பதிநான்காம் திருமொழி : பட்டிமேய்ந்தோர்

விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறுதல்

637 பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே?
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீரூட்டி
விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (2) 1

638 அனுங்கவென்னைப்பிரிவுசெய்து ஆயர்பாடிகவர்ந்துண்ணும்
குணுங்குநாறிக்குட்டேற்றைக் கோவர்த்தனனைக்கண்டீரே?
கணங்களோடுமின்மேகம் கலந்தாற்போல வனமாலை
மினுங்கநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. 2

639 மாலாய்ப்பிறந்தநம்பியை மாலேசெய்யும்மணாளனை
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே?
மேலால்பரந்தவெயில்காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும்
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே. 3

640 கார்த்தண்கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறுபடுத்தி என்னை
ஈர்த்துக்கொண்டுவிளையாடும் ஈசன்றன்னைக்கண்டீரே?
போர்த்தமுத்தின்குப்பாயப் புகர்மால்யானைக்கன்றேபோல்
வேர்த்துநின்று விளையாட விருந்தாவனத்தேகண்டோமே. 4

641 மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல்
ஏதுமொன்றும்கொளத்தாரா ஈசன்றன்னைக்கண்டீரே?
பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல்
வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2) 5

642 தருமமறியாக்குறும்பனைத் தங்கைச்சார்ங்கமதுவேபோல்
புருவவட்டமழகிய பொருத்தமிலியைக்கண்டீரே?
உருவுகரிதாய்முகம்செய்தாய் உதயப்பருப்பதத்தின்மேல்
விரியும்கதிரேபோல்வானை விருந்தாவனத்தேகண்டோமே. 6

643 பொருத்தமுடையநம்பியைப் புறம்போலுள்ளும்கரியானை
கருத்தைப்பிழைத்துநின்ற அக்கருமாமுகிலைக்கண்டீரே?
அருத்தித்தாராகணங்களால் ஆரப்பெருகுவானம்போல்
விருத்தம்பெரிதாய்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே. 7

644 வெளியசங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை
அளிநன்குடையதிருமாலை ஆழியானைக்கண்டீரே?
களிவண்டெங்கும்கலந்தாற்போல் கழம்பூங்குழல்கள்தடந்தோள்மேல்
மிளிரநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. 8

645 நாட்டைப்படையென்று அயன்முதலாத்தந்த நளிர்மாமலருந்தி
வீட்டைப்பண்ணிவிளையாடும் விமலன்றன்னைக்கண்டீரே?
காட்டைநாடித்தேனுகனும் களிறும்புள்ளுமுடன்மடிய
வேட்டையாடிவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2) 9

646 பருந்தாட்களிற்றுக்கருள்செய்த பரமன்றன்னை பாரின்மேல்
விருந்தாவனத்தேகண்டமை விட்டுசித்தன்கோதைசொல்
மருந்தாமென்றுதம்மனத்தே வைத்துக்கொண்டுவாழ்வார்கள்
பெருந்தாளுடையபிரானடிக்கீழ்ப் பிரியாதென்றுமிருப்பாரே. (2) 10

1 thought on “பதிநான்காம் திருமொழி : பட்டிமேய்ந்தோர்”

Leave a Reply