மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் – 1
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் – 2
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் – 3
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் – 4
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் – 5
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் – 6
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் – 7
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் – 8
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் – 9
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் – 10
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் – 11
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் – 12
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் – 13
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் – 14
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் – 15
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே – 16
பதம் பிரித்தது
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கருத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி
விழிக்கு நிகராகும் – 1
பனைக்கை முக படம் கரட மதம் தவள
கச(ம்) கடவுள் பதத்து இடு நிகளத்து முளை
தெரிக்க அரம் ஆகும் – 2
பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக்குருகி வரைக் குகையை
இடித்து வழி காணும் – 3
பசித்து அலகை முசித்து அழுது முறைப் படுதல்
ஒழித்து அவுணர் உரத்து உதிரம் நிணத்தசைகள்
புசிக்க அருள் நேரும் – 4
சுரர்க்கும் முனிவர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும் – 5
சுடர் பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்குமதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிர் பிரபை வீசும் – 6
துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அற களையும்
எனக்கு ஓர் துணையாகும் – 7
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும்
அறத்தை நிலை காணும் – 8
தருக்கி நமன் முருக்வரின் எருக்கு மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த
இறை கழற்கு நிகராகும் – 9
தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உண
அழைப்பதென மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும் – 10
தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து
இரவு பகல் துணையதாகும் – 11
சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை என சிகையில்
விருப்பமொடு சூடும் – 12
திரைக்கடலை உடைத்து நிறை புனர் கடிது
குடித்து உடைப்பை அடைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும் – 13
திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்க அற
விசைத்து அதிர ஓடும் – 14
சினத்தவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத்தலைகள் சிரித்து எயிறு கடித்து
விழி விழித்து அலற மோதும் – 15
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்துரை கருத்தன்
மயில் நடத்து குகன் வேலே – 16