விநாயகர் காப்பு
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். – (1)
உச்சியின் மகுடம் மின்ன ஒளிர்தர நுதலின் ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகம்கொண்(டு) உற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக்(கு) அன்பு செய்வாம். – (2)
சுப்பிரமணியர் காப்பு
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. – (3)
நூற்பயன்
இந்திரர் ஆகிப் பார்மேல் இன்பமுற்(று) இனிது மேவிச்
சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி அதனில் சேர்வார்
அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேல்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்(து) ஓது வோரே. – (4)
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா(து) உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். – (5)