மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன (1)
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ
காக நாடி வகைவகை கட்டும
ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன (2)
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப
சோதி யாடை வடிவுபெ றப்புனை
திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன (3)
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக
லாப கோப மயில்வத னத்துவி
ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன (4)
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி
தீயின் வாயின் மறுகவி திர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன (5)
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி
சால நீல மலிபரி சைப்படை
கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின (6)
மனகுண சலன மலினமில் தூயஅ தீதசு
காநு பூதி மவுனநி ரக்ஷர
மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன (7)
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச
மூூக ராக மதுபம்வி ழச்சிறு
சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன (8)
மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர
சேனை தேடி விததிபெ றச்சில
கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன (9)
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி
சாசு போத மிகுதொனி பற்றிமு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன (10)
விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும்
லீலை யாக விமலச லத்தினை
விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன (11)
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர்கு லக்குலி
சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன (12)
விகசித தமர பரிபுர முளரி தொழா அபி
ராம வேடர் விமலைதி னைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன (13)
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ரஅ
லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின (14)
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு
கோட ளாவி ம்ருகமத கற்புர
குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன (15)
வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன (16)
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன (17)
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகும ணிக்கன
விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன (18)
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின (19)
எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ
தார தீரம் என உரை பெற்றஅ
டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின (20)
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனமென ஒத்துல
கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன (21)
இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி
பார கோர இவுளிமு கத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன (22)
இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை
மார்பு பீறி அவனுதி ரப்புனல்
செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன (23)
எவையெவை கருதில் அவையவை தருகொடை
யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன (24)
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை யுடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன (25)
அகிலமும் எனது செயலல திலையென யானென
வீறு கூறி அறவுமி குத்தெழும்
ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன (26)
அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்கபி
லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன (27)
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன்
வானை ஆள அரசுகொ டுத்தப
யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன (28)
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சைய
லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன (29)
அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி
மாலை யாக அடிமைதொ டுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன (30)
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன் (31)
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ
நேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ச லென்ப்ரசண்ட வாகைப் புயங்களே. (32)
பதம் பிரித்தது
வசை தவிர் ககன சர சிவ கரண மகா வ்ருத
சீல சால வர முநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன (1)
மணி வட மழலை உடை மணி தபனிய நாண் அழகாக
நாடி வகை வகை கட்டு மருங்குடன்
பொருந்து ரீதிக்கு இசைந்தன (2)
வருணித கிரண வருணித வெகு தருண ஆதப
சோதி ஆடை வடிவு பெறப் புனை
திண் செழுங் குறங்கின் மேல் வைத்து அசைந்தன (3)
வளை கடல் உலகை வலம் வரு பவுரி விநோத
கலாப கோப மயில் வதனத்து
விளங்கும் அங்குசம் கடாவிச் சிறந்தன (4)
வரை பக நிருதர் முடி பக மகர மகோததி
தீயின் வாயின் மறுக விதிர்த்து அயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன (5)
மதி என உதய ரவி என வளை படு தோல்
விசால நீல மலி பரிசைப் படை
கொண்டு நின்று உழன்று சாதிக்க முந்தின (6)
மன குண சலன மலினம் இல் தூய அதீத
சுகாநுபூதி மவுன நிரக்ஷர
மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன (7)
வகை வகை குழுமி மொகு மொகு மொகு என அநேக
சமூக ராக மதுபம் விழச் சிறு
சண்பகம் செறிந்த தாரில் பொலிந்தன (8)
மிசை மிசை கறுவி வெளி முகடு அளவு நிசாசர
சேனை தேடி விததி பெறச் சில
கங்கணம் கறங்க மீதில் சுழன்றன (9)
வெருவுவ வெருவ எரி சொரி விழி உள பூத
பிசாசு போத மிகு தொனி பற்றி
முழங்கு விஞ்சு கண்டை வாசிக்குக் கை கொண்டன (10)
வித மிகு பரத சுர வனிதையர் கணம் மேல் தொறும்
லீலையாக விமல சலத்தினை
விண்டு திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன (11)
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர் குலக் குலிசன்
பயந்த செங் கை ஆனைக்கு இசைந்தன (12)
விகசித தமர பரிபுர முளரி தொழா அபிராம
வேடர் விமலை தினைப் புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன (13)
விதிர்தரு சமர முறி கர கமல நக ஆயுத
கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித்து இலங்கின (14)
விரகு உடை எனது மனதுடன் அகில் பனி நீர் புழுகு
ஓடளாவி ம்ருகமத கற்புர
குங்குமம் கலந்து பூசித்து உதைந்தன (15)
வினை புரி பவனி தொழுது அழுது உருகிய கோதையர்
தூது போக விடு மது பக்ஷண
வண்டினம் திரண்டு சூழப் படிந்தன (16)
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி
தனாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சுரம் தெரிந்து வீணைக்கு இசைந்தன (17)
இறுதியில் உதய ரவி கண நிகர் என ஆறு இரு
காது தோயும் இலகு மணிக் கன
விம்ப குண்டலங்கள் மேவிப் புரண்டன (18)
எதிர்படு நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ்
நாக மேகம் இடிபட மல் பொரு
திண் சிலம்பு அடங்க மோதிப் பிடுங்கின (19)
எழுதரும் அழகு நிறம் மலி திறல் இசையாக
உதார தீரம் என உரை பெற்ற
அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின (20)
இருள் பொரு கிரண இரணிய வட குல பாரிய
மேரு சாதி இனம் என ஒத்து
உலகங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன (21)
இயன் முநி பரவ ஒரு விசை அரு வரையூடு அதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன (22)
இப ரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை
மார்பு பீறி அவன் உதிரப் புனல்
செங் களம் துளங்கி ஆடிச் சிவந்தன (23)
எவை எவை கருதில் அவை அவை தரு கொடையால் மணி
மேக ராசி சுரபி அவற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன (24)
அசைவு அற நினையும் அவர் பவம் அகலவே மேல் வரு
கால தூதரை உடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன (25)
அகிலமும் எனது செயல் அலது இலை என யான் என
வீறு கூறி அறவும் மிகுத்து எழும்
ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன (26)
அனல் எழு துவசம் உடு குலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்க
பிலங்களும் குலுங்க ஆலித்து அதிர்ந்தன (27)
அடல் நெடு நிருதர் தளமது மடிய வலாரி தன்
வானை ஆள அரசு கொடுத்த
பயம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன (28)
அடவியில் விளவு தளவ அலர் துளவு குரா மகிழ்
கோடல் பாடல் அளி முரல் செச்சை
அலங்கல் செங் கடம்பு நேசித்து அணிந்தன (29)
அரியது ஓர் தமிழ் கொடு உரிமையொடு அடி தொழுது
ஏகவி மாலையாக அடிமை தொடுத்திடு
புன் சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன (30)
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன் (31)
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்
அநேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்சல் என் ப்ரசண்ட வாகைப் புயங்களே. (32)