இரண்டாம் திருமொழி – தேட்டருந்திறல்

அரங்கனடியாரதுஅடிமைத்திறத்தில்ஈடுபடுதல்

658 தேட்டரும்திறல்தேனினைத் தென்னரங்கனை திருமாதுவாழ்
வாட்டமில்வனமாலைமார்வனைவாழ்த்தி மால்கொள்சிந்தையராய்
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும்மெய்யடியார்கள்தம்
ஈட்டம்கண்டிடக்கூடுமேல் அதுகாணும்கண்பயனாவதே (2) 1

659 தோடுலாமலர்மங்கை தோளிணைதோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரைமேய்த்தும் இவையேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந்தாடும்வேட்கையென்னாவதே? 2

660 ஏறடர்த்ததும்ஏனமாய்நிலம்கீண்டதும் முன்னிராமனாய்
மாறடர்த்ததும்மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்டுஅரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர்சேவடிச்செழுஞ்சேறு என்சென்னிக்கணிவனே. 3

661 தோய்த்ததண்தயிர்வெண்ணெய்பாலுடன்உண்டலும் உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடையெம்பிரான் என்னரங்கனுக்கடியார்களாய்
நாத்தழும்பெழநாரணாவென்றழைத்து மெய்தழும்பத்தொழு
தேத்தி இன்புறும்தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென்நெஞ்சமே. 4

662 பொய்சிலைக்குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவீர்த்தகோன்
செய்சிலைச்சுடர்சூழொளித் திண்ணமாமதிள்தென்னரங்கனாம்
மெய்சிலைக்கருமேகமொன்று தம்நெஞ்சில்நின்றுதிகழப்போய்
மெய்சிலிர்ப்பவர்தம்மையேநினைந் தென்மனம்மெய்சிலிர்க்குமே. 5

663 ஆதியந்தமனந்தமற்புதமானவானவானவர்தம்பிரான்
பாதமாமலர்சூடும்பத்தியிலாத பாவிகளுய்ந்திட
தீதில்நன்னெறிகாட்டி எங்கும்திரிந்தரங்கனெம்மானுக்கே
காதல்செய்தொண்டர்க்கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென்னெஞ்சமே. 6

664 காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வனரங்கனென்னும் அரும்பெருஞ்சுடரொன்றினை
சேரும்நெஞ்சினராகிச் சேர்ந்துகசிந்திழிந்தகண்ணீர்களால்
வாரநிற்பவர்தாளிணைக்கு ஒருவாரமாகுமென்னெஞ்சமே. 7

665 மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுநறுந்துழாய்
மாலையுற்றவரைப்பெருந்திருமார்வனை மலர்க்கண்ணனை
மாலையுற்றெழுந்தாடிப்பாடித் திரிந்தரங்கனெம்மானுக்கே
மாலையுற்றிடும்தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென்நெஞ்சமே. 8

666 மொய்த்துக்கண்பனிசோரமெய்கள்சிலிர்ப்ப ஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடுநட்டமிட்டெழுந்து ஆடிப்பாடியிறைஞ்சி என்
அத்தனச்சனரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தராமவர்பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும்பித்தரே. 9

667 அல்லிமாமலர்மங்கைநாதன்அரங்கன்மெய்யடியார்கள்தம்
எல்லையிலடிமைத்திறத்தினில்என்றுமேவுமனத்தனாம்
கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன்
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே. (2) 10

1 thought on “இரண்டாம் திருமொழி – தேட்டருந்திறல்”

Leave a Reply