சித்து வகுப்பு – 16

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல்

அடல்பு னைந்த வேலு மயிலும் என்றும் வாழி
அரிய தொன்று கூற அருகி ருந்து கேண்மின் (1)

அளவில் பலகாய மோடாடி யண்டர்
அறிய விளையாட வர்முலி ஒன்றில் (2)

ஆசை வேறிலை அறுமுக வன்திரு
ஆணை மேருவை அடிதலை கண்டனம் (3)

அகில லோகமும் அடைவடை வேமுதல்
அருளி னோம்அது சிவனறி யாதல (4)

அமையும் எனும்படி நின்ற மநோரதம்
அவைமுழு துந்தரு வம்பத றாதுகொள் (5)

ஆதியு முடிவுமி லாநந் தந்தரும்
ஆறிரு கரதல நாதன் தந்தவை (6)

அவுஷதம் உளசில கிலுகி லுப்பைகள்
அரசிலை நறுவிலி கரிய கக்கரி (7)

அத்தி செம்பி ராகை முட்காவளை
துத்தி சங்கம் ஓரி தழ்த்தாமரை (8)

அவுரி கற்றாழை யொடுவைகு றிஞ்சிலி
சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம் (9)

ஆரைகொடு வேலி வேல்காஞ்சிரம்
வீரையிரு வேலி பேரீ ந்திலை (10)

அமுக்குர வெருக்கிலை முருக்கிதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை (11)

ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல்
கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை (12)

அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம் (13)

அறுகு தழுதாழை maபாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிஞ்சில் (14)

ஆயி லாவிரை இறலி இரும்பிலி
ஆடி ஆவணி புடமிட என்றழை (15)

அவனி பாடல மனல மகீ ருகம்
இவைச மூலமும் எழுபது சாலடை (16)

அதிம துரந்தக ரஞ்சிறு பாலடை
பதிமுக வெந்தய மின்கய மோதகம் (17)

ஆறிடை அபினிரி தாரங் கந்தகம்
நூறிடை திரிபலை யோரொன் றெண்பலம் (18)

அதிவிட யமுமொழி கிருமி சத்ருவும்
அனல்முறு கலுமற முறுகு துத்தமும் (19)

அற்பம் ஒன்று கீரை வித்தேழிடை
யத்தில் ஒன்று பாதி தக்கோலமும் (20)

அடவி கச்சோல நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி (21)

ஆமலகம் ஏலம் நான்மூன்றிடை
சேமசிால கூட லோகாஞ்சனம் (22)

அரப்பொடி கடிப்பகை விடத்திர ணமப்பிர
கசத்தைசத குப்பிவிதை கொத்தமலி திப்பிலி (23)

ஆலி கோட்டம் எலிப்பகை சச்சிலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின் (24)

மடல்சி வந்த தாழை மணவ சம்பு நீலம்
வருகு ரும்பை கோடல் துருசு சம்பி ராணி (25)

மரிசி வசவாசி காகீச மஞ்சள்
மகிழ விதைமேதை மாமேதை குன்றி (26)

வாரி வாய்நுரை சயில சலம்புரி
பூரி வாதுமை சணவுபெ ருங்குமிழ் (27)

வடுவில் சீரக பலமயி ரோசனை
கடுகு ரோகணி சிவதைம னோசிலை (28)

வகைவகை கொண்டொரு மண்டல மோரொடு
குகையினில் எண்பது செம்பினில் ஊறவை (29)

வாதநல் வழிகள் அநேகம் பண்டையில்
வாகடம் அலகுரு நாதன் தந்தது (30)

வழிபடும் அரியர பிரம ருட்பட
மொழிகிற வகையிது சிறிது பெற்றிலர் (31)

மற்றும் இந்த்ர சாலம் உச்சாடனம்
முற்று மிங்ங னேத ரத்தாழ்விலை (32)

மதலை யர்க்கீது மொழிவது பண்பல
கதவி னிற்றாழை யிடுபயம் ஒன்றிலை (33)

வாலுழுவை யோரி காராம்பசு
வாலின்மயிர் கீரி தேவாங்கழை (34)

மரித்தவர் சனித்தகுழி உப்புறு சலத்தினை
வடித்தினி தெடுத்தொரு குடத்தினில் நிறைத்துவை (35)

மாறில் தோத்திர வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கிலை (36)

ரசவாதி கேட்பன (37)

மணம தின்று நாளை எனமொ ழிந்து கேளு
மனைகள் எங்கும் ஓடி இனிவி ரைந்து தேடு (38)

வளையல் குழைபீலி காலாழி தண்டை
மணிவ யிரவீடு மேலீடு செம்பொன் (39)

வாளி பாடக மணிபிறை சங்கிலி
பாளை சூடக மயிலம் இலம்பகம் (40)

மவுலி நூபுர மயில்திரு வாசிகை
சவடி தோள்வளை முகவளை மேல்வளை (41)

மரகத குண்டலம் வெண்டய மேகலை
அரசிலை கம்பி குறுங்குணி சாலகம் (42)

வாரணி யுடைமணி ஆரங் கிங்கிணி
வாகுவ லயநெளி பீடங் கண்டிகை (43)

மணிமக ரிகைவளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள் (44)

வட்ட அம்பொ னோலை முத்தாவளி
சுட்டி சந்து காறை கைக் காறைகள் (45)

வடக முத்தோலை அரைவட முஞ்செறி
கடகம் வித்தார மகர நெடுங்குழை (46)

மாதரணி தாலி நூல்காஞ்சனம்
மாலிகை மதாணி பீ தாம்பரம் (47)

மதிப்பரிய கைச்சரி சரப்பணி யிலைச்சினை
பதக்கம் இவையுட்பட அணிப்படலம் இட்டுவை (48)

மாடை பாட்டிபு தைத்த குடப்பண
மோடு கூட்டியு ருக்கவி ருப்புடன் (49)

இடுப்ர சங்கி யாமல் உலை அ நந்தகோடி
எரியில் வெந்தி டாத கரிநி ரம்ப வேணும் (50)

இதுபழைய கவுரி பாஷாண வுண்டை
யிடுசகல வேதி பூநாக செம்பின் (51)

ஈயம் ஆனதொர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும் (52)

யமுனை நீர்கொடு குகைபதி னாயிரம்
இறுக வேசமை நிலஅறை யூடுவை (53)

எழுபதொ டெண்பது வண்டியி லேபதர்
இடுகொடு வந்து சொரிந்து குவாலிடு (54)

யாமொழி படரச வாதந் தந்தன
நீசிவ குருவுப காரங் கண்டிரு (55)

இரதமொ டுருகிய சருகு பித்தளை
இவைஇவை குகைதொறும் இடை நறுக்கிவை (56)

எற்ற வந்தி ராது பொய்க்காளல
எட்டி ரண்டு மாறு தப்பாதுகொள் (57)

எழுப தக்ரோணி புடமுள செங்களம்
ரணமு கத்தானை படையொடு வந்திரு (58)

ஈழம்வெகு கோடி யாமீந்திட
ஏழுநிலை மாட நீமேய்ந்துகொள் (59)

இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கற உனக்கரு கடுக்கிவை சடக்கென (60)

யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கிவை
ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம் (61)

இறைவர் குன்ற மானை மணம கிழ்ந்த நாளில்
இணையில் அண்ட ரோடும் உணவு கொண்ட தாகும் (62)

எமது பசிதீர மாராச இந்த்ர
அமுது படைபோத ஆகாச கங்கை (63)

ஆறு போலநெய் சொரிவட கம்படை
நூறு சாலொடு பொரியலை இங்கழை (64)

இடுக மாவடு வடையிடை கீரையி
லவணம் ஊறிய கறியடை வேபடை (65)

இருபது தண்டை யுடும்பு குவால்சமை
துருவைகள் பன்றி சமைந்தஎ லாம்அழை (66)

யாமைஅ வியல்முயல் ஆணங் கண்டறி
யோமிது சிவசிவ மேலெங் கும்படை (67)

இடைவெளி யறமிகு விடுக ருக்கலை
யிறவகை கயல்கெளி றிவைபொ டித்தன (68)

எட்டு வண்டி வாளை யிற்பீலியில்
இட்ட முண்டு தீயன் முற்பாடழை (69)

இடைகொ ழுப்பாடில் இளையஎ லும்புடன்
அடைசு ரைக்காயில் அடுபடை முன்கறி (70)

ஈறுபுளி வார்வி டாய்போம்படி
ஏடு பிரியாத பால்தேன்சொரி (71)

இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனி
ரசத்தினை யனைத்தையும் இலைக்குள் அடையப்படை (72)

ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம்
யாரு மேத்த இனிச்சுகம் உற்றிரு (73)

முருகன் பெருமை .. சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர்
முருகன் திருப்புகழைக் கற்றவரே (74)

மிடைத ரும்ப்ர வாள சடைபெ ரும்ப்ர வாக
விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை (75)

விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத மாதாவின் மைந்தன் (76)

மீன கேதனன் உருவின் மிகுந்தருள்
தான வாரிதி சரவண சம்பவன் (77)

விகிர்தி வேதனன் மவுன சுகாதனன்
அகில காரணன் அகில கலாதரன் (78)

விகசித சுந்தர சந்தன பாளித
ம்ருகமத குங்கும கஞ்சப யோதரி (79)

வேழுமு முழைகளும் ஆரும் பைம்புனம்
மேவுறு குறமகள் மேவுந் திண்புயன் (80)

விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன்
அரிதிரு மருமகன் அறுமு கத்தவன் (81)

வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற
விட்ட வென்றி வேல்மு ழுச்சேவகன் (82)

வெருவு நக்கீரர் சரணென வந்தருள்
முருக னிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன் (83)

மேதகுபு ராண வேதாங்குரன்
ஓதரிய மோன ஞானாங்குரன் (84)

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட
அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன் (85)

வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி (86)

வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற
விரவும் இந்த்ர லோக வழிதி றந்த மீளி (87)

மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்
விகட அசுரேசர் சாமோது சண்டன் (88)

மேக வாகன மிகுமத வெண்கய
பாக சாதன னகரி புரந்தவன் (89)

விபுத தாரகன் விபுத திவாகரன்
விபுத தேசிகன் விபுத சிகாமணி (90)

விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்
அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன் (91)

மேருவை யிடிபட மோதுஞ் சங்க்ரம
தாரகன் மகுட விபாடன் புங்கவன் (92)

வெயிலுமிழ் கொடியொடு வினைமு கத்தினின்
மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன் (93)

வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் ப்ரதாப வித்யாதரன் (94)

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்
நிருத நிட்டூரன் nிருதர் பயங்கரன் (95)

வீரமத லோக வேள் காங்கெயன்
சூரரண சூர சூராந்தகன் (96)

வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடல் (97)

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே (98)

பதம் பிரித்தது

அடல் புனைந்த வேலும் மயிலும் என்றும் வாழி
அரியது ஒன்று கூற அருகிருந்து கேண்மின் (1)

அளவில் பல காயமோடு ஆடி அண்டர்
அறிய விளையாட வர்முலி ஒன்றில் (2)

ஆசை வேறு இல்லை அறுமுகவன் திரு
ஆணை மேருவை அடி தலை கண்டனம் (3)

அகில லோகமும் அடைவடைவே முதல்
அருளினோம் அது சிவன் அறியாதது அல்ல (4)

அமையும் எனும் படி நின்ற மனோரதம்
அவை முழுதும் தருவம் பதறாது கொள் (5)

ஆதியும் முடிவும் இல்லா ஆனந்தம் தரும்
ஆறு இரு கரதல நாதன் தந்தவை (6)

ஔஷதம் உள சில கிலுகிலுப்பைகள்
அரசு இலை நறுவிலி கரிய கக்கரி (7)

அத்தி செம்பிராகை முட்காவளை
துத்தி சங்கம் ஓரிதழ் தாமரை (8)

அவுரி கற்றாழையொடு வைகுறிஞ்சிலி
சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம் (9)

ஆரை கொடுவேலி வேல் காஞ்சிரம்
வீரை இருவேலி பேரீந்து இலை (10)

அமுக்குர எருக்கு இலை முருக்கு இதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை (11)

ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல்
கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை (12)

அகில் பரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்துவாரம் (13)

அறுகு தழுதாழை மாபாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிஞ்சில் (14)

ஆயில் ஆவிரை இறலி இரும்பிலி
ஆடி ஆவணி புடமிட என்று அழை (15)

அவனி பாடலம் அனல் மகீருகம்
இவை சமூலமும் எழுபது சால் அடை (16)

அதிமதுரம் தகரம் சிறுபாலடை
பதி முக வெந்தயம் இன்கய மோதகம் (17)

ஆறிடை அபினி அரிதாரம் கந்தகம்
நூறிடை திரிபலை ஓரோன் எண்பலம் (18)

அதிவிடயமு மொழி கிருமி சத்ருவும்
அனல் முறுகலும் அற முறுகு துத்தமும் (19)

அற்பம் ஒன்று கீரை வித்து ஏழிடை
யத்தில் ஒன்று பாதி தக்கோலமும் (20)

அடவி கச்சோல நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி (21)

ஆமலகம் ஏலம் நான்மூன்றிடை
சேம சால கூட லோகாஞ்சனம் (22)

அரப்பொடி கடிப்பகை விடத்திரணம் அப்பிர
கசத்தை சதகுப்பி விதை கொத்தமல்லி திப்பிலி (23)

ஆலி கோட்டம் எலிப்பகை சச்சிலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின் (24)

மடல் சிவந்த தாழை மண வசம்பு நீலம்
வரு குறும்பை கோடல் துருசு சாம்பிராணி (25)

மரிசி வசவாசி காகீச மஞ்சள்
மகிழ விதை மேதை மாமேதை குன்றி (26)

வாரி வாய்நுரை சயில சலம்புரி
பூரி வாதுமை சணவு பெருங்குமிழ் (27)

வடுவில் சீரக பலம் அயிரோசனை
கடுகு ரோகணி சிவதை மனோசிலை (28)

வகை வகை கொண்டு ஒரு மண்டலம் மோரோடு
குகையினில் எண்பது செம்பினில் ஊற வை (29)

வாத நல் வழிகள் அநேகம் பண்டையில்
வாகடம் அல குருநாதன் தந்தது (30)

வழிபடும் அரி அர பிரமர் உட்பட
மொழிகிற வகை இது சிறிது பெற்றிலர் (31)

மற்றும் இந்திரஜாலம் உச்சாடனம்
முற்றும் இங்ஙனே தரத் தாழ்வு இல்லை (32)

மதலையர்க்கு இது மொழிவது பண்பு அல்ல
கதவினில் தாழை இடு பயம் ஒன்று இல்லை (33)

வாலுழுவை ஓரி காராம்பசு
வாலின் மயிர் கீரி தேவாங்கு அளை (34)

மரித்தவர் சனித்த குழி உப்புறு சலத்தினை
வடித்து இனிது எடுத்து ஒரு குடத்தில் நிறைத்து வை (35)

மாறில் தோத்திர வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கு இல்லை (36)

ரசவாதி கேட்பன: (37)

மணம் அது இன்று நாளை என மொழிந்து கேளு
மனைகள் எங்கும் ஓடி இனி விரைந்து தேடு (38)

வளையல் குழை பீலி காலாழி தண்டை
மணி வயிர வீடு மேலீட்டுச் செம்பொன் (39)

வாளி பாடக மணி பிறை சங்கிலி
பாளை சூடக மயிலம் இலம்பகம் (40)

மவுலி நூபுர மயில் திருவாசிகை
சவடி தோள்வளை முகவளை மேல்வளை (41)

மரகத குண்டலம் வெண்டய மேகலை
அரசிலை கம்பி குறுங்குணி சாலகம் (42)

வாரணி உடைமணி ஆரங் கிங்கிணி
வாகு வலைய நெளி பீடங் கண்டிகை (43)

மணி மகரிகை வளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள் (44)

வட்ட அம்பொன் ஓலை முத்தாவளி
சுட்டி சந்து காறை கைக்காறைகள் (45)

வடக முத்தோலை அரைவடமும் செறி
கடகம் வித்தார மகர நெடுங்குழை (46)

மாதர் அணி தாலி நூல் காஞ்சனம்
மாலிகை மதாணி பீதாம்பரம் (47)

மதிப்பரிய கைச்சரி சரப்பணி இலைச்சினை
பதக்கம் இவை உட்பட அணிப்படலம் இட்டு வை (48)

மாடை பாட்டி புதைத்த குடப் பணம்
ஓடு கூட்டி உருக்க விருப்பமுடன் (49)

இடு பிரசங்கியாமல் உலை அனந்த கோடி
எரியில் வெந்திடாத கரி நிரம்ப வேணும் (50)

இது பழைய கவுரி பாஷாண உண்டை
இடு சகல வேதி பூநாகச் செம்பின் (51)

ஈயமானது ஓர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும் (52)

யமுனை நீர் கொடு குகை பதினாயிரம்
இறுகவே சமை நில அறை ஊடு வை (53)

எழுபதோடு எண்பது வண்டியிலே பதர்
இடு கொண்டு வந்து சொரிந்து குவாலிடு (54)

யாம் மொழி பட ரசவாதம் தந்தன
நீ சிவ குரு உபகாரம் கண்டிரு (55)

இரதமொடு உருகிய சருகு பித்தளை
இவை இவை குகைதொறும் இடை நறுக்கி வை (56)

எற்ற வந்திராது பொய்க்கால் அல்ல
எட்டு இரண்டு மாறு தப்பாது கொள் (57)

எழுபது அக்ரோணி புடமுள்ள செங்களம்
ரணமுகத்தானை படையொடு வந்திரு (58)

ஈழம் வெகு கோடி யாம் ஈந்திட
ஏழு நிலை மாடம் நீ மேய்ந்து கொள் (59)

இபத் திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கு அற உனக்கு அரு கடுக்கி வை சடக்கென (60)

யாவும் வாய்ப்பது சத்தியம் உனக்கு இவை
ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம் (61)

இறைவர் குன்ற மானை மணம் மகிழ்ந்த நாளில்
இணையில் அண்டரோடும் உணவு கொண்டதாகும் (62)

எமது பசி தீர மாராச இந்திரன்
அமுது படைபோத ஆகாச கங்கை (63)

ஆறு போல நெய் சொரி வடகம் படை
நூறு சாலொடு பொரியலை இங்கு அழை (64)

இடுக மாவடு வடையிடை கீரையி-
லவணம் ஊறிய கறியடைவே படை (65)

இருபது தண்டை உடும்பு குவால் சமை
துருவைகள் பன்றி சமைந்த எல்லாம் அழை (66)

ஆமை அவியல் முயல் ஆணங் கண்டறி-
யோம் இது சிவசிவ மேல் எங்கும் படை (67)

இடைவெளி அற மிகு விடுகருக் கலை
இற வகை கயல் கெளிறு இவை பொடித்தன (68)

எட்டு வண்டி வாளையில் பீலியில்
இட்டம் உண்டு தீயன் முற்பாடு அழை (69)

இடை கொழுப்பு ஆடில் இளைய எலும்புடன்
அடை சுரைக்காயில் அடு படை முன்கறி (70)

ஈறு புளி வார் விடாய் போம்படி
ஏடு பிரியாத பால் தேன் சொரி (71)

இருக்கிற சர்க்கரை வருக்கை கதலி கனி
ரசத்தினை அனைத்தையும் இலைக்குள் அடையப் படை (72)

ஈக பாக்குடன் வெற்றிலை கற்பூரம்
யாருமே ஏத்த இனிச் சுகமுற்று இரு (73)

முருகன் பெருமை.. சித்தர்களுள் பிரசித்தி பெற்றவர்
முருகன் திருப்புகழைக் கற்றவரே (74)

மிடைதரும் பிரவாள சடை பெரும் பிரவாக
விமலர் கொன்றை மாலை தருண சந்திர ரேகை (75)

விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத மாதாவின் மைந்தன் (76)

மீனகேதனன் (மன்மதன்) உருவின் மிகுந்து அருள்
தான வாரிதி சரவண சம்பவன் (77)

விகிர்தி வேதனன் மவுன சுகாதனன்
அகில காரணன் அகில கலாதரன் (78)

விகசித சுந்தர சந்தன பாளித
மிருகமத குங்கும கஞ்ச பயோதரி (79)

வேழமும் முழைகளும் ஆரும் பைம்புனம்
மேவுறு குறமகள் மேவும் திண்புயன் (80)

விரிகடல் துகள் எழ வெகுளும் விக்கிரமன்
அரி திருமருமகன் அறுமுகத்தவன் (81)

வெட்சி கொண்ட தோளன் வெற்பு ஊடுற
விட்ட வென்றி வேல் முழுச் சேவகன் (82)

வெருவு நக்கீரர் சரண் என வந்தருள்
முருகன் நிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன் (83)

மேதகு புராண வேதாங்குரன்
ஓதரிய மோன ஞானாங்குரன் (84)

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் பிரியப்பட
அகத்திய முனிக்கு ஒரு தமிழ்த்ரயம் உரைத்தவன் (85)

வேத மூர்த்தி திருத்தணி வெற்பு உறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி (86)

வெகுளி வென்ற வேள்வி முனிவர் சங்கம் ஏற
விரவும் இந்திர லோக வழி திறந்த மீளி (87)

மிக விருது கூறு மேவார்கள் கண்டன்
விகட அசுரேசர் சாமோது சண்டன் (88)

மேக வாகன மிகு மத வெண்கய 
பாக சாதனன் நகரி புரந்தவன் (89)

விபுத தாரகன் விபுத திவாகரன்
விபுத தேசிகன் விபுத சிகாமணி (90)

விபரீத கஞ்ச விரிஞ்ச பராமுகன்
அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன் (91)

மேருவை இடிபட மோதும் சங்கிரம
தாரகன் மகுட விபாடன் புங்கவன் (92)

வெயில் உமிழ் கொடியொடு வினை முகத்தினின்
மயில் மிசை வரும் ஒரு வரதன் நிர்ப்பயன் (93)

வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் பிரதாப வித்யாதரன் (94)

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்
நிருத நிட்டூரன் நிருதர் பயங்கரன் (95)

வீர மத லோக வேள் காங்கெயன்
சூர ரண சூர சூராந்தகன் (96)

வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் கிருபைக் கடல் (97)

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப் பிரசித்தரே! (98)