குன்றக்குடிப் பதிகம்

பூரணி பராசக்தி தேவியம் மைதரும்
புதல்வனே பொதிகை மலைவாழ்
புகலரிய குருமுனிக்கு முத்தமிழ் உரைத்திடும்
புலவனே புலவர் கோனே
காரணி கரைகண்ட ருக்குவுப தேசமது
கருதுமெய் ஞான குருவே
கண்களீ ராறுடைய கர்த்தனே சுத்தனே
கரியவண் டார் கடப்பம்
தாரணியு மார்பனே தமிழ்கொண்டு நக்கீரர்
தன்துயர் தவிர்த்தருள் செய்
சக்திவடி வேல்கரத் தணியுமுரு கையனே
தணையர்தந் தருள் புரிகுவாய்

கோரமிகு சூரசங் காரசிங் காரனே
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (1)

கந்தா சிலம்பா கரங்களீ ராறுடைய
காங்கேயா கார்த்தி கேயா
கருணைதரு முருகா குகாசண்மு காவிசா
காவேல ணிந்த குழகா
மந்தா கினிக்கினிய மைந்தா மயூரகிரி
வாசா வுயர்ந்த தோகை
மயிலேறு சேவகா அயில்போலு இருநயன
மாதுதெய் வானை கணவா
செந்தா மரைத்தெரிவை கேள்வனய னுந்துதிசெய்
திவ்யசர ணார விந்தா
சீலாமெய் யன்பரனு கூலா வெனக்குநற்
சிறுவர்தந் தருள் புரிகுவாய்

கொந்தார் கடப்பமலர் மாலையணி மார்பனே
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (2)

அமரா வதித்தலைவன் ஆனமுரு கையனே
ஆதி பன்னிரு கையனே
ஆறுமுகனே உமா தேவிமக னேயர
வணைச்செல் வனார் மருகனே
சமரா டியசூரர் பத்மமுத லசுரரைச்
சம்கார மேசெய்த வா
தாரணி வணங்குபரி பூரணா காரணா
சரவண பவா கடம்பா
எமராஜ னுக்குமஞ் சாமலெதிர் வார்த்தைகள்
இயம்பவா யது தந்திடும்
எந்தையே சந்ததிகள் தந்துனது தாளினை
ஏவல்கொண் டருள் புரிகுவாய்

குமரா குறிஞ்சிக்கும் இறைவனே குறவனே
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (3)

பாகனைய கிளிமொழித் தெய்வகுஞ் சரிமாது
பாகனே வாகனே பொன்
பங்கயத் தயனைமுன் சிறைவைத்த குமரகுரு
பரனே பரஞ் சோதியே
நாகரிக மானநவ வீரர்க்கு முன்னவா
நாக முகவன் பின்னவா
நலமான அருணகிரி யானையாட் கொண்டகுரு
நாதனே வேத முதலே
மாகனக வரைமுதற் குன்றுதோ ராடல்புரி
மயில்வா கனக் கடவுளே
வரதனே குகனே சண்முகனே எனக்குநல்
மைந்தர்தந் தருள் புரிகுவாய்

கோகனக மாதுமண வாளன்மகிழ் மருகனே
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (4)

தஞ்சமென அன்பினுடன் வந்தடையு மெய்யன்பர்
தமையா தரித்தருள் செய்
சண்முகா சதகோடி சூர்யப்ர காசனே
சந்த்ர வதனச் சுந்தரா
கஞ்சமலர் வாழுமுக மொருநாலும் மிருநாலும்
கண்ணுமுள வேத னுக்குங்
காமமிகு காமன் தனக்குமுயர் மைத்துனா
கலச முனிவன் கும்பிடுஞ்
செஞ்சரண பங்கேரு கர்த்தனே சுத்தனே
செல்வச் சிகண்டி மலைவாழ்
தேவாதி தேவனே என்றனுக் கறிவுடைய
சிறுவர்தந் தருள் புரிகுவாய்

குஞ்சர முகற்கிணைய பச்சைமயில் வாகனா
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (5)

விண்டலத் தினின்மேவு முப்பத்து முக்கோடி
விண்ணவரும் முனி வோர்களும்
வெள்ளைவா ரணமீதில் ஏறுபுலி சாயுதனும்
விஞ்சையரும் அள கேசனும்
மண்டலத் தவரும்நீள் பாதலத் தவருமுடி
மன்னரும் விளங்க நன்னாள்
மறையுமறை யோனுமம் புலியும் ஆதித்தனொடு
மதனனும் பேய் முலைப்பால்
உண்டவச் சுதனுமலர் தூவித்தினம் பணியும்
உபய சரணார விந்தா
உன்னையே நம்பினேன் என்றனுக் குச்சிறுவர்
உதவியே அருள் புரிகுவாய்
கொண்டலொத் திடுகருங் குழலுநூல் இடையுமுள
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே. (6)

முடியாறு டைக்குமர குருபரா சதுர்வேத
முதல்வனே கருணா நிதி
மும்மதம் பொழிவேழ முகவன் தனக்கிளைய
முருகேச னேபரவை சூள்
படியார் வணங்குபொற் பாதார விந்தனே
படஅரவின் மேல் அடிக்கும்
பச்சைமால் மருகனே நெக்குநெக் குருகியே
பக்தியுட னேதுதி செயும்
அடியார் உளத்தினில் குடிகொண்டி ருக்குமென
அப்பனே ஒப்பி லாத
ஐயனே துய்யனே அறிவுடையசிறுவர்தந்
தருள் புரிகுவாய் சேவலம்

கொடியா கடப்பமலர் மாலையணி மார்பனே
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (7)

சுந்தர நிறைந்திலகு கந்தவே ளேபால
சுப்ர மண்யக் கடவுளே
துரியவடிவே அரிய பெரியபொரு ளேபரஞ்
சோதியே கோதி லாத
மந்திர கிரிக்குநிகர் பன்னிரு புயத்தனே
மாயூர கிரி வாசனே
மாசிலா மணியே மிகு கருணைவெள்ளமே
வளர்சேவ லங் கொடியனே
அந்தரத் துறையா யிறங்குமால் மருகனே
அகிலமுழு துந் துதிக்கும்
ஆதியே சோதியே அறிவுடைய சிறுவர்தந்
தருள் புரிகுவாய் மஞ்செனுங்

கொந்தளக மும்பவள வாயும்வேல் விழியுமுள
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (8)

வம்பனா கியசூர பத்மனொடு சிங்கமுகன்
வலியபுய பானு கோபன்
வஞ்சக் ரவுஞ்சன்முத லாவசுரர் தமையெலாம்
வடிவே லினால் மடித்து
உம்பரா னவர்கள்சிறை மீட்டும் இந்திரனுக்கு
உயர்ந்தமணி முடி தரித்து
ஓதரிய வானாடு குடியேற்றி வைத்தஜய
உல்லாச மிகு வாசனே
செம்பவள வாயனே அன்பர்கள் சகாயனே
தேடுதற் கரிய பொருளே
தேவாதி தேவனே யென்றனுக் கறிவுடைய
சிறுவர்தந் தருள் புரிகுவாய்

கும்பமுனி வர்க்கருள் புரிந்த குமரேசனே
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (9)

திருவே உயர்ந்நவ ரசமிகுந் தேனே
தெவிட்டாத தெள் ளமுதமே
தித்திக்கும் மதுரமுக் கனியே கரும்பே
சிறந்த முத்தே ரத்னமே
அருவே விளங்கிவள அரியவுரு வேநல்ல
அகண்ட வடிவே அப்பனே
ஆதிநடு முடிவாகி எங்கும்நிறை சோதியே
அன்பர் வேண்டிய தளிக்கும்
தருவே சிகண்டிமலை தனில் வீற்றிருக்கின்ற
சாமியே முத்தி வித்தே
சண்முகா சரவண பவாகடம் பாசிறுவர்
தந் தருளுவாய் சிவாய

குருவே மயூரவா கனஅகில நாயகா
குறவள்ளி மண வாளனே
கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பால
குன்றை மாநகர் வேலனே (10)