02.080 வரிய மறையார்

தலம் : கடவூர் மயானம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : காந்தாரம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : மலர்க்குழல் மின்னம்மை.

திருச்சிற்றம்பலம்

வரிய மறையார் பிறையார்
மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார்
எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார்
கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார்
அவரெம் பெருமான் அடிகளே. 1

மங்கைமணந்த மார்பர் மழுவாள்
வலனொன்றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார்
கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச்
செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார்
அவரெம் பெருமான் அடிகளே. 2

ஈடல்இடபம் இசைய
ஏறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார்
கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி
படுதம்பலவும் பயில்வார்
ஆடல்அரவம் உடையார்
அவரெம் பெருமான் அடிகளே. 3

இறைநின்றிலங்கு வளையாள்
இளையாளொருபா லுடையார்
மறைநின்றிலங்கு மொழியார்
மலையார்மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ்
கடவூர்மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார்
அவரெம் பெருமான் அடிகளே. 4

வெள்ளையெருத்தின் மிசையார்
விரிதோடொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார்
சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார்
கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார்
அவரெம் பெருமான் அடிகளே. 5

பொன்றாதுதிரு மணங்கொள்
புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த
துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற்
கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையார் ஒருவர்
அவரெம் பெருமான் அடிகளே. 6

பாசமான களைவார்
பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார்
அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார்
கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவரெம்
பெருமான் அடிகளே. 7

செற்றஅரக்கன் அலறத்
திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான்
கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய
மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார்
அவரெம் பெருமான் அடிகளே. 8

வருமாகரியின் உரியார்
வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் உடையார்
கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந்
தேர்ந்துங்காணமுன் ணொண்ணாப்
பெருமானெனவும் வருவார்
அவரெம் பெருமான் அடிகளே. 9

தூயவிடைமேல் வருவார்
துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார்
கடவூர்மயானம் அமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ்
சிறுபுன்தேரர் அமணர்
பேய்பேயென்ன வருவார்
அவரெம் பெருமான் அடிகளே. 10

மரவம் பொழில்சூழ் கடவூர்
மன்னுமயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான்
அகலம்அறிய லாகப்
பரவுமுறையே பயிலும்
பந்தன்செஞ்சொல் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார்
வினைகள் இலரே. 11

திருச்சிற்றம்பலம்