

தனன தந்தன தானா தானன, தனன தந்தன தானா தானன

குமர சம்புகு கேசா வாருணி குரவ கிம்புரி பூணீ டோளிறை
அமரர் கும்பிடு மாதீ தேனினு மமுதி னுஞ்சுவை யாமோர் பூரண
சமர சம்பெற நாயே னாடிது தருணம் வந்ததை யீயா யோகன
திமிர மங்குற மாதே சேதரு திறநெ டும்படை யோடே யார்வொடு. – (124)

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தத்த தான தனத்தத்த தானன

சிறப்புறு கடைச்சவை தனிற்றமிழ் வளர்த்துரை
செப்பு கீர னினைத்திட்ட வாறணி
விறப்புறு திருப்பர மலைத்தலை யினிற்சுரர்
மெச்சு நீரை யழைத்திட்ட கோவவன்
மறப்புறு நினைப்பற விருப்பொடு குளித்ததின்
மட்டி லாம னினைத்திட்ட வேலவ
பிறப்பறு பரத்துவ வருட்குரு நிலத்துழல்
பிச்ச னேனை வளைத்துக்கொள் யோகிடை – (125)

தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன

அருணிலை புகவென வனுதின் நினையு மளியுடை யெனையுண வயிலிறை வருக
கருணிலை தெறுபர சிவகுரு வருக கடகரி முகனிளை யவனனி வருக
தெருணிலை யினரக நடுமணி வருக தினையிடி நுகரொரு குறைவிலி வருக
பொருணிலை யுணரலை யுணிதுரை வருக புதுமல ரணியணி மழமுனி வருக. – (126)

சடமாசுக ளழிவாகுமொர் சுடுகானிடை நின்றே
தத்தத்தன தத்தத்தன தத்தத்தன தந்தா
தடதாகிட தடதாகிட தடதாகிட தந்தா
தாத்தத்தன தாத்தத்தன தாத்தத்தன வென்றே
நடமாடிறை யருண்மாசறு மழவேயுமை மைந்தா
நச்சுக்குண ரச்சப்பட மொட்டுத்தடி கொண்டே
வடவாலை மெனவேவரும் யமதூதுவர் வந்தால்
வாட்டப்பட வாட்டைப்புரி யேத்தெற்குளி ருந்தே. – (127)

(நாற்கூற்றிருக்கை.)

ஒருபூரண சிவனார்செவி யொருநுண்பொருள் சொன்னா
யுரமாரரு ளிருதேவிய ரொருசேர விழைந்தாய்
ஒருசூருட லிருகூறுற வொளிவேலெறி தந்தா
யுணர்வேறிடு முத்தேவரு மிருதாடொழ நின்றாய்
ஒருமாமுனி யறிவேயுற வொருபோதனை செய்தா
யுரைமாமறை யிருசம்பவர் முத்தீமுத லானாய்
திருநான்முகன் முக்கண்ணுள னிருமாலுரு வொன்றாத்
திகழுந்திரு வுருவாயினை யெனையும்படர் குகனே. – (128)

தனதனத் தனனா தனதனத் தனனா
தனதனத் தனனா தனதனத் தனனா

துதிரசத் திருவே சுடர்தனிக் குருவே
சுவைமிகுத் துளதூ வுடையபுத் தமுதே
அதிரசப் பயமே யமலமுப் பழமே
யகிலசக் கரையே யறுமுகத் திறையே
மதிரசப் புயலே மதவருட் கடலே
வரதநற் கரனே மலர்முகக் குகனே
முதிரசத் தியனா யுளவெனைப் புரிவான்
முனமடக் கிடுமோர் நிலையினிற் றிணியே. – (129)

தனதனந் தனனா தனதனந் தனனா
தனதனந் தனனா தனதனந் தனனா

வினைபுரிந் திடுசா திகுலமென் றுளவோ
வினையிறந் திடுமா மதிவனந் தனிலே
உனைவிழைந் தறியா ரெவர்களுங் கடையா
யுளர்நறுங் குணநீ தியின்மிகுந் தறிவால்
உனைவிழைந் தறிவோ ரெவர்களுந் தலையா
யுளரெனுந் துணிபே யுடையவென் பதியே
முனைவரன் புடனே பணியுநன் குகநான்
முழுதுநின் களியே கொளவெழுந் தருளே. – (130)

தனன தானதன தான தானனா தனன தானதன தான தானனா

புகழ்பி ராமணர்க ளான மாசிலார் புகரி லாதகதி மேவு வாரலார்
நிகம மோதவுத வார்பி னாகுவர் நிஜமெ னாமிருதி கூறு நேருளே
அகமி லாதசிவ யோக ரேபிரா மணரெ னாநவிலொர் தீர்வை யாமனோர்
இகழு றாதணவு ஞேய வேலனே யெனைவி டாதுகொளும் வேத நாதனே. – (131)

தனதன தத்ததனா தனதன தத்ததனா
தனதன தத்ததனா தனதன தத்ததனா

வடமொழி யிற்சதுமா மறைபயி றற்கிழிவா
மரபுளர் கட்கதிகா ரமிலையெ னச்சொலினூம்
இடரறு பத்திமைஞா னமிவைகள் சொற்றிடுநூ
லினியத மிழ்க்கவியா திகளில வர்க்கிலையோ
சுடர்பர வைக்கினியா ரடியவர் மெய்ப்பெயரே
சொனபதி கத்திடையே யுளர்குல மெக்குலமா
மடமதொ ழித்துணர்வா லுணர்திரெ னச்சொலுமேன்
மதியர்ப ழிச்சுமகா குமரனெ னைக்கொளுமே. – (132)

சைந ரைத்ததுபோ லாசைந ரைத்தவரே
மேதைய ராமுதியோர் மேனித ளர்ந்ததுபோல்
பாசம னத்தெழுபே மேதளர் வானவரே
பாசறை தீர்பெரியோ ராசது சேர்சிறியோர்
நீசரெ னப்படுவார் பூமிசை மற்றவரென்
னீதியை யுய்த்துணர்வோர் யாவரு மற்புதனார்
தாசரெ னப்படுவா ரன்னவ ராவலொடே
தாழொரு கந்தபிரா னேயெனை யுண்டிடுமே. – (133)

உடலே பெரிதா யுதரஞ் சழிவா யுளருஞ் சரைதா னுளரும் பொருளே
அடர்பா வுளரும் பெரியோ ரலரே யறிவா யவரும் பொருளே யுடையோர்
உடலே சிறிதாய் வயதே குறைவா யுளரென் றிடினும் பெரியோ ரவரே
அடல்வே லனையுந் தெரிவோ ரவரே யறிவா லறிவீர் மனுவா னவரே. – (134)

தானதந்த தானதந்த தானதந்த தானதந்த
தன்னதன் தானதன தானதன தானதனா

தாதுவிஞ்சு சேடிருந்து தாதடங்கு போதுசம்பு
சரணமுற ஞானகுரு நெறியடைமி னேடியெனா
ஓதுகின்ற நூல்விரும்பு ஞாலமைந்த ரேசுமந்த
வுடலுறுதி யோவிடையு மழிவடையு மேயதனால்
மாதுகொஞ்சு பீடைமங்க வோடியன்பர் தேடுகந்தன்
மதிமருவு ஞானிகள்சொல் வழியைவிரை வாயடைவீர்
கோதுகொன்று ளார்விரும்பு வேதமிந்த வாறியம்பல்
குறைவறுவி வேகமென வறிநரும னேகரரோ. – (135)

அறியாமை கடுத்தறிரி பெனுங்கசடு தவிர்ந்துநிஜ
மறைசுருதி பிடித்துநவில் குருமுன் னாகிக்
குறியாத குறிப்பொருளை யுரிமையொடு முணர்ந்துறுதி
கொடுகருவி முதலியன தழையா நீர்மை
பெறுமாறு மனமடக்கி யிருப்பவர்கள் விரும்புபரப்
பிரமமெனுந் திருமுருகப் பெருமாள் கூறும்
அறைநாடி யிரவுபகல் வழிபடுமென் கவலையற
வளிப்பதவன் செயலெனலென் றுணிபே மன்னோ. – (136)

தான தந்தன தனன தந்தன, தான தந்தன தனன தந்தன

ஆதி முன்பதி சிகர மந்தர மாசி லின்பருள் வகர மொன்றுற
ஒதி னொண்சிவ மெனவெ ழுந்திடு மூறு கொன்றிடு மதன றும்பொருள்
ஏதின் மங்களம் வசிய மென்றெழு மேயி தென்குரு பெயரு ளொன்றென
ஆத லுந்தெரி பவர்கள் கந்தன தாடல் கண்டிட வடிவ ணங்குக. – (137)

கலந்த வைந்தின கரந்தி ரோதைம
கரம்ப ழங்கறை யிரண்டி ரும்பதி யவங்கியாம்
மலந்த ளும்படி விரும்பு வோர்தலை
மலந்தி ரோதைக ளிரண்டு மேகடை யமர்ந்திடக்
கலந்து கோடலு மிரண்டெ னும்பதி
கனிந்து கோடலு மருஞ்சி காரமெ னுமொன்றையே
மலர்ந்து கோடலு மியைந்த வாறெனும்
வரம்பர் நாடொரு கடம்ப னேயெனை யுணும்பிரான். – (138)

தன்னதன் தான தான தன்னதன் தான் தான்
தன்னதன் தான தானனா.

சகரமுத லாறு மாசில் பதியகர மாவ தாவி
சரதநம பாச மாமெலாம்
நிகழுமொழி மேனி லாவு பொருள்சரவ ணேச னான
நிருமலன மாவெ னாகுமே
பகரிவையொ டோமு மேறி னெடியதச மாம்வி சேட
பலனுறவ வாவு மூழுளோர்
புகழுமெதை யேனும் வீர வுறுதியொடு கோடி யேசெய்
புனிதமுறின் வீடு மாள்வரே. – (139)

தானன தந்த தானன தன்ன, தனதன தந்தத் தந்தன தானன தானனா

வாசக மந்த மானத மென்னும்
வகையினி லொன்றிற் கொன்றுயர் வாய்நல மீயுமால்
நாசமி லந்த வாசக மென்ன
நவில்வது துன்பச் சந்தெறு மாமனு வோதிடா
தாசறு மந்த மானத மென்னு
மடைவின்மு யன்றொட் பம்பெறு வீரிலை வேலொடே
ஏசறு கந்த னாமென மின்னி
யெளிவரு மெந்தைக் கின்புள ராமடி யார்களே. – (140)

நான்ன நனநன நனநத்த நந்தநந்
நான்ன நனநன நனநத்த நத்தன நந்தனா

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.