கடவுள் வாழ்த்து – கந்தபுராணம்

சிவபெருமான்

திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெருவந் தனைசெய்(து) அறிதற்குஅரும் பெற்றி எய்தி
அருவம் தனையும் உருவத்தையும் அன்றி நின்றான்
ஒருவன் தனது பதம்தன்னை உளத்துள் வைப்பாம். – (1)

ஊனாகி ஊனுள் உயிராய்உயிர் தோறும் ஆகி
வான்ஆதி ஆன பொருளாய்மதி ஆகி வெய்யோன்
தானாகி ஆண்பெண் உருவாகிச் சராச ரங்கள்
ஆனான் சிவன்மற்(று) அவன்நீள்கழற்(கு) அன்பு செய்வாம். – (2)

வேறு

பிறப்பதும் இறப்பதும் பெயரும் செய்கையும்
மறப்பதும் நினைப்பதும் வடிவம் யாவையும்
துறப்பதும் இன்மையும் பிறவும் சூழ்கலாச்
சிறப்புடை அரன்அடி சென்னி சேர்த்துவாம். – (3)

பூமலர் மிசைவரு புனிதன் ஆதியோர்
தாம்உணர்(வு) அரியதோர் தலைமை எய்தியே
மாமறை முதற்(கு)ஒரு வடிவம் ஆகியோன்
காமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம் 4

பங்கயன் முகுந்தன்நாம் பரம்என்(று) உன்னியே
தங்களில் இருவரும் சமர்செய்(து) உற்றுழி
அங்கவர் வெருவர அங்கி யாய்எழு
புங்கவன் மலரடி போற்றி செய்குவாம். 5

காண்பவன் முதலிய திறமும் காட்டுவான்
மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்தொடர்
பூண்பதுஇன் றாய்நயம் புணர்க்கும் புங்கவன்
சேண்பொலி திருநடச் செயலை ஏத்துவாம். 6

சிவசக்தி

செறிதரும் உயிர்தொறும் திகழ்ந்து மன்னிய
மறுவறும் அரன்இடம் மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவும் ஆக்கிய
இறைவிதன் மலரடி இறைஞ்சி ஏத்துவாம். 7

விநாயகக் கடவுள்

மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருள்எலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம். 8

வைரவக்கடவுள்

பரமனை மதித்திடாப் பங்கய ஆசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். 9

வெஞ்சினப் பரிஅழல் மீது போர்த்திடும்
அஞ்சனப் புகையென ஆல மாம் எனச்
செஞ்சுடாப் படிவமேல் செறித்த மாமணிக்
கஞ்சுகக் கடவுள்பொற் கழல்கள் ஏத்துவாம். 10

வீரபத்திரக் கடவுள்

அடைந்துஅவி உண்டிடும் அமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமகம் ஒடியத் தக்கனைத்
தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். 11

சுப்பிரமணியக் கடவுள்

இருப்பு அரம் குறைத்திடும் எஃக வேலுடைப்
பொருப்பர்அங்(கு) உணர்வுஉறப் புதல்வி தன்மிசை
விருப்பர் அங்(கு) அமர்இடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றுஅமர் சேயைப் போற்றுவாம். 12

சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீண்(டு)
ஈரலை வாயிடும் எஃகம் ஏந்தியே
வேரலை வாய்தரு வெள்ளி வெற்புஒரீஇச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம். 13

காவினன் குடிலுறு காமர் பொன்னகர்
மேவினன் குடிவர இளியச் சூர்முதல்
பூவினன் குடிலைஅம் பொருட்கு மாலுற
ஆவினன் குடிவரும் அமலன் போற்றுவாம். 14

நீரகத் தேதனை நினையும் அன்பினோர்
பேரகத்து அலமரும் பிறவி நீத்திடும்
தாரகத்(து) உருவமாம் தலைமை எய்திய
ஏரகத்(து) அறுமுகன் அடிகள் ஏத்துவாம். 15

ஒன்றுதொறு ஆடலை ஒருவி ஆவிமெய்
துன்றுதொறு ஆடலைத் தொடங்கி ஐவகை
மன்றுதொறு ஆடிய வள்ளல் காமுறக்
குன்றுதொறு ஆடிய குமரன் போற்றுவாம். 16

எழமுதி ரைப்புனத்(து) இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலம் கிடைப்ப முன்னவன்
மழமுதிர் களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவன் போற்றுவாம். 17

ஈறுசேர் பொழுதினும் இறுதி இன்றியே
மாறிலா(து) இருந்திடும் வளங்கொள் காஞ்சியில்
கூறுசீர் புனைதரு குமர கோட்டம் வாழ
ஆறுமா முகப்பிரான் அடிகள் போற்றுவாம். 18

திருநந்தி தேவர்

ஐயிரு புராணநூல் அமலற்கு ஓதியும்
செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாதன் நீட்டிய
கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம் 19

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள்

பண்டைவல் வினையினால் பாய்உ டுத்துஉழல்
குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே
வெண்திரு நீற்றொளி விளங்கச் செய்திடு
தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம். 20

திருநாவுக்கரசர்

பொய்யுரை நூல்சில புகலும் தீஅமண்
கையர்கள் பிணித்துமுன் கடல் அ கத்திடு
வெய்யகல் தோணியாய் மிதப்ப மேற்படு
துய்யசொல் அரசர்தாள் தொழுது போற்றுவாம். 21

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

வறந்திடு பொய்கைமுன் நிரம்ப மற்று(அ)வண்
உறைந்திடு முதலைவந்(து) உதிப்ப அன்னதால்
இறந்திடு மகன்வளர்ந்(து) எய்தப் பாடலொன்(று)
அறைந்திடு சுந்தரன் அடிகள் போற்றுவாம். 22

மாணிக்கவாசக சுவாமிகள்

கந்தம்ஒடு உயிர்படும் கணபங் கம்எனச்
சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்தொரு மூகையை மொழிவித்(து) எந்தைபால்
வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம். 23

திருத்தொண்டர்கள்

அண்டரும் நான்முகத்து அயனும் யாவரும்
கண்டிட அரியதோர் காட்சிக்(கு) அண்ணவாய்
எண்டகு சிவனடி எய்தி வாழ்திருத்
தொண்டர்தம் பதமலர் தொழுது போற்றுவாம். 24

சரசுவதி

தாஅறும் உலகெலாம் தந்த நான்முகத்
தேவுதன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவுதொ(று) இருந்திடும் நலம்கொள் வாணிதன்
பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம். – (25)