பெரியநாயகி அம்மன்

அன்னைசக்தி அனைவரிலும் அரியநாயகி – அவள்
அனைத்துலகும் ஆளுகின்ற பெரியநாயகி
என்னையாளும் ஏகசக்தி இனியநாயகி – இவள்
எல்லோலையும் வாழவைக்கும் பெரியநாயகி (அன்னை)

பிள்ளைவேலன் குடியினிலே கொலுவிருப்பாளாம் – பிற
பிள்ளைகளும் வாழவென்றே தவமிருப்பாளாம்
பள்ளத்தூரில் பத்துநாட்கள் பவனிவருவாள் – அவள்
எள்ளத்தனை இடர்வரினும் துணையும் வருவாள் (அன்னை)

பாளையநாட் டெல்லையிலே நீயேகாட்சி – இந்த
பார்முழுவதும் பரவுதம்மா உந்தனாட்சி
ஆலவாயின் நகரையாளும் அன்னை மீனாட்சி – அடி
ஆரமுதே காஞ்சியிலே ஆளுங்காமாட்சி (அன்னை)

காந்திமதி காட்சிதிரு நெல்லையிலே
காசிவிசாலாட்சிவட எல்லையிலே
சாந்திநெறி மாறிசத்ரு சங்காரி – உருமாறி
சமயபுர மாரிதிரு வேற்காட்டில் கருமாரி (அன்னை)

காமதேனு வாகனத்தில் காட்சிதருவாள் – நல்ல
கனிவுடனே காத்துநிதம் ஆட்சிபுரிவாள்
தேமதுரக் கல்விதரு கலைமகளாவாள் – இவள்
தேடிவந்து வளங்கொழிக்கும் திருமகளாவாள் (அன்னை)

தேரிலேறி திருவீதி பவனிவருவாள் – தினம்
தேடிவரும் நல்லவர்க்கு நவநிதிதருவாள்
மாரிமக மாயியிவள் மங்களந்தருவாள் – மனை
மாட்சியொடு ஆட்சிசெய்து இங்கிதம் புரிவாள் (அன்னை)

கோபங்கொண்ட போது இவள் குங்குமக்காளி – குறை
கண்டவுடன் களைந்திடுவாள் பேருபகாரி
பாவங்களைப் போக்கிடுவாள் பரோபகாரி – பதம்
பணிவோர்க்கு அருள்தருவாள் ஆனந்தவாரி (அன்னை)

பொன்னழகி பூவழகி பொட்டழகியாம் – கயல்
கண்ணழகி செங்கனிவாய் உதட்டழகியாம்
உன்னழகே ஒளிமயமாம் அரியநாயகி – அன்பு
பெண்ணழகே பேரொளியே பெரியநாயகி

சோலை ராமச்சந்திரன் (பள்ளத்தூர்)

Singer – Deepa Meiammai