அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்-திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு :சோழநாடு காவிரி வடகரை
தலம் : மழபாடி
சுவாமி : வச்சிரத்தம்பேசுவரர்;
தேவியார் : அழகாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்
சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 1
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 2
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 3
ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 4
சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 5
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10
திருச்சிற்றம்பலம்