அவை அடக்கம் – கந்தபுராணம்

இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்
முறைவரை வேன்என முயல்வ(து) ஒக்குமால்
அறுமுகம் உடையவோர் அமலன் மாக்கதை
சிறியதோர் அறிவினேன் செப்ப நின்றதே. 1

வேறு

ஆன சொல்தமிழ் வல்ல அறிஞர்முன்
யானும் இக்கதை கூறுதற்(கு) எண்ணுதல்
வான கத்(து)எழும் வான்கதி ரோன்புடை
மீன்இ மைப்ப விரும்பிய போலுமால். 2

முன்சொல் கின்ற முனிவட நூல்தெரீஇத்
தென்சொ லால்சிறி யேன்உரை செய்தலான்
மென்சொ லேனும் வெளிற்றுரை யேனும் வீண்
புன்சொ லேனும் இகழார் புலமையோர். 3

சிந்தும் என்பு சிரம்பிறை தாங்கினோன்
மைந்தன் ஆதலின் மற்றவன் தானும்என்
சந்த மில்லுரை யும்தரிப் பான்எனாக்
கந்த னுக்(கு)உரைத் தேன்இக் கதையினை. 4

வெற்றெ னத்தொடுத்(து) ஈர்த்து வெளிற்றுரை
முற்றும் ஆக மொழிந்தஎன் பாடலில்
குற்றம் நாடினர் கூறுப தொல்லைநூல்
கற்று(உ) ணர்ந்த கலைஞர்அல் லோர்களே. 5

குற்ற மேதெரி வார்குறு மாமுனி
சொற்ற பாவினும் ஓர்குறை சொல்வரால்
கற்றி லாஎன் கவிவழு ஆயினும்
முற்றும் நாடிவல் லோர்உய்த்(து) உரைக்கவே. 6

வேறு

குறைபல மாமதி கொளினும் அன்னதால்
உறுபயன் நோக்கியே உலகம் போற்றல்போல்
சிறியஎன் வெளிற்றுரை சிறப்பின் றாயினும்
அறுமுகன் கதைஇதுஎன்(று) அறிஞர் கொள்வரே. 7

நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக்
கோதிலா(து) உணர்சனற் குமரன் கூறிட
வாதரா யணமுனி வகுப்ப ஓர்ந்துணர்
சூதன்ஓ தியதுமூ ஆறு தொல்கதை. 8

சொல்லிய புராணமாம் தொகையுள் ஈசனை
அல்லவர் காதைகள் அனையர் செய்கையுள்
நல்லன விரித்திடு நவைகண் மாற்றிடும்
இல்லது முகமனால் எடுத்துக் கூறுமே. 9

பிறையணி சடைமுடிப் பெருமான்தன் காதைகள்
இறையும்ஓர் மறுவில் யாவும் மேன்மையே
மறைபல சான்றுள வாய்மை யேஅவை
அறிஞர்கள் நாடியே அவற்றைக் காண்கவே. 10

புவியினர் ஏனையர் புராணம் தேரினும்
சிவகதை உணர்கிலர் என்னில் தீருமோ
அவர்மயல் அரசனை அடைந்தி டார்எனில்
எவர்எவர் ஆக்கமும் இனிது போலுமால். 11

மங்கையோர் பங்குடை வான நாயகற்(கு)
இங்குள பலபுரா ணத்துள் எஃகவேல்
புங்கவன் சீர்புகழ் புராணம் ஒன்றுள(து)
அங்(கு)அதில் ஒருசில அடைவில் கூறுகேன். 12

புதுமயில் ஊர்பரன் புராணத்(து) உற்றிடாக்
கதைஇலை அன்னது கணிதம் இன்று(அ)ரோ
அதுமுழு(து) அறையாற்(கு) அமைதல் பாலதோ
துதியுறு புலமைசேர் சூதற்(கு) அல்லதே. 13

காந்தமா கியபெருங் கடலுள் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல்வந்(து) அவுணர்கள் யாரும் அவ்வழி
மாய்ந்திட அடர்த்தது மற்றும் கூறுகேன். 14

வேறு

ஏது(இ) லாக்கற்பம் எண்ணில சென்றன
ஆத லால்இக் கதையும் அனந்தமாம்
பேத மாகும்அப் பேதத்தி னுள்விரித்(து)
ஓது காந்தத்தின் உண்மையைக் கூறுகேன். 15

முன்பு சூதன் மொழிவட நூற்கதை
பின்பு யான்தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்
என்ப யன்எனில் இந்தமிழ்த் தேசிகர்
நன்பு லத்தவை காட்டும் நயப்பினால். 16

தோற்றம் ஈறுஇன்றித் தோற்றிய சூர்ப்பகைக்(கு)
ஏற்ற காதைக்(கு) எவன்பெயர் என்றிடின்
ஆற்றும் ஐம்புலத் தாறுசெல் மேலையோர்
போற்று கந்த புராணம் அ(து) என்பதே. 17

பகுதி கொண்டிடு பாக்களின் இனத்தினுள்
மிகுதி கொண்ட விருத்தத் தொகைகளால்
தொகுதி கொண்டிடு சூர்கிளை சாய்த்தவன்
தகுதி கொண்ட தனிக்கதை சாற்றுகேன். 18

செந்த மிழ்க்கு வரம்புஎனச் செப்பிய
முந்து காஞ்சியின் முற்றுணர் மேலவர்
கந்தன் எந்தை கதையினை நூல்முறை
தந்தி(டு) என்னத் தமியன் இயம்புகேன். 19

வெம்பு சூர்முதல் வீட்டிய வேல்படை
நம்பி காதையை நற்றமிழ்ப் பாடலால்
உம்பர் போற்ற உமையுடன் மேவிய
கம்பர் காஞ்சியில் கட்டுரைத் தேன்யான். 20