2 – தேவேந்திர சங்க வகுப்பு

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி – 1

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை – 2

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை – 3

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி – 4

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் – 5

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் – 6

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை – 7

எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி – 8


கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் – 9

கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் – 10

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு – 11

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் – 12

அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் – 13

அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் – 14


அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் – 15

அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே – 16

பதம் பிரித்தது

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதி கொடு
சாடு ஓங்கு நெடுங் கிரி ஓடு ஏந்து பயங்கரி – 1

தமருகம் பரிபுரம் ஒலி கொடு நட நவில் சரணிய சதுர் மறை
தாது அம்புய மந்திர வேதாந்த பரம்பரை – 2

சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாம அங்குச மென் திரு தாள் அந்தர அம்பிகை – 3

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி – 4

இரண கிரண மடமயில் ம்ருகமதம் புளகித இளமுலை இள
நீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள் – 5

இறுகிய சிறுபிறை எயிறு உடை எம படர் எனது உயிர் கொள வரின்
யான் ஏங்குதல் கண்டு எதிர் தான் ஏன்றுகொளும் குயில் – 6

இடு பலி கொடு திரி இரவலர் இடர் கெட விடும் மன கர தல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை – 7

எழுதிய படமென இருள் அறு சுடர் அடி இணை தொழும் மவுனிகள்
ஏகாந்த சுகந்தரு பாசம் அங்குச சுந்தரி – 8

கரணமும் மரணமும் மலமொடு உடல் படு கடு வினைகெட நினை
கால அந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சு உமிழ் – 9

கனல் எரி கண பண குணமணி அணி பணி கன வளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசு ஆம் படி கொண்டவள் – 10

கனை கழல் நினையலர் உயிர் அவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெரும் திரு – 11

கரை பொழி திருமுக கருணையில் உலகு எழு கடல் நிலை பெற வளர்
காவு ஏந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன் – 12

அரண் நெடு வட வரை அடியொடு பொடி பட அலை கடல் கெட அயில்
வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன் – 13

அறுமுகன் ஒருபதோடு இரு புயன் அபினவன் அழகிய குறமகள்
தார் வேய்ந்த புயன் பகை ஆம் மாந்தர்கள் அந்தகன் – 14

அடல் மிகு கட தட விகடித மத களிறு அனவரதமும் அகலா
ஆமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில் – 15

அதிபதி என வரு பொரு திறல் முருகனை அருள் பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்தர சங்கமே – 16