திருப்புகழ் 62 தண்டை அணி (திருச்செந்தூர்)

முருகா!
தேவரீரைக்கண் குளிரக் கண்டு வணங்க அருள்

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் …… தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் …… கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் …… றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் …… சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் …… சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் …… கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் …… சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் …… கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் …… தம்பிரானே.

பதம் பிரித்தல்

தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் …… கொஞ்சவே, நின்

தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைந்து நின்று …… அன்புபோலக்

கண்டுஉற கடம்புடன், சந்த மகுடங்களும்,
கஞ்சமலர் செங்கையும், …… சிந்துவேலும்,

கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்
கண்குளிர என்தன் முன் …… சந்தியாவோ?

புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிர் அண்டமும்
பொங்கி எழ வெம் களம் …… கொண்டபோது,

பொன்கிரி என அம் சிறந்து, எங்கினும் வளர்ந்து முன்,
புண்டரிகர் தந்தையும் …… சிந்தைகூரக்

கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன்
கொஞ்சி நடனம் கொளும் …… கந்தவேளே!

கொங்கை குற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுனி கும்பிடும் …… தம்பிரானே.